மனமே உலகின் முதல் கணினி!

ஒவ்வொரு சப்தத்திற்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு சப்தத்திற்கும் அவசியமும் அர்த்தமும் உண்டு. ஒவ்வொரு சப்தமும், நமக்கும் மற்றவர்க்கும் இடையே ஒருவித தாக்கத்தை உருவாக்குவதும் உண்டு. சப்தங்கள் நமக்கும் மற்றவருக்கும் எப்போதும் ஏதோ ஒரு செய்தியை சொல்லியே செல்கிறது. இவை அனைத்தையும் நாம் விழிப்புடன் கேட்டிருக்கிறோமா?

ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் இது. இரண்டு மனிதர்கள், அவர்களது குரலை அவர்களால் ஆன உச்ச நிலைக்கு உயர்த்திக் கடிந்து கொண்டிருந்தார்கள். இருவரும் மிக அருகில் சென்றிருந்தபோதும் அவர்கள் குரல் மட்டும் ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கேட்கும் அளவு பயம் செய்தது. அவர்கள் உடலால் தொட்டுக் கொள்ளவில்லையே தவிர வார்த்தைகளால் மிகுந்த கோபத்தோடு மோதிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, சொல்கிற விதமும் வார்த்தைகளும் மட்டுமே அவர்களை மற்றவர்களை விட உயர்ந்தவரென்று நிரூபிக்க சப்தத்தையும், வார்த்தையின் ஏற்ற இறக்கங்களையும், குரலையும், குரல் தொனியையும் மட்டுமே சாதனங்களாக பயன்படுத்துவது ஆச்சரியமாகவேயிருக்கிறது. பிறர்மீது அதிகாரம் செலுத்தும் நோக்கத்தில் மட்டுமே, நம்மில் பலரும் குரலின் தொனியை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றி எத்தனை வகையான சப்தங்கள் இருக்கிறது என்பதைக் கவனிக்கத் துவங்குகிறபோதுதான் அதன் பல்வேறு பரிணாமங்களை நம்மால் உணரமுடியும்.

வாடிக்கையாளருக்கு, நம்மைப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தொனி, விற்பனையாளருக்கு விளக்கம் சொல்லி வாணிபம் நடத்த வேண்டுமே என்ற தொனி, தந்தையிடம் அறிவுரை தொனியும் அம்மாவிடம் அக்கறையும் நண்பர்களின் புரிதலும் உறவினர்களிடம் ஊக்கமும் இன்னும் தெரிந்தும் தெரியாமலும் நம்மை தொடரும் குரல்கள் பல. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொனியும் அதற்கேற்றாற்போல் வார்த்தை களையும், ஏற்ற இறக்கங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

நீங்கள் எந்தக் குரலை எந்தத் தொனியை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்? அது உங்கள் வளர்ச்சியின் அடுத்தபடியை அடைய எப்படி உங்களை உந்திக் கொண்டிருக்கிறது?

