சமையல் காஸ் மானியம் பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு விவரம் அளிக்காத வாடிக்கையாளர்களுக்கு, காஸ் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் துண்டித்து உள்ளன; இதனால், நுகர்வோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
‘சமையல் காஸ் சிலிண் டர் கேட்டு, பதிவு செய்ய, தானியங்கி சேவையை தொடர்பு கொள்ளும்போது, காஸ் சிலிண்டர் வேண்டும் கோரிக்கை பதிவாகாமல், ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமையிடம் உடனடியாக அளிக்க வேண்டும்’ என, தகவல் சொல்வதாக, நுகர்வோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
சந்தை விலை:தமிழகத்தில், இந்தியன் ஆயில், 91 லட்சம்; பாரத் பெட்ரோலியம், 39 லட்சம்; இந்துஸ்தான் பெட்ரோலியம், 23 லட்சம் என, மொத்தம், 1.53 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இவர்களுக்கு, மாநிலம் முழுவதும் உள்ள, 1,200 காஸ் முகமைகள் மூலம், காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. ‘சமையல் காஸ் மானியம், 2015 ஜன., 1ம் தேதி முதல், வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்; காஸ் சிலிண்டரை, சந்தை விலைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கை, எண்ணெய் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும்’ என, அறிவிப்பு வெளியானது.
இதை தொடர்ந்து, மொத்த சமையல் காஸ் வாடிக்கையாளர்களில், 65 முதல் 70 சதவீதம் பேர், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, பதிவு செய்துள்ளனர். ஜன., 1ம் தேதிக்குப் பின் சிலிண்டர் வாங்குவோருக்கு, வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்படுகிறது.
புகார்:அதே நேரத்தில், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்காதவர்களுக்கு, காஸ் சப்ளையே நிறுத்தப்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடுமுற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர், சடகோபன் கூறியதாவது: காஸ் சிலிண்டர் பெறுவதற்கு, எண்ணெய் நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கும் ஒப்பந்தம் உள்ளது. ஒரு சிலிண்டர் அல்லது கூடுதல் சிலிண்டர் வைத்திருப்பவர்கள், அதற்கேற்ப வைப்புத்தொகையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி உள்ளனர்.இந்நிலையில், மானியத்தொகை
பெற, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்கவில்லை என்பதற்காக, காஸ் சிலிண்டர் சப்ளையை நுகர்வோருக்கு நிறுத்துவது, சட்டப்படி தவறான செயல்.நுகர்வோர் ஒருவர், மானியம் பெற விரும்பவில்லை என்றால், அவருக்கு சந்தை விலையில், சிலிண்டரை சப்ளை செய்ய வேண்டும். ஆனால், சிலிண்டரே அளிக்க மாட்டோம் என, எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. சென்னை போன்ற நகரங்களில், 60 சதவீதம் பேர் தான், ஆதார் அட்டை பெற பதிவு செய்துள்ளனர்; மேலும், பலருக்குவங்கிக் கணக்கு இல்லை. வங்கிக் கணக்கு துவங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது; சேவை பகுதியை சுட்டிக்காட்டி, பல வங்கிகள், புதிய வங்கிக் கணக்குகளை துவக்க மறுக்கின்றன.இந்நிலையில், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை அளிப்பதற்கு, நுகர்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், மானியம் பெறுவதற்கு, ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் அளிக்க, மார்ச் 31ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது; இதுதவிர, மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசமும், அளிக்கப்பட்டு உள்ளது. ‘மானியம் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்காதவர்களுக்கு, ஜூன் மாதத்துக்கு பின்தான், மானிய சிலிண்டர் அளிப்பது நிறுத்தப்படும்’ என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதமே, சிலிண்டர் இல்லை என சொல்வது, முறையற்ற செயல்.இவ்வாறு, அவர் கூறினார்.
சிலிண்டர் நிறுத்தம்:மானியம் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்காத, நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காஸ் முகமைகளுக்கு, சிலிண்டர் சப்ளையை, எண்ணெய் நிறுவனங்களே நிறுத்தி உள்ளன என, காஸ் முகவர்கள் தரப்பில் கூறுப்படுகிறது.இதுகுறித்து, சென்னையை சேர்ந்த, காஸ் முகவர் ஒருவர் கூறியதாவது:எங்களது முகமையில், 6,000த்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் உள்ளனர்; இவர்களில், 68 சதவீதம் பேர், மானியம் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை அளித்து உள்ளனர். மீதமுள்ள, 32 சதவீதம்
பேருக்கான சிலிண்டரை, எண்ணெய் நிறுவனமே எங்களுக்கு அளிப்பதில்லை; இதனால், சப்ளை வழக்கத்தை விட குறைந்துள்ளது. மானியம் பெற வங்கிக் கணக்குஅளிக்காதவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் ‘வாய்ஸ் கால்’ மூலம், மானியம் பெறுவதற்கான ஆவணங்களை அளிக்க நினைவூட்டுகிறோம். பெரும்பாலான நுகர்வோர், ‘ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு இல்லை’ என, கூறுகின்றனர். காஸ் மானியம் பெறுவதற்காக, வங்கிக் கணக்கு துவங்க, வங்கிகள் முன் வருவதில்லை என்றும் கூறுகின்றனர். இதனால், அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை, மானியம் அளிப்பதற்காக இணைக்க முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் விவரங்களை அளிக்காதவர்களுக்கு, காஸ் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளதா என, பாரத் பெட்ரோலிய ஏரியா மேலாளர், சீனிவாசனை தொடர்பு கொண்ட போது, ”இதுபோன்ற புகார்கள், எங்கள் கவனத்துக்கு வரவில்லை; வங்கிக் கணக்கு அளிக்கும் வரை, மானியம் கிடைக்காது; ஜூன் மாதம் வரை, இந்நிலை நீடிக்கும்; அதற்குள், வங்கிக் கணக்கு விவரத்தை அளித்துவிட்டால், இந்த இடைப்பட்ட காலத்தில், வாங்கிய சிலிண்டர்களுக்கான மானியத்தொகையை, மொத்தமாக அளிக்கப்படும்,” என்றார்.
தினமலர்