Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,394 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்று அனாதை விடுதியில்! ஆனால் இன்று?

jothy reddy old and newதனது நட்பு வட்டத்தில் அக்கா என்றழைக்கப்படும் ஜோதி ரெட்டி, அன்று நள்ளிரவு வரை அவர் தங்கி இருந்த அனாதைகள் இல்லத்திற்குத் திரும்பவில்லை. ஏனென்றால் அவள் அனைத்து விதிகளையும் மீறுவதென்று முடிவெடுத்து விட்டாள்.

அன்று அவர்கள் எடுத்த முடிவு உண்மையில் சற்றுத் துணிச்சலானது தான். அவள் சிரித்தாள். மனதின் ஆழத்தில் இருந்து உரத்த குரலில் சிரித்தாள். அது பதின்ம வயதுப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இன்பங்களில் இருந்து வெடித்துக் கிளம்பிய சிரிப்பு.

அனிலா ஜோதி ரெட்டி எங்கோ தெலுங்கானா வாரங்கல்லில் உள்ள தனது கிராமத்தில் இருந்து அன்றிரவு வெகுதொலைவிற்குப் பயணப்பட்டு விட்டாள். அவளது நினைவு, நேற்று நடந்ததைப் போல புத்தம் புதிதாக இருக்கிறது. ‘’அன்றிரவு தாமதமாகச் சென்றிருந்தால் விடுதிக்காப்பாளரிடம் செமத்தியாக வாங்கிக் கட்டியிருப்போம். ஆனால் நான் அந்தத் திரைப்படத்தின் மூலம் வெகுவாகத் தூண்டப் பட்டிருந்தேன். காதலிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட நினைத்தேன்’’ என்றார்.

கனவுகள் அனைத்தும் நிஜமாகி விடுவதில்லை

ஆனால் –  விதி அப்போது குறுக்கிட்டு விட்டது. பருவம் அடைந்த ஒரு வருடத்திலேயே பதினாறாம் வயதில், அவளைக் காட்டிலும் பத்து வயது கூடுதலான ஒருவனுடன் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள் ஜோதி. எதிர்கால நன்மைக்கென்று அவளது பெற்றோர் உருவாக்கித் தந்த திருமண வாழ்க்கையில் காதலுக்கு கிஞ்சித்தும் இடமில்லை. நெடுஞ்சாலையில் சீறிப் பறக்கும் கார் கண்ணாடியில் வெகுதொலைவிற்குப் பின்னால் புள்ளியாக மறைந்து கொண்டிருந்தது அவளது நம்பிக்கை எனும் கட்டைவண்டி. ஜோதியின் கணவன் பத்தாம் வகுப்பு கூடத் தேறாத விவசாயி. நாள் முழுதும் வறுத்தெடுக்கும் தெலுங்கானா வெயிலில் நெல் வயலில் கூலி வேலைசெய்தாக வேண்டிய விதிக்கு ஆளானாள். எவ்வளவு கடின உழைப்பைச் செலுத்தினாலும் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய்க்கு மேல் கிடைக்காது. இப்படியாகப் போனது 1985 முதல் 1990 வரையிலான ஐந்து  வருடங்கள்.

கணினி மென்பொருள் உருவாக்கத்தில் தலைமை அதிகாரியாக ஜோதி

பதினேழாம் வயதில் நான் தாயானேன். வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு வயலை நோக்கி ஓடியாக வேண்டும். பொழுது சாய்ந்த பின் வீடு திரும்பியதும் இரவுச் சாப்பாடு சமைக்க விறகடுப்பில் புகைவேன். ஸ்டவ் எல்லாம் கிடையாது“ என்றார். அமெரிக்காவில் இருந்து ஆண்டு முறை பயணமாக ஐதராபாத் வந்திருந்த போது நம்மிடம் போனில் பேசினார்.

ஜோதி இன்று அமெரிக்கா அரிசோனாவில் உள்ள முன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான ஃபோனிக்ஸ் எனும் தகவல் நுட்ப நிறுவனத்தில் தலைமை அதிகாரி. நம்ப முடியாத கதை போலத்தோன்றும் ஜோதியின் வாழ்க்கைப் பயணத்தில் அவரது இடையறாத போராட்டம் வெற்றியைத் தந்துள்ளது. தான் ஒருத்தி மட்டுமே தனியாக நின்று விதியைத் திருத்தி எழுதியிருக்கிறார். விரும்பாத வாழ்க்கையை உதறி மேலெழ தன்னைப் பிணைத்திருந்த அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்தார்.
அனாதையாக விடப்பட்டவள்