புரோகிராம் 1

விவாகரத்தான ஒரு பெண் என்னிடம் கூறினார். “அவர் சொன்னதை நான் மறக்கவே மாட்டேன். அவர் என் கணவர். இருந்தாலும் அன்று அவர் பேசிய எதையும் என்னால் கேட்கவே முடியவில்லை. அவர் குரல் முழுவதும் கோபமும், கடுமையும் நிறைந்திருந்தது. என் உணர்வுகளை அவர் தவறாகப் புரிந்துகொண்டதே அதற்கு காரணம். அவரிடம், அன்பு, அக்கறை, காதல் எதுவும் இல்லை. அவர் குரலில் எப்போது அந்தக்கோபம் தொனித்ததோ, அந்த நொடி முதல் நான் அவரை விட்டு விலகிவிட்டேன். நான் அவரை வெறுக்கிறேன்” என்று அந்தப் பெண் கூறியதில் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய இரண்டு விஷயங்கள். ஒன்று, கணவர் பேசிய தொனிதான் விவாகரத்திற்கு வித்திட்டது என்று அந்தப்பெண் கூறியது. மற்றொன்று, அந்தப் பெண் விவாகரத்து ஆனபின்பும்கூட அந்தத் தொனியையும், அவர் கூறிய வார்த்தைகளையும் தன்னோடு சுமந்து வருவது. நாம் மனதில் எதை சுமக்கிறோமோ அதுவே நாம் வெளியே எப்படி பிரதிபலிக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்தப் பெண் உபயோகமற்ற ஓர் ஒலியையும், தொனியையும் தன்னோடு சுமந்து அதை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்துகொண்டே இருந்தார். உபயோக மற்றவர்களை தொடர்ச்சியாக நினைவு கூர்தலே அவரை விவாகரத்து வரை இட்டுச் சென்றிருக்கிறது. அவர் கணவர் அர்த்தமான, அன்பான, அக்கறையான வார்த்தைகளை காதல் தொனிக்க பலமுறை அந்தப் பெண்ணிடம் பேசியிருப்பார். ஆனால் அந்தப் பெண், கோபமான தொனியை மட்டுமே சுமக்க முடிவு செய்து விட்டார். அதுவே அந்த உறவில் விரிசல் விழ காரணமாய்ப் போனது.

குரலின் தொனி, தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள், ஏற்ற இறக்கங்கள் இவையே ஒரு முடிவை தீர்மானிக்கின்றன. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என் பந்துகள் ஒவ்வொன்றும் பவுண்ட்ரியை கடக்கும்போதும் ஆர்ப்பரிக்கும் கரவொலியை மீண்டும் நினைவு கூர்ந்து கொள்வேன்” என்றார். இந்தக் கூற்றின் மூலம் அவர் வெற்றியின் பின்புலம் எது என்பதை நம்மால் உணர முடிகிறது.

இப்போது சொல்லுங்கள். நீங்கள் எந்த வார்த்தைகளை, எந்த ஒலியை, எந்த தொனியை, உங்களுக்குள் இத்தனை நாளும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் சுமக்கும் வார்த்தையும் தொனியும் உங்கள் வெற்றியின் அடுத்த எல்லையைத் தொட உங்களை ஊக்கப் படுத்துகிறதா?

புரோகிராம் 2

ஒரு யோகியிடம் தன்னிடம் இருந்த சீடர்களுக்கு ஒரு பயிற்சியை அளித்தார். “நீங்கள் அனைவரும் உங்கள் இடதுகையை இடமிருந்து வலமாக அசைக்க வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைக் கூறுங்கள் என்றார். முதலில் சீடர்கள் குழம்பினாலும் பின்பு அந்தப் பயிற்சியை செய்யத் துவங்கினார்.

ஒவ்வொருவராக கையை இடமிருந்து வலமாக அசைக்க முயற்சித்தும் அவர்களால் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு சீடர் மட்டும் மற்ற அனைவரிடத்தி லிருந்தும் ஒதுங்கியிருந்தார். சிறிது நேரத்திற்குப்பின் மிகுந்த தயக்கத்துடன் அவர் யோகியிடம் வந்து, நான் நீங்கள் கூறியதை முயற்சித்தேன். பெரும் காற்றினலைகள் என் முகத்தை அறைந்து சென்றதை என்னால் உணர முடிந்தது. என் விரல்களின் இடுக்கில் பயணம் செய்த காற்றின் ஒலியை என்னால் கேட்க முடிந்தது. எனது இடது தோள் பட்டையில் கிலிக் என்ற சொடுக்கு முறிந்த ஓசையைக் கூட உள்வாங்க முடிந்தது. என் நெற்றியில் அசைந்த ஒரு மயிர்க் காலின் சப்தத்தையும் கேட்டேன் என்று அந்த சீடர் சொன்னவுடன், யோகி சட்டென்று எழுந்து அந்த சீடரின் முன் தலை வணங்கினார்.

