‘அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.
மூலிகையின் பெயர்- அத்தி
தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS AURICULATE
தாவரக்குடும்பம் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது. அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.
உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம். மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.
- தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
- மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
- நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
- போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். - சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
- அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
- இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
- உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம். - மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
அத்திப் பழத்தின் சத்துகள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (1 பழம் = 50gm) (% சராசரி தினப்படி சத்து)
- நார்ச்சத்து: 5.8%
- பொட்டாசியம்: 3.3%
- மாங்கனீசு: 3%
- விட்டமின் பி6: 3%
- கலோரி(37): 2%
- புரதம்-2 கிராம்,
- கால்ஷியம்-100 மி.கி,
- இரும்பு-2 மி.கி
அத்தியின் மருத்துவப் பயன்கள்
- அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
- உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
- அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
- நீரழிவு குணமாகும்: அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
- அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
- சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
- அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.
- அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.
- அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
- முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
- அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.
- அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
- அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்றுவேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.