‘’நான் வறுமையான குடும்பத்தில் பிறந்தேன். வறுமைக்கே வாழ்க்கைப் பட்டேன். ஆனாலும் வறுமையிலேயே இருந்து விட முடியாது என்னால்’’ உறுதியான குரலில் கூறுகிறாள் ஜோதி. அன்று தன் வீட்டுப் பிளாஸ்டிக் டப்பாக்கள் நான்கில் அரிசியும், பருப்பும் நிறைத்து வைத்தாலே போதும் என்றிருந்தது அவளுக்கு. ‘’என் பிள்ளைகளுக்கு வயிறார உணவளிப்பதற்கும் மேலாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது’’ பதினாறு வயதில் மணம் முடித்த ஜோதி பதினேழாம் வயதில் தனது முதல் பெண் குழந்தைக்குத் தாயானாள். அடுத்த ஆண்டிலேயே இன்னொரு பெண் குழந்தை. ‘’பதினெட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானேன். அவர்களுக்குப் பொம்மை வாங்க, மருந்து வாங்க என்னிடம் போதிய பணம் இருந்ததில்லை’’ பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரத்தில் தேர்ந்தெடுத்தது தெலுங்கு வழிக் கல்வி. ஏனென்றால் அதில் தான் மாதக் கட்டணம் 25 ரூபாய். அப்போது ஆங்கில வழிக் கல்விக் கட்டணம் ரூபாய் 50. ‘’அந்த ஐம்பது ரூபாயில் எனது இரண்டு பெண் குழந்தைகளும் படித்து விடுவார்கள் என்பதால் தெலுங்கு வழிக் கல்வியைத் தேர்வு செய்தேன்’’.

தன்னுடன் பிறந்த நான்கு பேரில் ஜோதி இரண்டாவது பெண். வீட்டு வறுமையால் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் தாயில்லாப் பிள்ளையென்று சொல்லி அனாதை இல்லத்தில் சேர்த்தார் ஜோதியின் அப்பா.

ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை அனாதை இல்லத்தில் தான் வசித்தேன். அது மிகவும் கடுமையான வாழ்க்கை. நாள் முழுக்க அழுது கொண்டிருந்த என் அக்காவால் சமாளிக்க முடியவில்லை. எனவே அப்பா அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்.

ஆனால் ஜோதி அங்கேயே இருக்க வேண்டியதாகி விட்டது. அக்காவும் உடன் இல்லாததால் அம்மா மீதான ஏக்கம் அதிகமாகி விட்டது. ஒருவழியாக அனாதை இல்லத்தை அனுசரித்துக் கொண்டாள் ஜோதி. ‘’எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பணக்கார மனிதர் அனாதை இல்லத்திற்கு வந்து இனிப்புகளும், போர்வையும் கொடுப்பார். அப்போது நான் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் ஒரு நாள் நான் பணக்காரியாகி ஒரு சூட்கேஸில் பத்து சேலைகள் எடுத்துக்கொண்டு வருவேன் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். இதை என் தோழிகளிடம் சொன்னால் கேலி செய்வார்கள் என்பதால் எனக்குள்ளேயே வைத்திருந்தேன்’’ என்றபடி சிரிக்கிறார் ஜோதி.

யாருமற்ற குழந்தைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்தியா வந்து விடுவார். அது அவளது பிறந்த நாள். அந்தநாளை வாரங்கல்லில் உள்ள வெவ்வேறு அனாதை இல்லக் குழந்தைகளுடன் கொண்டாடுவார். மனநலம் பாதிப்புற்ற 220 குழந்தைகளைத் தன் பொறுப்பில் ஏற்று அந்த இல்லத்திற்கு நன்கொடை அளித்து வருவதாக ஆர்வமுடன் குறிப்பிடுகிறார்.

இந்திய மக்கட்தொகையில் இரண்டு சதவீதம் பேர் அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. கேட்பாரற்ற யாருக்கும் வேண்டாத பிள்ளைகள் அவர்கள். அனாதை இல்லங்களில் வேலை செய்பவர்கள் பணத்துக்காகவே செய்கிறார்கள். அவர்கள் அனாதைகளைப் பொருட்படுத்துவதில்லை, அவர்களிடம் அன்பு காட்டுவதில்லை’’.

