Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,655 முறை படிக்கப்பட்டுள்ளது!

நட்பு சாவதில்லை! சிறுகதை

 சரித்திரத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள்

அபூபக்கர் ரழி அவர்கள் தனது உறவினர் மிஸ்தஹ் (ரழி) என்பவருக்கு உதவி செய்து வந்தார்கள். ஆனால் தனது மகள் ஆயிஷா ரழி அவர்கள் மீது சிலர் (நயவஞ்சகர்கள்) அவதூறை புணைந்து பரப்பி வந்தனர். அந்த செய்தியை மிஹ்தஹ் அவர்களும் அடுத்தவருக்கு கூறி வந்தார்கள்.
இவரது செயலைக் கேள்வியுற்ற அபூபக்கர் ரழி உடனே ”அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹ¤க்காக எதையும் செலவிடமாட்டேன்’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள்.”
ஆனால் அல்லாஹ் ‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) வசனத்தை அருளினான்.
அதன் பின் அபூபக்கர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’  என்று கூறி மிஸ்தஹ் அவர்வகளுக்கு உதவியை தொடர்ந்தார்கள்.   புகாரி ஹதீஸ் 6679 ன் கருத்து .

இப்ப சிறுகதையைத் படிக்கவும்

அந்த செய்தி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.

‘ஏன் பேயறைஞ்ச மாதிரி உக்காந்திருக்கீங்க” என்றாள் மனைவி.

‘ஒண்ணுமில்ல.”

‘ஒண்ணுமில்லேன்னா சும்மா ஏன் உக்காந்திருக்கணும்… குளிச்சுட்டு புறப்படுங்க. ஆபீசுக்கு டைமாகலை?”

‘இன்னிக்கு லீவு போடலாம்ன்னு இருக்கேன்!”

‘ஏன்?”

‘மனசு சரியில்லை…’ என்று சொல்ல வந்து, ”இன்னிக்கு காலையிலிருந்தே தலைய வலிக்கிற மாதிரி இருக்கு” எனச் சொல்லி வைத்தேன்.

‘லீவு இருந்தா போட்டுக்குங்க… நான் ஆபீசுக்கு போயாகணும்; லீவு கிடையாது.”

‘நீ போய்க்கோயேன்… எனக்குத்தான் தலைவலி. ஒரு, ‘சாரிடான்’ போட்டு, ரெஸ்ட் எடுத்தால்  சரியாகி விடும்.”

padam‘சும்மா ஏதாவது சொல்லாதீங்க… உங்களுக்கு ஒரு வலியும் இல்லை; எனக்குத் தெரியும். என்ன விஷயம்… எதுக்காக லீவு?”

மனைவியை ஏமாற்றுவது கடினமான காரியம்.

மொபைல் போனில் வந்த ‘அந்த’ செய்தியை சொன்னேன்…

‘அடக்கடவுளே…” அவள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சுருக்கமாக சதாசிவத்தைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடுகிறேன்.

வந்த செய்தியே சதாசிவத்தை பற்றியது தான். அவன் பள்ளி நாட்களிலிருந்தே பழக்கம். அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். கூடப் படித்துக் கொண்டிருந்தாலும் சதாசிவத்துடன் அவ்வளவாக நெருங்கி பழகியதில்லை.

ஒரு நாள் ‘ஸ்கூல்’ விட்டும் வீட்டுக்குப் போகாமல் ‘பிளே கிரவுண்டில்’ கண்களில் பீதியுடனும்  அச்சத்துடனும் நின்று கொண்டிருந்தான்.

‘ஏண்டா… வீட்டுக்கு போகலை?’

‘பயமா இருக்குடா…’

‘ஏன்?’

‘அப்பாகிட்ட… காலையிலஇ 75 ரூவா கேட்டேன்; நோட்ஸ் வாங்க… நூறு ரூவா கொடுத்தாரு… சாயங்காலம் வரும் போது மீதி 25 ரூவாய கொண்டாந்துருன்னாரு. நோட்ஸ் வாங்கிட்டு மீதி பணத்தை சட்டைப் பையிலதான் வைச்சேன். எங்க போச்சுன்னு தெரியல… காணோம்!’