நம்மைச் சுற்றி பல வகையான ஒலிகள் நிறைந்து உள்ளன. ஒன்று அவை நமக்கு ஊக்கம் தருகிறது. இல்லை தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது.

நம் அலைபேசிக்கு வைத்து இருக்கும் ரிங்டோன் நமக்கு மிக இனிமையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டலாம். இது நம்மை பற்றிய ஒரு தவறான பிம்பத்தையே ஏற்படுத்தும். நாம் அமர்வது, நிற்பது, நடப்பது, புன்னகைப்பது, பேசுவது, பாத்திரங்களை கையாள்வது, நம் வண்டியின் ஸ்டார்ட்டரை உதைப்பது, கார் கதவைத் திறப்பது, மூடுவது, நம் பொருள்களை வைக்கும் விதம், கேட்கும் இசை, அதைக் கேட்கும் ஒலியின் அளவு என அனைத்துமே நம்மைப்பற்றிய பிம்பத்தை உருவாக்கி கொண்டேயிருக்கின்றன.

நீங்கள் உங்களைச்சுற்றி உருவாக்கியிருக்கும் ஒலிகளுக்கு என்றாவது முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களா?

புரோகிராம் 3

என் பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும். அந்த மனிதர் மிகவும் உற்சாகமாகவும், சாமர்த்தியமாகவும், இலக்கை நோக்கிய எண்ணக்குவிப்பு மிக்கவராகவும் இருந்தார். இருந்தாலும் பயிற்சி வகுப்பில் இருந்த பெரும்பாலான பங்கேற்பாளர்கள் அவரை வெறுப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கான காரணத்தை கண்டறிகையில் மிஞ்சுவது வெறும் ஆச்சரியம்தான். அந்த மனிதர் பேசும் குரலொலி மிக அதிகமாக இருப்பதே காரணம். அவர் தேர்ந்திருக்கும் அந்தத் தொனி மரியாதைக் குறைவின் பிரதிநிதி. ஒருவேளை இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தான் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை யூகித்து இந்தச் செய்தியை அவர் பார்வைக்கு எடுத்துச் சென்றேன்.

பயிற்சி வகுப்பில் அனைவர் முன்னும் எழுந்து நிற்கச் சொன்னேன். அவர் எழுந்து நிற்கவும், அனைவரையும் நோக்கி, அவர் குரலுக்கு ஒன்றுக்கும் பத்திற்கும் இடையே ஒரு மதிப்பெண் போடச் சொன்னேன். இங்கே 10 மதிப்பெண் என்பது மிகமிக உரத்த உபயோகமற்ற கடுமையான குரல். 1 என்பது மிகவும் பவ்யமான ஆனால் சப்தமே இல்லாமல் கேட்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் குரல். இதற்கிடையே ஏதேனும் ஒரு மதிப்பெண்ணை மதிப்பிடுமாறு அனைவரையும் கேட்டவுடன், பெரும் பாலானவர்கள் அவருக்கு அளித்த மதிப்பெண் 8. இதை அறிந்த அந்த மனிதர் மிகுந்த வியப்படைந்தார். ஆனால் அனைத்தையும் நேர் மறையாக உற்சாகத்துடனும் எடுத்துக்கொள்ளும் அந்த நபர், இந்த பின்னூட்டத்தை மிக கவனமாக எடுத்துக்கொண்டு வெவ்வேறு குரல் தொனிகளை முயற்சித்து பின் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு பிடித்தமான குரல் தொனியை தேர்வு செய்தார். சில மாதங்களுக்குப்பின் அவர் எனக்கு கொடுத்த பின்னூட்டம், “பெற்றோர், உறவினர், உடன் பிறந்தவர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் நான் பேசும் இந்தத் தொனி மிகவும் பிடித்திருக்கிறது. இது எங்களுக்குள் புதிய புரிதலையும், உறவுகளில் இன்னும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில் நான் நினைப்பதுண்டு. மற்றவர் களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை. நம்மை யாரும் புரிந்து கொள்வதில்லையே என இப்போது உணர்கிறேன் குற்றவாளி நான்தான். என் அதீத குரலொலிதான் ” என்றார்.

