Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,969 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூ.3 லட்சம் பலே வருமானம் தரும் பால் காளான்!

 pv34bஇயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

‘பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது… ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.

வழிகாட்டிய பசுமை விகடன்!

”நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே ‘பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு ‘பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் ‘பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு” என ஸ்ரீப்ரியா பூரிக்க… அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.

”நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது… ‘பட்டன் காளான்’, ‘சிப்பிக்காளான்’, ‘பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்” என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.

pv34cமூன்று அறைகள் தேவை!

‘சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் ‘பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.

சுத்தம் அவசியம்!

முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.

தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.

மூன்று முறை அறுவடை!

இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து… வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.

pv34aகாளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ”ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா

150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,

2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்” என்ற ராஜ்குமார்,

”குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ராஜ்குமார், செல்போன்: 99524-93556