‘காணாம போச்சுன்னே சொல்லிடேன் அப்பாகிட்ட…’

‘இல்லைடா… முடியாது. நம்ப மாட்டாரு… செலவு செய்துவிட்டு பொய் வேற சொல்றீயான்னு உதை பின்னி எடுத்துடுவாரு…’

கண்களில் நிறைந்திருந்த பீதியில் உண்மை தென்பட்டது.

‘நோட்ஸ் விலை அதிகம்ன்னு சொல்லிடேன்…’
‘அதுவும் முடியாதுடா… அதில்  75 ரூபான்னு பிரின்ட் ஆகியிருக்கு…’

அழுவதற்கு தயாரானான்.

சதாசிவம் அப்பாவிடம் அடிபடுவதை நானே பல தடவை பார்த்திருக்கிறேன். மார்க் குறைவு பொய் சொல்லி விட்டான் சொன்ன பேச்சை கேட்கவில்லை என்பது போன்ற தினப்படி காரணங்க ளுக்காக…

அவன் வீட்டிற்கு காணாமல் போன இந்த தொகை பெரிய விஷயமே இல்லை. அவன் அப்பாவின் சுபாவம் அப்படி. யாராவது ஏதாவது செய்து தன்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்டுவிட மாட்டார்களா என்ற இறைஞ்சல் அவன் கண்களில் தென்பட்டது. இவனுக்கு உதவி செய்தாக வேண்டும் என  எனக்கு ஏனோ தோன்றியது.

 ‘என்னிடம்  25 ரூபாய் இருக்கு; வச்சுக்கோ… எனக்கு அப்புறமா கொடுத்துடுடணும்… சரியா?’

‘ஐயோ… ரொம்ப தேங்க்ஸ்டா… தேங்க்ஸ்டா… பிறகு அம்மாகிட்ட சொல்லி எப்படியாவது உன் பணத்தை திருப்பி தர்றேண்டா…’

மகிழ்ச்சி கூத்தாட வீட்டிற்கு ஓடினான்.

அன்று முதல் எனக்கு நெருங்கியவனானான். பள்ளி இறுதிவரை ஒன்றாகப் படித்தோம் ஒன்றாக விளையாடினோம் சினிமா பார்த்தோம். சாகும் வரை இப்படியே சினேகிதமாகவே இருப்பது என்றும்  ஒரு போதும் சண்டையிட்டுக் கொள்வதில்லை என்றும் சபதமெல்லாம் செய்து கொண்டோம்.

பிளஸ் டூ வில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மார்க் வாங்கினோம். இரண்டு பேரின் மார்க்குகளும் அப்படி ஒன்றும் சிலாகிக்கும் அளவுக்கு இல்லை. அன்றைய தேதியில் ‘ப்ரீ சீட்’ பெறுவதற்கு நிச்சயம் போதுமானதல்ல. என் குடும்பம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியான வசதியோடு இல்லை. ஆனாலும் வீட்டில் நான் வாங்கும் மார்க் பற்றி பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால்இ ஏமாற்றமும் இல்லை.

‘நல்லா ஸ்கோர் பண்ணியிருந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும்… உன் தலையெழுத்து இப்படித்தான் இருக்கும் என்றால் என்ன செய்ய முடியும்…’ என்றதோடு சரி. ஏதும் திட்டாமல் அடிக்காமல் அப்பா சொன்ன இந்த வார்த்தைகள் என்னை அவமானப்படச் செய்தன. சுயபரிதாபமும் கையாலாகாத் தனமும் சூழ்ந்து கொள்ள மிகவும் சிறுமைப்பட்டதாக உணர்ந்தேன். நான் காயப்பட்டதை அப்பா உணர்ந்து கொண்டார் போலும்.

‘சரிடா… அதற்காக இனிமே என்ன செய்ய முடியும்… உலகத்தில் பிழைக்க ஆயிரம் வழி இருக்கு. உன்னை பி.எஸ்.சி. படிக்க வைக்கிறேன்; அதுதான் என்னால் முடியும். அதையாவது நல்லா செய். எம்.எஸ்.சி. முடிந்தால் நல்ல வேலை கிடைக்கும்; கவலைப்படாதே…’ என்றார்.