உங்கள் சுயமதிப்பீட்டில் 1 முதல் 10இல் உங்கள் குரலுக்கு என்ன மதிப்பெண்?

புரோகிராம் 4

நான் ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் இப்படித்தான் பேசுவார். “நான் உங்கள் இடத்திற்கு 10 மணிக்கு வந்தேன். நீங்கள் அங்கு இல்லை.” அவர் என்ன கூறினார் என்று உங்களுக்குப் புரிந்ததா? இதுதான் கருத்துப்பரிமாற்றத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இடைவெளி இல்லாமல் பேசுவது. நம் பேசும் வேகத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் உபயோகிக்கும் வார்த்தையும் கணக்கில் கொள்வதை “ழ்ஹற்ங் ர்ச் ள்ல்ங்ங்ஸ்ரீட்” என்கிறோம்.

இதற்கு அழகான ஓர் கூற்று உண்டு. கருத்துப் பரிமாற்றம் என்பது இசை போன்றது. அது உயிர் பெறுவது கேட்பவர் அந்த இசையின் சாரத்தை புரிந்து இசைப்பதில் அல்ல. ஆனால் நம்மில் பலரும் நாம் பேசிய உடனே நாம் கூற வந்த செய்தி முழுமையடைந்துவிட்டதாக கருதிக் கொள்கிறோம். இந்தப் பழக்கத்தை நமக்கு யார் கற்றுக் கொடுத்தது என்பதே புரியவில்லை. ஒரு கருத்தை பரிமாறுகிற போது கேட்பவருக்குத்தான் புரியவேண்டுமே அன்றி சொல்பவருக்கு அல்ல. இடைவெளி இல்லாமல் பேசுவது நம்மைக் கேட்கும் பலருக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். இடைவெளி இல்லாமல் பேசுகிற போது கேட்பவர்கள் அவருக்கு புரிந்தவாறு பல்வேறு வகையில் அந்தக் கருத்தை எடுத்துக் கொள்வார்கள். அதில் அவருக்கு சந்தேகம் வந்தால் கூட கேட்பதற்கு நாம் பேசும் பேச்சில் இடைவெளி இருக்காது.

நான் சுவாரஸ்யமான சில உரைகளை கேட்டிருக்கிறேன். அதில் மிக அழகாக ஒவ்வொரு வாக்கியத்திற்கும் வார்த்தைக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும் இடைவெளி விட்டு பேசி இருப்பார்கள். பேச்சியினிடையே நாம் கொடுக்கும் அந்த நிறுத்தம் (ல்ஹன்ள்ங்) தான் நாம் சொல்ல வருவதை கேட்பவருக்கு முழுமையாக கொண்டு சேர்க்கிறது. என்னைப் பொறுத்தவரை, நம்பேச்சின் இரண்டாம் பாகத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்ற தாக்கத்தை ஏற்படுத்துவது, நாம் சரியான இடத்தில் கொடுக்கும் நிறுத்தங்கள்தான். நாம் சொல்வது கேட்பவருக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்று நம்மில் எத்தனை பேர் நிறுத்தத்தை பயன்படுத்துகிறோம்?