அனாதைக் குழந்தைகள் மீது பல ஆண்டுகளாக தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களைச் சந்தித்து அனாதைக் குழந்தைகளின் துயரங்களுக்குத் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்கிறாள். பத்தாம் வகுப்புவரை அனாதை இல்லத்தில் தங்கிப் படிக்கும் பையன்களைப் பற்றிய தகவல்களை மாநிலரசு அறிவித்துள்ளது என்றாலும் அனாதைப் பெண் பிள்ளைகள் பற்றிய விபரங்கள் ஏதும் இல்லை என்கிறார். ‘’பெண் பிள்ளைகள் எங்கே..? எங்கே போனார்கள் அவர்கள்..?’’ என்று கேள்வியை எழுப்பி விட்டு ஜோதியே அதற்கான பதிலும் தருகிறாள். ‘’ஏனென்றால் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். நான் ஐதராபாத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்றேன். அங்கு பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் ஆறுபேர் குழந்தை பெற்றிருக்கிறார்கள். அதே இல்லத்தில் அனாதைத் தாய்கள் தங்கள் அனாதைக் குழந்தைகளுடன் வசிக்கிறார்கள்’’.

இன்று அதிகாரப் பொறுப்பில் இருக்கும் ஜோதி, அனாதைப் பெண்களின் நிலைமை மேலும் மோசமாகி விடக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த இடத்தில் எல்லாம் அனாதைக் குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்கிறார். ஆனால் இதே அநீதி தன் கணவராலும் தன் புகுந்த வீட்டாராலும் இழைக்கப்பட்ட போது ஜோதி வாய்மூடி மௌனியாக வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிந்தது. அப்போது அவளது வாழ்க்கையே மிகவும் மோசமாக இருந்தது. குறைவான வருமானத்துடன் அல்லது வருமானமே இல்லாமல் பல வயிறுகளுக்கு உணவூட்ட வேண்டிய நிலையில் இருந்தாள் அப்போது. ‘’என் கவனம் என் பிள்ளைகளின் பால் இருந்தது. நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. நான் பிறருக்காகப் பேச முடியாத நிலையில் இருந்தேன். வயலுக்கு வேலைக்குப் போவதைத் தவிர அக்கம் பக்கம் நகர முடியாத நிலையில் இருந்தேன்’’

ஆனால், ஏற்கனவே சொல்லப்பட்டது போல முயற்சி இருந்தால் வழி தானாகக் கிடைக்கும். தனக்கான வாய்ப்பு கதவைத் தட்டுவதைத் தன் காதால் கேட்டாள் ஜோதி. கூலி விவசாயத் தொழிலாளியான ஜோதி, அரசு ஆசிரியை ஆனாள். ‘’அவர்கள் அடிப்படையைக் கற்றுக்கொள்ள உந்து சக்தியாக இருந்தேன். அதுதான் என்னுடைய கடமை. விரைவிலேயே பதவி உயர்வு பெற்றேன். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பெண்களுக்கும் இளையவர்களுக்கும் துணி தைக்கக் கற்றுக் கொடுத்தேன்.’’ அப்போது அவள் மாதத்திற்கு ரூபாய் 120 சம்பாதித்தாள். ‘’அது அப்போது ஒருலட்ச ரூபாய் கிடைத்தது போலிருந்தது. என் குழந்தைகளுக்கு மருந்து வாங்க முடிந்தது. அப்போது எனக்கு அது மிகப்பெரிய தொகை’’.

ஒரு அமெரிக்கக் கனவு

ஜோதியின் லட்சியத்திற்கு மெதுவாகச் சிறகுகள் முளைக்கத் துவங்கின. அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரக்கல்வி முடித்து விட்டு வாரங்கல் காகாத்தியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பயில விண்ணப்பித்திருந்தாள். ‘’எனது வீட்டு வாசலில் ‘டாக்டர் அனிலா ஜோதி ரெட்டி’ பெயர் பலகைத் தொங்குவதாக அவ்வப்போது கனவு காண்பது என் வழக்கம்’’ தனது தேர்வில் வெற்றி பெற முடியாத போதிலும் அவளது ஆங்கிலத்தில் ஆய்வாளர் பட்டம் பெறும் கனவு நிறைவேறியது.

familyஅமெரிக்காவில் இருந்து வந்த ஒன்று விட்ட சகோதரியால் ஜோதியின் கற்பனையில் ஒரு பொறி பற்றிக்கொண்டது. தன்னைப் பீடித்துள்ள வறுமையின் பிடியில் இருந்து தப்ப வேண்டுமென்றால் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது. நீங்கள் எப்படி அமெரிக்கா சென்றீர்கள் என்று நான் கேட்டதும் சிரித்து விட்டுச் சொன்னார் ‘’இது ரொம்ப அதிகம் இல்ல..? வேடிக்கையா இருக்கு இல்ல…?’’