அப்பாவின் அருமையும் பெருமையும் உணர்ந்து கொண்ட நாள் அது.
சதாசிவம் வீட்டில் காட்சிகள் வேறு மாதிரியாக இருந்தது. அவன் அப்பாவால் ‘பேமென்ட் சீட்’ வாங்க இயலும்; என்றாலும் ‘ப்ரீ சீட்’டுக்கு தேவையான மார்க்குகள் இல்லை என அப்பாவிடம் வசவுகளும் அடிகளும் வாங்கினான்.

‘வாடா… எங்கியாச்சும் ஓடிப் போயிடலாம்…’ என என்னிடம் கூறினான் சதாசிவம்.

அப்பா மீது ஆத்திரமும் வெறுப்பும் அண்டியிருந்தது.

‘ஓடிப் போவதா… எங்கேடா?’

‘எங்கேயாவது… இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை…’

‘அதெல்லாம் தப்பு… இதை விட மோசமான நிலைக்கு போய் விடுவோம். எங்கேயாவது ஓட்டலில் தான் சர்வராய் வேலை செய்யணும். கொஞ்சம் பொறுமையாய் இரு… ‘ சமாதானப்படுத்தினேன் அவனை.

என் மார்க்குக்கு புரொபஷனல் கோர்சில் எந்த ‘ப்ரீ சீட்’டும் கிடைக்கவில்லை. எதற்கு வளர்த்துவானேன்? குடும்ப சூழ்நிலை ‘பேமென்ட் சீட்டில்’ நுழைய அனுமதிக்கவில்லை. அப்பா… சொன்னது போல பி.எஸ்.சி.இ தான் சேர முடிந்தது.

ஆனால் அவன் அப்பா அவனுக்கு மேனேஜ்மென்ட் கோட்டாவில் காசு கொடுத்து சீட் வாங்கி விட்டார். ‘ட்ரிபிள் ஈ’ இன்ஜினியரிங் சேர்ந்தான். ஐந்து வருடங்களாக சென்றோம். என்றாலும் கல்லூரி முடியும் வரை மாதம் ஒரு தடவையாவது சந்தித்துக் கொள்வோம். எவ்வளவு நேரம் பேசினாலும் பேசுவதற்கு விஷயங்கள் கொட்டிக் கிடந்தன. பேசி பேசி மாளா நாட்கள் அவை.

நான் கொடுத்த 25 ரூபாயைப் பற்றி பல தடவை அவன் சொல்லி இருக்கிறான். ஆனால் ஒரு போதும் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி பேசியதேயில்லை; நானும் கேட்டதே இல்லை. எங்கள் நட்புக்கு ஆரம்பமான விஷயமல்லவா… அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன்.

அவன் கேம்பசில் செலக்ட் ஆகி பெங்களூருவில் ஐ.டி. கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். அவனுக்கு வேலை கிடைத்ததற்கு பார்ட்டி வைத்து கொண்டாடினோம்.

நான் எம்.எஸ்.சி.இயும் முடித்து தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பா பார்த்து வைத்த பெண் தேவகியை திருமணம் செய்து கொண்டேன்; அவளும் வேலைக்கு போகிறாள். எங்கள் சம்பளம் மற்றும் டியூசன் என வருமானம் போதுமானதாகவே இருந்தது.

அவன் கம்பெனியில் உடன் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அதன் பிறகு அவனுக்கு எல்லாமே ஏறுமுகமாகவே இருந்தது. கார் வாங்கினான். பெங்களூருவில் கோடி ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கினான். அந்தஸ்தும் வசதிகளும் பெருகின. என்ன காரணத்தாலோ அவன் வாங்கியிருந்த வீட்டிற்கு ‘வா…’ என ஒரு தடவை கூட அழைத்ததில்லை. அவ்வப்போது போனில் பேசுவான்.

காலம் கடந்து கொண்டிருக்க ஒரு நாள் ‘ஏங்க… உங்க பிரண்ட் பெங்களூருவில் தானே இருக்கிறார். நாம ரெண்டு நாள் அங்கு போய் தங்கி மைசூர் பேளூர் ஹளேபேடு எல்லாம் போய் பார்த்து வந்தால் என்ன?’ என்றாள் தேவகி.

சதாசிவத்திடம் போனில் சொன்னேன்.

‘தாராளமாய் வாயேண்டா… இதென்ன கேள்வி!’ என்றான்.

