Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,560 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்!

sukku-milagu-thippili-thirikadugamதிரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.

“சுக்கு”,”மிளகு”,”திப்பிலி” என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து. திரிகடுகம் போலவே திரிபலா என்கிற ஒன்றும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததுதான் திரிபலா. திரிகடுகத்தை மும்மருந்து என்றும், திரிபலாவை முப்பலை என்றும் அழப்பர்.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது.

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்.

இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும், கரு முட்டை வெடித்தல் குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், உடல் வீக்கம், வளர்சிதை மாற்றமுள்ள நோயாளிகளுக்கு இது தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும். பல பற்ப, செந்தூரங்களைக் கொடுக்கும்போது, திரிகடுகம் மூல மருந்து சூரணமாகப் பயன்படுத்தலாம்.

சுக்கின் மருத்துவப் பயன்கள்

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சவுபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது. இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது.

இதனால் செய்யப்பட்ட நெய், கிரஹணி ரோகத்தை மாற்றும். சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.

குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள்.

பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. சுக்கை மேல் தோல் நீக்கியே, மருந்து தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். பல் வலிக்கு – சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்.

இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குல்மம், குமட்டல், ருசியின்மை ஆகியவை நீங்கும்.

சுக்கைத் தட்டி போட்டு வெந்நீர் தயார் செய்து குளிக்கத் தலையில் நீர்க்கோர்வை தலைவலி, முகநரம்புவேக்காளம் தீரும். ஜலதோஷத்துக்கு நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. இஞ்சி சாற்றைப் பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும், உடல் இளைக்கும்.

ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் காக்கும். இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், புதிய அடைப்பு உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்கவேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் பயன்படுத்தவேண்டாம்.

மிளகு

மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும். தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும்.

சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப்புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மரிசாதி தைலம், தாளிஸாதி சூரணம் போன்றவற்றில் எல்லாம் இது சேருகிறது.

மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் போக்குக்கு நல்லது. மிளகுச் சூரணம், சீரகம் மற்றும் தேனுடன் தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொள்வது மூல நோய்க்குச் சிறந்த சிகிச்சை. பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம்.

மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்த உறைதலையும் கட்டுப்படுத்தும்.

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்றார்கள் முன்னோர்கள். மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக் களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.

திப்பிலி

திப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். கணா என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ணவீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது. இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர்.

பழங்காலத்தில் இவ்வாறு செய்கிறபோது, செம்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.