Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2015
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,640 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்!

இங்கிலாந்தின் தலைமை மருத்துவர் டேம் டேவிஸ் சொல்வதைப் பார்த்தால் உலக அழிவு பாக்டீரியா கிருமிகளால் வரப் போகிறது என்பது போல்  பயமுறுத்துகிறார் இன்னும் இருபதே வருஷத்தில், ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் அறுவை செய்துகொண்டால் கூட நோயாளி இறப்பதற்கான சான்ஸ் மிக அதிகம். ஊரில் ஒரு காலரா, டி.பி பரவினால் மக்கள் கும்பல் கும்பலாகச் செத்து மடிந்து விடப் போகிறார்கள் என்கிறார்.

superbug1ஏன், இதற்கெல்லாம் தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடித்தாகி விட்டதே ? ஆம், ஆனால் நாம் அந்த மருந்துகளை எல்லாம் கண் மூடித்தனமாக உபயோகித்துத் தள்ளியதில் எல்லாமே வீரியம் இழந்து நீர்த்துப் போய்விட்டன. பாக்டீரியா கிருமிகள் இப்போது ட்ரக் ரெஸிஸ்டன்ஸ் என்னும் மருந்து எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிட்டன.

உலக சுகாதார நிறுவனத்தின் வெப் சைட்டுக்குப் போய்ப் பார்த்தால், மருந்துக்குக் கட்டுப்படாத வியாதிகள் பற்றி மானாவாரியாக வெள்ளை அறிக்கைகள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

கனோரியா என்பது, வரக் கூடாத வியாதி. போகக் கூடாத இடங்களுக்குப் போகிறவர்களைப் பீடிக்கும். நேற்று வரை இதை அநாயாசமாகச் சமாளிக்கப் பல மருந்துகள் இருந்தன. இன்றைக்கு மிச்சம் இருப்பது ஒரே ஆண்டிபயாடிக். அதுவும் வேகமாகத் தன் வலிமையை இழந்துகொண்டு வருகிறது.

ஆஸ்பத்திரியிலேயே வசித்துக்கொண்டு (என்ன திமிர் !) ஆஸ்பத்திரி மூலமாகவே பரவும் MRSA என்ற கிருமி, ESCAPE என்று சுருக்குப் பெயர் கொண்ட ஆறு கிருமிகளின் கூட்டணி என்று பல கிருமிகளை நாம் ஆண்ட்டி பயாடிக்குகளைக் காட்டிக் காட்டியே வளர்த்துவிட்டோம்.

2கிருமி எதிர்ப்பு மருந்துகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும் ? கற்பனை செய்வது கடினமே இல்லை. ஒரு 150 வருடத்துக்கு முன்பு அப்படித்தான் வாழ்ந்தோம். 14-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்குள் பல முறை சீனாவிலும் ஐரோப்பாவிலும் கறும் சாவு என்ற ப்ளேக் நோய் பரவி, கோடிக் கணக்கில் மரணங்கள். சீனாவின் ஜனத் தொகையில் பாதி, ஐரோப்பிய ஜனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பலி. ஒரு கட்டத்தில் 45 கோடியாக இருந்த உலகத்தின் ஜனத் தொகையே ப்ளேகினால் 36 கோடியாகக் குறைந்துவிட்டது !

இன்றைக்கு இந்த மாதிரி ஒரு பெரிய அளவில் தொற்று நோய் வந்துவிட்டால், பணம் பிடுங்கி தனியார் ஆஸ்பத்திரிகள் எல்லாம் நாலு காலையும் தூக்கி சரணாகதி ஆகிவிடும். அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆனால் அரசாங்கம் நிலைமையை மேலும் நாசமாக்காமல் இருந்தாலே பெரிய உபகாரம் என்று சொல்லும் அளவுக்குப் பல முறை நடந்திருக்கிறது. உதாரணமாக, 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட ப்ளேக் கலவரத்தைச் சொல்லலாம். ப்ளேக் வந்த பிள்ளை குட்டிகளை பலவந்தமாகப் பிடித்துப் போய்க் கொட்டடியில் அடைத்து, பாதிக்கப்பட்ட வீடுகளை எரித்துத் தள்ளி, கடைகள் தொழிற்சாலைகளை மூடி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டது அரசாங்கம். உணவுப் பஞ்சம், மக்கள் கலவரம், ஆர்ச் பிஷப் படுகொலை என்று பற்றி எரிந்தது ரஷ்யா.