திட்டமிட்டபடி ஒரு நாள் காலை நானும் என் மனைவியும் அவன் வீட்டிற்குப் போய் சேர்ந்தோம். அவன் மனைவி ரொம்பவும் வரவேற்றாள். சம்பிரதாயமான ஈஉபசாரங்கள் காலை டிபன் எல்லாம் முடிந்தது.

‘டேய்… கோவிச்சுக்காதேடா… நான் இன்னிக்கு ஆபீசுக்கு அவசியம் போயாக வேண்டும். நீயே மேனேஜ் செய்துக்குவே இல்லே…’ என்றான் சதாசிவம்.

‘அதனால் என்ன… நீ போ. நாங்க இன்னிக்கு லோக்கல்ல சுத்திப் பாத்துட்டு சாயங்காலம் வந்துடுவோம். அதுக்கப்புறம் நாளன்னிக்கு தான் மைசூர் போறோம்…’

‘ஓ.கே… நான் சாயங்காலம் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். இவள் 6:00 மணிக்கு வந்து விடுவாள். அப்பறம் பார்க்கலாம்…’

‘ஒரு நாள் எங்களுக்காக இவன் லீவு எடுக்கக் கூடாதா…’ என தோன்றினாலும் அடுத்த கணம் ‘ஐ.டி. பீல்டில் இருக்கான்… நினைச்சபடி லீவு கிடைக்காது போலும்…’ என அந்த நினைவை துடைத்தெறிந்தேன்.

சிட்டி பஸ் பிடித்து விதான் சவுதா கப்பன் பார்க் எல்லாம் சுற்றி விட்டு கெம்பே கவுடா சர்க்கிள் அருகில் ஓட்டல் சாரதாவில் சாப்பிட அமர்ந்திருந்த போது பின்னால் சதாசிவத்தின் குரல் கேட்டது.

நாலு டேபிள் தள்ளி அவன் தன் நண்பனுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

‘ஏம்பா… உன் சொந்த ஊரிலிருந்து யாரோ தெரிஞ்சவன் வர்றதா சொல்லியிருந்தியே… வந்துட்டானா?’ இதுஇ சதாசிவத்தின் பக்கத்திலிருந்தவன் கேட்டது.

‘ம்ம்… ம்ம்… எல்லாம் வந்து சேர்ந்துட்டான். பொண்டாட்டி கூட…’

‘நீ அவுங்க கூட ஒரு நாள் ஸ்பெண்ட் பண்ணலியா… இல்ல அதுக்குள்ள ஊருக்கு புறப்பட்டுட்டாங்களா?’

‘இல்லை… இல்லை… ரெண்டு நாள் டேரா போடுவான் போலிருக்கிறது. பெரிய தொல்லைடா… ஏதோ கிராமத்தில் கூட படிச்சான்… அவ்வளவு தான். அதுக்காக இங்க தங்குவதற்கு வந்துட்டான்…’

‘இப்ப ஏதோ ஸ்கூலில் வாத்தியா இருக்கானாம். நம்ம லைப் ஸ்டைலுக்கும் அவனுக்கும் சரிப்பட்டு வராது. அவன் ஸ்டேட்டசுக்கும் நம்ம ஸ்டேட்டசுக்கும் ஒத்து வராது. அவன் கூட ஒரு நாள் லீவு போட்டு இருந்துட்டால் இதையே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு அடிக்கடி வந்துவிடுவானோ என பயமாய் இருக்கு… அப்புறம் இதே நியூசென்சாய் போயிடும்… அவனா புரிஞ்சுகிட்டு போகட்டும் என ‘ஆபீசில் வேலை இருக்கு…’ன்னு சொல்லிவிட்டு வந்துட்டேன்…’
‘சரியான ஆளுடா நீ… நம்ம அந்தஸ்துக்கு ஈக்குவலா இல்லாத ஆட்களே உபத்திரவம் தான். நல்லாத்தான் சமாளிச்சுட்டே…’ ஜோக் சொன்னது போல பெரிதாக சிரித்துக் கொண்டனர்.

சட்டென்று எழுந்து போய் அவன் முன் நிற்கலாமா எனத் தோன்றியது. கையைப் பிடித்து அழுத்தி ‘பேசாமல் இருங்கள்…’ என்றாள் மனைவி.

சாப்பாட்டை துறந்து உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினோம்.

