குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி?
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!!!
1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம்.
ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.
2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.
4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.
5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.
6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.
7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.
8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.
tamil.boldsky.com
—
குழந்தைகளும் முரட்டுத்தனமும்
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள்கூடப் பேசுவார்கள்.
குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனை யிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.
கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம்.
பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான்.
இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.
ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.
ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது.
விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும்.
கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.
குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும்.
குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.
ரவி சாமுவேல் – -கட்டுரையாளர், உளசிகிச்சையாளர் தி இந்து (ஆங்கிலம்)