நோய்களுக்கு எதிராக நம் ஒரே நம்பிக்கை, கிருமி எதிர்ப்பு மருந்துகள். கடந்த நூறு வருடத்தில் எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடித்து, தொற்று வியாதிகளைத் தோற்று ஓடச் செய்துவிட்டோம். காலரா, டி.பி. உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சுலபமான செலவில்லாத மருந்துகள் இருக்கின்றன…. அதாவது, இருந்தன !

நாம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பதால், மேற்படி பாராக்களின் விபரீதங்கள் மறுபடி நேரப் போகின்றன !

சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.

சில வகை சொறி சிரங்குக் கிருமிகள் தங்கள் மேற்பரப்பில், ஆண்டி பயாடிக்குகளைக் கவர்ந்து இழுத்து சிறைப்படுத்த வல்ல ப்ரோட்டின்களை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றன. பெனிசிலின் ஜாதி மருந்துகளில் உள்ள பீடா-லாக்டம் வளையங்களை, கண்ணாடி வளையல் மாதிரி உடைத்து எறிகிற பாக்டீரியாக்களும் உண்டு. இதற்காகவே அவை தனிப்பட்ட என்சைம்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டன. தனக்கு உள்ளே நுழைந்துவிட்ட மருந்தை வாக்குவம் க்ளீனர் வைத்துக்கொண்டு உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கும் பாக்டீரியாவும் உண்டு. இதற்கு இஃப்ளக்ஸ் பம்ப் என்று பெயர்.

உயிர் காக்கும் மருந்துகள் பாக்டீரியாவிடம் புறமுதுகு காட்ட நேர்ந்ததற்கு டாக்டர்கள், நோயாளிகள், மருந்துக் கம்பெனிகள் என்று எல்லாத் தரப்பினரும் காரணம்.

குறிப்பாக என்ன பாக்டீரியாவினால் வியாதி வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, எம்.பி.பி.எஸ்ஸில் படித்தது அத்தனையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். நேரம் கிடைத்தபோதெல்லாம் சிம்ஸ்-மிம்ஸ் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும். குழந்தைகள், கர்பிணிகள் என்று வெவ்வேறு தரப்பினருக்கு இந்த மருந்துதான், இந்த டோஸ்தான் கொடுக்க வேண்டும் என்று உப விதிகள் வேறு இருக்கின்றன. ஆனால் பல டாக்டர்கள் பர்ஸை-மன்னிக்கவும் பல்ஸை – பிடித்துப் பார்த்துவிட்டுக் குத்து மதிப்பாக ஏதாவது ஒரு ஆண்ட்டி பயாடிக்கை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது.

இப்படிச் செய்தால் நோய்க்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு மருந்து களத்தில் இறக்கப்பட்டு, தானும் செயல் இழக்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் எத்தைத் தின்றாலாவது பித்தம் தெளிகிறதா என்று பார்க்க, நானாவித மருந்துகளைக் கலந்து போட்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் டாக்டர்களும் சிலர் உண்டு. ‘இந்த வழக்கம் எனக்கில்லை’ என்று அவர்கள் ஸ்டெதஸ்கோப் மீது ஆணையாகச் சொல்லட்டும் ?…