‘இவ்வளவு கேவலமானவனா இவன்… இவனைப் போயா இவ்வளவு நாட்களாக மனதில் இருத்தி வைத்திருந்தேன்… இப்படி நடந்து கொள்ள அவனால் எப்படி சாத்தியமாயிற்று… இவனுக்கு எல்லாமே பணமும் ஸ்டேட்டசும் தானா… இத்தனை நாள் அவன் பழகியதெல்லாம் வேஷமா… பணமும் அந்தஸ்தும் ஒரு மனிதனை இப்படியா மாற்றி விடும்… இவனிடம் நான் என்ன பணமா கேட்டேன்?’ ஆத்திரம் அடைந்தது மனம்.

‘ஏதாவது செய்து நான் உனக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல…’ என நிரூபிக்க வேண்டும் என மனது பதைத்தது. உணர்ச்சி களை வெளிப்படுத்த வார்த்தைகள் அற்றுப் போய் கண்கள் சிவந்து சுவாசம் ஆவேசமாய் வெளிப்பட்டது. மனைவியின் முகத்தைப் பார்க்க அவமானமாய் இருந்தது.

ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் பார்க்கில் சாயங்காலம் வரை உட்கார்ந்திருந்தோம். 7:00 மணிக்கு அவன் வீட்டிற்கு புறப்பட்டோம். ‘நீங்கள் ஒன்றும் பேசக் கூடாது… நான் பாத்துக்கறேன். வீணா சண்டை வளர்க்காதீங்க… மனுஷாளை சரியா புரிஞ்சுக்காதது நம்மோட தப்பு…’ என்றாள் தேவகி.

உள்ளே நுழையும் போது அவர்கள் இருவருமே இருந்தனர். வாங்கி வந்திருந்த ஸ்வீட்களையும் பழங்களையும் சதாசிவத்தின் மனைவியிடம் கொடுத்தாள் தேவகி.

‘நாங்கள் புறப்படுகிறோம்… அவசரமாய் ஊருக்கு போயாக வேண்டும்…’ என்றாள் தேவகி.

‘ஏண்டா… ரெண்டு நாள் இருப்பேன்னு சொன்னே?’

அவனுக்கு கண்களில் சந்தோஷத்தை மறைக்கத் தெரியவில்லை.

நாங்கள் புறப்பட்டோம் கீழே வழியனுப்ப வந்தான்.

ஆட்டோவில் ஏறும் போது அவனிடம் ‘நீ உன் பிரண்டுடன் ஓட்டல் சாராதாவில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தேன்…’ எனச் சொல்லி விட்டேன்.

அவன் முகம் அசிங்கமாக மாறுவதையும் பேச வார்த்தையற்று நிற்பதையும் முழுதுமாக ரசிக்குமுன் ஆட்டோ புறப்பட்டு விட்டது.

‘ஏன் உங்க ஆத்திரத்தை காட்டினீங்க… ஏதும் இது பற்றி பேசக் கூடாதுன்னு முடிவு செய்துதானே அவுங்க வீட்டுக்கு போனோம்… இப்ப அதை சொல்லிவிட்டதில் என்ன திருப்தி உங்களுக்கு… அவருக்கு பணம் கண்ணை மறைத்தது என்றால் உங்களுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்குது…’ என்றாள் மனைவி.

நான் பதிலேதும் சொல்லவில்லை. பணம் தான் எங்களை இணைத்தது; அதே பணம் தான் எங்களை பிரித்தும் விட்டது. இருண்ட மனதோடு வீடு வந்து சேர்ந்தோம்.

இது நடந்து மாதங்கள் பல கடந்திருக்கும். அப்போது தான் மேலே சொன்ன செய்தி வந்தது.

‘சாலை விபத்தில்இ சதாசிவம் இறந்து போனான்…’ என்று.

நட்பே மரணமடைந்த பின் நண்பன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் மறைந்தது பெரிய விஷயமாய் படவில்லை.

‘எழுந்திரிங்க… நாம உடனே பெங்களுரு போறோம்… நண்பன் வேணா சாகலாம்; நட்பு என்னிக்கும் சாவக் கூடாது; கிளம்புங்க” என்றாள் தேவகி.

ச(தா)சிவம் -தினமலர் நாளிதழில் வெளியான ஒரு சிறுகதை