வெளிநாடு வாழ் இந்தியரான தன் ஒன்று விட்ட சகோதரி தனக்கு உற்சாகம் ஊட்டியதாகச் சொன்னார். மேலும் தொடர்ந்து ‘’ஒரு ஆசிரியையான எனது பார்வைக்கு அவளது பாணி வித்தியாசமாக இருந்தது. நான் எனது தலைமுடியை ஒரு போதும் தளர்வாக விட்டுக் கொண்டதில்லை. கண்ணாடி அணிந்ததில்லை. கார் ஓட்டியதில்லை. அவளைக் கேட்டேன் ‘நான் அமெரிக்கா வர முடியுமா..?’’

ஜோதியின் சகோதரி சொன்னாள் ‘’உன்னைப் போன்ற முனைப்பான பெண்ணால் அமெரிக்காவில் இலகுவாக சமாளிக்க முடியும்’’ என்று.

கொஞ்சம் நேரத்தை வீணாக்காமல் கணினிப் பயிற்சி வகுப்பு செல்லத் துவங்கினார். ஜோதி வீட்டை விட்டு வெளியில் போய் தங்குவதை அவளது கணவர் விரும்பவில்லை. எனவே தினமும் ஐதராபாத்திற்குப் பயணிக்க வேண்டியிருந்தது. அமெரிக்கா செல்வதில் தீர்மானமாக இருந்தாள். ஆனால் அவள் கணவரை இணங்கச் செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘’என் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கைத் தர வேண்டுமென்றால் அதற்கான ஒரேவழி நான் அமெரிக்கா செல்வது தான். அதனால் அமெரிக்கா செல்வதற்கு பேரார்வம் காட்டினேன்’’

orphanage தனது நண்பர்கள் உறவினர்கள் உதவியுடன் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தாள். “அந்த நேரத்தில் என்னால் முடிந்த அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்தினேன். கற்பிக்கும் நேரத்திலும் கூட பொழுதை வீணாகக் கழிக்கவில்லை. 1994, 95 கால கட்டங்களில் என் சம்பளம் 5000 ரூபாய். சிட்பண்ட் மூலமாக 25000 ரூபாய் சேர்ப்பது என்னுடைய வாடிக்கை. இத்தனைக்கும் அப்போது என்னுடைய வயது அப்போது 23 – 24 தான். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமிப்பேன். அதைக் கொண்டுதான் என்னால் அமெரிக்கா போக முடிந்தது’’.

கார் ஓட்டுவதில் ஜோதிக்கு மிகப்பெரிய ஆர்வம். அது அமெரிக்கா போனால்தான் சாத்தியமாகும் என்பது அவருக்குத் தெரியும். ‘’வீட்டில் கடுமையான கட்டுப்பாடுகள். ஆனால் ஒரே ஒரு நல்ல அம்சம் எனது இரண்டு குழந்தைகளோடு வாழ்க்கையுடன் போராடும் பொறுப்பை கணவர் என் வசம் விட்டு விட்டார். என் மகள்கள் என்னைப் போலவே கடுமையான உழைப்பாளிகள். கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்க மாட்டார்கள்’’ சிரித்தபடியே கூறுகிறாள் ஜோதி. அவளது இரண்டு பெண்களும் மென் பொறியாளர்கள். இருவருமே திருமணம் முடித்து அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.

வறுமையில் இருந்து வளமைக்கு

அமெரிக்கக் கனவானது அவ்வளவு சாதாரணமானதல்ல. ஜோதி கடுமையான போராட்டம் நடத்தித் தனது வாய்ப்பிற்கான இடத்தை அடைந்து விட்டாள் என்றாலும் அது மிகவும் கடுமையான பயணம் தான். ‘’எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. அங்கே உதவுபவர்கள் யாரும் இல்லை. எனவே ஒவ்வொரு நாளும் கடுமையான போராட்டம்’’

மாதம் 350 டாலர் கட்டணத்தில் பணம் செலுத்தும் விருந்தாளியாகத் தங்குவதற்கு ஒரு குஜராத்திக் குடும்பத்தைக் கண்டு பிடித்தாள். ‘’அப்போது என்னிடம் செல்பேசி இல்லை. தினமும் வேலையிடத்திற்கு மூன்று மைல்கள் தூரம் நடந்தே போவேன்’’ ஒரு விற்பனைப் பெண்ணாகப் பணியாற்றினாள். பிறகு தெற்கு கலிபோர்னியாவில் அரங்கச் சேவைப் பெண்ணாக, அடுத்து போனிக்ஸ் நிறுவனத்தில் குழந்தைத் தாதியாக, அரிசோனாவில் எரிவாயு நிலையத்தில் உதவியாளராக, இறுதியாக வெர்ஜீனியாவில் மென்பொருள் ஆளெடுப்பாளாராக வேலைக்குச் சேர்ந்தார். ‘’இரண்டு ஆண்டுகள் கழித்து நான் ஊருக்குத் திரும்பிய போது சிவன் கோயிலுக்கும் போனேன். அங்கிருந்த பூசாரி சொன்னார் ‘உனக்கு அமெரிக்காவில் வேலை கிடைப்பது கஷ்டம். எனவே சொந்தத் தொழில் செய்தால் கோடீஸ்வரி ஆகி விடலாம்’ என்று. நான் சிரித்தேன். ஏனென்றால் அது எவ்வளவு கடினமானது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் அவரது வாய்ச்சொல் பலித்து விட்டது.’’ இறுதியில் ஜோதி தன் பிள்ளைகளையும், கணவரையும் அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டார்.