பெரும்பாலான மனிதர்கள் நாம் பேசுவதின் உள்ளடக்கத்தை மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர மிக வேகமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. நாம் எதைச் சொல்ல நினைக்கி றோமோ அதற்கு மேலும் மெருகூட்டுவது, தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவதுதான். தேவையற்ற வார்த்தைகளை அழிப்பதற்கும் தாக்கம் மிகுந்த வார்த்தைகளை நுழைப்பதற்கும் துல்லிய மான பேச்சுக்கு நீண்ட சிந்தனை தேவை. அதுவே ஓர் அழகான உரையாடலை ஏற்படுத்துகிறது. எனக்கு இப்போதும் நினைவு உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு பத்து வயதுக்குழந்தை என்னிடம் சொன்னது, நீங்கள் (ல்ஹன்ள்ங்) ஒரு நல்ல நண்பர் என்று. இதில் எந்த தேவையற்ற வார்த்தைகளும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் மிகத் துல்லியமாகவும், மிகுந்த கவனத்துடனும் தேவையான நிறுத்தங்களுடனும் சொல்லப் பட்டவை. மிக மெல்லிய குரலில் வந்த அந்த வார்த்தைகள் என் நினைவில் முழுவதுமாக ஊடுருவி என் நினைவில் இல்லாத பகுதியிலும்கூட தங்கிவிட்டது.

நீங்கள் துல்லியமாக பேசுகிறீர்களா? இல்லை. வேகமாகப் பேசுகிறீர்களா?

புரோகிராம் 5

நான் சமீபத்தில் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரை சந்தித்தேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், அவரிடம் கேட்டேன், “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று. அவர் சொன்னார், “ஒவ்வொரு நாள் நான் உறங்கச் செல்லும் முன்னர் எனக்குள் நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி. இன்று உன்னை முழுமையாக நீ வெளிக்கொணர்ந்தாயா? இதற்கான பதில்கள் வேறுபடும். ஆம். வெளிக்கொணர்ந்தேன் என்றால் நான் இரண்டாம் கேள்வியை கேட்டுக் கொள்வேன். இதுதான் உன்னுடைய உச்சமா? இந்தக் கேள்வி என் பழைய வெற்றி வரலாறுகளை எல்லாம் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. நான் ஒவ்வொரு முறை விழிக்கிற போதும் கேட்கும் மூன்றாவது இறுதிக்கேள்வி. அடுத்தது என்ன? இந்தமுறையில் தான் நிறைய கற்றுக் கொண்டும் மாற்றங்கள் செய்து கொண்டும் ஒரு படி உயர்ந்திருக்கி றேன். என் மனதுக்குள் நிகழும் இந்த உள் உரையாடல்கள் தான், என் சாதனைகளின் பின்புலம்.”

அவர் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருந்தார். அவர் கூறியதில் இறுதியாகச் சொன்ன அந்த உள்ளுரையாடல்கள்  வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையைச் சொன்னால் நாம் பெரும்பாலும் நமக்குள்ளே இருக்கும் மனிதருடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நமக்குள் இருக்கும் மனிதரிடம் எப்படிப் பேசுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இன்னும் சிலருக்கு, அவன் எப்படி என் வேலை குறித்தும், என் அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பலாம் என்ற கேள்வி மனதில் எழும். இதுதான் நம்முள் அகங்காரம் வேர்விடும் இடம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் சிலரோ, இது நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முன்னரே ஒரு கற்பனையான விஷயத்தை மனதிற்குள் கட்டமைத்திருப்பார்கள். இதுவே நம்முள் எதிர்பார்ப்பையும் நினைத்த வண்ணம் நடந்தால் மகிழ்ச்சியையும் தருகிறது. இல்லாவிட்டால் சோகம் மட்டுமே குடி கொள்கிறது.