பல கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் வேலைக்கு ஒருவர் சேரும்போதே பைப் ரென்ச் வைத்து மனச்சாட்சியைக் கழற்றிக் கொண்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஸ்கான், எக்ஸ் ரே என்று அப்பாவி மனிதனைப் பாடாய்ப் படுத்துவதுடன், அவர்கள் முழ நீளத்துக்கு எழுதிக் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷனைப் பார்த்தாலே பலத்த சந்தேகம் தட்டுகிறது: மருந்துக் கம்பெனிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பை விசாரணைக் கமிஷன் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும்.
ஆனால் நம்முடைய அத்தனை முட்டாள்தனங்களுக்கும் பாவம், டாக்டர்களையே குறை சொல்வதும் தவறு. நாமும் கள்ளுக் குடித்த குரங்கு போல் தேவையே இல்லாத மருந்து மாத்திரைகளை விழுங்கி நம் உடம்பைப் படாத பாடு படுத்துகிறோம். அன்றைக்கு மருந்துக் கடையில் பத்து வயதே இருக்கும் குழந்தை ஒன்று வந்து “அங்க்கிள் ! ஆம்பிசிலின் கொடுங்க !” என்று கேட்டு வாங்கிச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு முறை ஆண்ட்டி பயாடிக் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டால், கடைசி வரை சென்று கிருமியை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் நிறுத்த வேண்டும். அரை குறை வைத்தியம், சுய வைத்தியம் எல்லாம்தான் நமக்கு உடன் பிறப்பு ஆயிற்றே.. டி.பி மாத்திரை முழுங்க முடியாமல் மாடு மாடாக இருக்கிறது என்று பாதியில் கை விட்டுவிட்டால், இருமல் கிருமி உக்கிரமான வடிவில் திரும்பி வந்துவிடும். பல மருந்துகளுக்கு ஒரே நேரத்தில் சவால் விடும் மல்ட்டி ட்ரக் எதிர்ப்பு சக்தியுள்ள MDR பாக்டீரியா வளர்ந்துவிட்டால் பிறகு போக்குவது கடினம்.

அமெரிக்காவில் எம்.டி.ஆர் கிருமியை ‘சூப்பர் பக்’ என்கிறார்கள். (எது எதற்கெல்லாம் சூப்பர் பட்டம் சூட்டுவது என்று விவஸ்தையே இல்லையா ?)

3நல்ல பழைய நாட்களில் ஒரு கிராமத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத பாக்டீரியா தோன்றினால் அந்த கிராமம் மட்டும்தான் பாதிப்புக்கு உள்ளாகும். இப்போது ஜெட் விமானங்களால் உலகமே குக்கிராமம். சூப்பர் கிருமியை நாமே சொகுசாக விமானத்தில் ஏற்றி அவனியெங்கும் பரப்புகிறோம்.
இப்போது ஆடு மாடு கோழி வளர்ப்பதும் மெகா தொழிலாக மாற்றப்பட்டு மாபெரும் பண்ணைகள் வந்துவிட்டன. விஞ்ஞான பூர்வமாக மாடு வளர்க்கிறோம் என்று அவற்றுக்கும் ஏராளமான ஆண்டி பயாடிக்குகளையும் ஆக்ஸிடோசின்களையும் ஊட்டி நாசமாக்கி, கடைசியில் அத்தனை கண்றாவியும் நாம் குடிக்கிற பாலில்தான் வந்து முடிகிறது.

ஒரு சில மருந்துகளை, தொடர்ந்து ஃப்ரிஜ்ஜில் குளிரான சூழ்நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். போலியோ வைரஸ் சொட்டு மருந்துகள் செயல் இழப்பதற்கு நம்ம ஊரின் உலகப் புகழ் பெற்ற பவர்கட்டும் ஒரு காரணம். ஃபாக்டரியில் தொடங்கிக் குழந்தையின் வாய் வரை, மருந்து பயணிக்கும் வழியெங்கும் கோல்ட் செயின் எனப்படும் குளிர் சாதன வசதி தேவை. நாம் அவ்வப்போது இலவச அடுப்பு, இலவச ஆடு என்று பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்துவிடுகிறோமே தவிர, அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் முக்கியக் கடமை என்பதை வலியுறுத்தத் தவறிவிடுகிறோம்.

மருந்துக் கம்பெனிகள் ஒரு காலத்தில் நிறையப் புதுப்புது ஆண்ட்டிபயாடிக்குகளை உருவாக்கின. இப்போது பாக்டீரியா எல்லாம் ஏழை நாடுகளின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட்டு அவர்கள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு என்று லைஃப் ஸ்டைல் வியாதிகள் பக்கம் கவனத்தைக் குவித்துவிட்டார்கள். பணக்காரர்களுக்கு வரும் வியாதிகளில்தான் பணம் இருக்கிறது !

(நன்றி ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள் )