abdulkalamஅவர் சொல்வதைப் பார்த்தால் காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் அவருக்கு வழிகாட்டி. குழந்தை தன் பண்பை வடிவமைத்துக் கொள்ளும் 11 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதில் அவர் அவளிடம் சொல்லுவார்.அந்த வயதில் எனது வாழ்க்கையை அனாதை இல்லத்தில் கழித்தேன். நான் இப்போதும் மற்ற பிள்ளைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். அங்கு அழும் பிள்ளையைச் சீராட்டி லாலி பப் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்’’

இன்று உன்னிடம் எத்தனை ஷூக்கள் உள்ளன? என்று நான் கேட்டதற்கு கடுமையான வெயிலடிக்கும் மாதங்களில் எப்படி வெறுங்காலுடன் நடந்தாள் என்பதை நினைவு கூர்கிறாள் ஜோதி. இன்று என்னிடம் 200 செட்கள் இருக்கின்றன. என் உடைக்குப் பொருத்தமான ஷூவைத் தேடி அணிய 10 இல் இருந்து 15 நிமிடங்கள் வரை தேவைப்படுகிறது’’ இருக்காதா பின்னே….? அவள் ஆசிரியையாக இருந்த போது தனக்காக ஏதாவது வாங்கிக் கொண்டாளா ஜோதி?. ‘’அப்போது என்னிடம் இரண்டு சேலைகள் தான் இருந்தன. படு மோசமான நிலையில் மூன்றாவது சேலைக்கு ஆசைப்பட்டு 135 ரூபாயில் ஒன்று வாங்கிக் கொண்டேன். நம்ப முடிகிறதா உங்களால்..?’’ தனது இருப்பில் உள்ளதில் கூடுதலான விலையில் உள்ளது எது என்று கேட்டேன். ‘’எனது இளைய மகளின் திருமணத்தில் நீலம் மற்றும் வெள்ளி நிறச் சேலைக்கு ஒரு லட்சத்து 60,00 ரூபாய் செலவளித்தேன்’’ என்று குலுங்கிச் சிரித்தபடி கூறினாள்.

ஜோதி அமெரிக்காவில் ஆறு வீடும், இந்தியாவில் இரண்டு வீடும் வாங்கியிருக்கிறாள். ஆம் அவளது கார் ஓட்டும் கனவும் நிஜமாகி விட்டது. ஸ்போர்ட்ஸ் கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு தலைமுடியைத் தளர்வாக விட்டபடி மெர்சிடீஸ் பென்ஸ் காரை ஓட்டிச் செல்கிறார்.

காகாதியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு இரண்டாம் நிலை ஆங்கிலப் பாடத்தில் ஜோதியைப் பற்றிய பாடம் இடம் பெறுகிற அளவிற்கு இன்று ஜோதி உயர்ந்துள்ளார்.

‘’நம்ப முடியுமா உங்களால். ஒரு காலத்தில் இதே பல்கலைக் கழகத்தில் எனக்கொரு வேலை கேட்டுக் கெஞ்சினேன். மறுத்து விட்டார்கள். இன்றைக்கு கிராமத்துப் பிள்ளைகள் நிறையப்பேர் என்னைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழும் மனுசி யார் என்பதைக் காண விரும்புகிறார்கள்’’

ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் என்னோடு ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் டெல்லிக்குப் பயணம். அனாதை இல்லத்தில் காணாமல் போன ஒரு பெண்ணைப் பற்றி ஆளும் கட்சியிடம் புகார் அளிக்கப் போகிறார்.

பின்னால் வருவதைக் காட்டும் கண்ணாடியை போல் பிறர் உருவாக்கிய விதிகளை பின்பற்றி வாழும் வாழ்க்கையல்ல ஜோதியின் பயணம். தானே தன் வாழ்க்கை என்னும் ஆக்ஸிலேட்டரை செலுத்தி முழுவேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறார் ஜோதி.