இன்னும் சிலர் தனக்குத்தானே இப்படி சொல்லிக் கொள்வார்கள். நான் என்னால் ஆனவரை சிறப்பாகச் செய்துவிட்டேன். இதில் வெற்றியடைந்தால் என் இலக்கை நோக்கிய சரியான பாதையில் செல்கிறேன். இல்லை என்றால் என் அணுகு முறையிலும் சிந்தனையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்த மனநிலைதான் பெரும்பாலான மக்களுக்குத் தேவை. நம்முடைய வாழ்க்கை மாற்றியமைக்கும் வல்லமை நம் உள்ளுரையாடல்களுக்கு உண்டு. விழிப்புணர் வோடு நாம் நமக்குள் பேசிக்கொள்கிற விஷயங்கள் நம் சிந்தனையில் பெரும் மாற்றத்தைத் தரும். நம் மனதின் உரையாடல்களை நம் வெற்றிக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் நமக்கு உண்டு. இந்த உள்ளுரையாடல்களின் இன்னொரு வடிவம் தான் பிரார்த்தனைகள். நம் சிந்தனைகளை ஒருங்கே குவித்து, நமக்குத் தேவையான அன்பு, அமைதி, இலக்கு என அனைத்தையும் உருவாக்குவதே பிரார்த்தனைகள் அல்லது உள்ளுரையாடல்கள்.

இப்போது உங்கள் மனதில் ஒலிக்கும் உரையாடல் என்ன? உங்களை நீங்களே வெளிக் கொணர எவ்வகையில் உங்களுக்கு உதவுகிறது?

புரோகிராம் 6

நம்மைச் சுற்றியிருந்த ஒலிகளுக்கு, சப்தத்திற்கு இத்தனை நாட்கள் நாம் செவி சாய்க்காமல் இருந்திருக்கலாம். அது முடிந்துவிட்டது. நம்மைச் சுற்றி நாம் உருவாக்கியிருக்கும் ஒலியோடு, சப்தத்தோடு சேர்ந்து பயணம் செய்யத் தயாராகி விட்டீர்களா? இப்போதும் தாமதமில்லை.

ஒரு ஜென் துறவி கிராமம் ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவரை ஒரு குச்சியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அடிதாளாமல் தவறி விழுந்த துறவியுடன் அந்தக் குச்சியும் விழுந்தது. குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்த துறவி, இவரை அடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்த மனிதரை நோக்கி, நில்லுங்கள். உங்கள் குச்சியை உடன் எடுத்துச்செல்லுங்கள் என்று கூறியபடியே அவரைத் துரத்தினர். பின்பு அவரைப் பிடித்து அவரிடம் அந்தக்குச்சியை ஒப்படைத்தார். இதைப் பார்க்கக் கூடியிருந்த கூட்டத்தில் ஒரு மனிதர், அந்த மனிதர் உங்களை மிக மோசமாகத் தாக்கியிருக்கிறார். நீங்கள் எதுவும் சொல்லவில்லையே! என்று கேட்டதற்கு அந்தத் துறவி சொன்னார், நடந்தது நடந்தவையே அவன் என்னை அடித்துவிட்டான். அவ்வளவுதான். இது நடந்து விட்டது. அவன் அடித்தவன். நான் அடி வாங்கியவன். நான் ஒரு மரத்தின் அடியில் அமர்கிற போதோ அல்லது கடக்கிறபோதோ ஒரு கிளை ஒடிந்து என்மேல் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன்? இல்லை. என்னால் தான் என்ன செய்ய முடியும்?

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதர் இடைமறித்தார். ஒரு கிளை என்பது வேறு. மனிதன் என்பது வேறு. நாம் கிளையை எதுவும் செய்யவோ இல்லை தண்டிக்கவோ முடியாது. மரத்திடம் சென்று நீ செய்தது தவறு என்று வாதம் செய்யவும் முடியாது. அதற்கு அந்த அறிவு இல்லையே.

துறவி தொடர்ந்தார், எனக்கு இந்த மனிதன் வெறும் கிளை மட்டும்தான். நான் மரத்தைப் பற்றியே கவலைப்படாதபோது எதற்காக இந்த மனிதரைப் பற்றிக் கவலைப்படவேண்டும். நடந்து முடிந்த எதையும்… எதையும்… நான் தொந்தரவு செய்யவும் கவலைப்படவும் விரும்பவில்லை.