Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,676 முறை படிக்கப்பட்டுள்ளது!

மிதிவண்டி – சிறுகதை

bicycleமணிக்கு எப்போதுதான் பொழுது விடியுமோ என்று மனசு குதித்தது. இரவு அம்மா தந்த இட்லியும், சட்னியும் தொண்டையைத் தாண்டி இறங்கவேயில்லை. இரவு முழுக்க கலர்கலராய் கனவுகள் மனசுக்குள் வந்தபடி இருந்தன.

இன்றைக்குப் பார்த்து சூரியன் இறங்க மறுத்தது போல் அலுப்பாய் இருந்தது. காத்திருக்கும் போதுதான் நேரம் கடப்பது எத்தனை சிரமமென்று தோன்றியது. யாருக்கும் தெரியாமல் எழுந்து போய் இரண்டொருமுறை ஜன்னலை திறந்து வாசலை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.

நாளைக்கு முதன்முதலாய் சைக்கிளில் பள்ளிக்கு போகப் போகின்ற உற்சாகம் மனசுக்குள். அப்பா மாலையில்தான் புது சைக்கிளை வாங்கி வந்து, வாசலில் நிறுத்தி இருந்தார்.

இனி நாளை முதல் பள்ளிக்கும், டியூஷன் கிளாஸýக்கும் புது சைக்கிளிலேயே இறக்கைக் கட்டிப் பறக்கலாம். நினைப்பே இனிக்க, கண்ணைக் கவ்வ மறுத்த தூக்கத்திற்கு வலிய அழைப்பு விட்டு வலுவில் தூங்க முயற்சித்தான்.

ஏனென்றால் அப்போதுதான் கனவு வரும். கனவில் சைக்கிள் ஓட்டலாமில்லையா..?

விடிந்ததும் முதல் வேலையாய், சைக்கிளை அரைமணி நேரம் துடைத்தான். அம்மாவும், அப்பாவும் அவனுடைய செயலைப் பார்த்து சிரித்தார்கள்.

ஒன்பது மணி பள்ளிக்கூடத்திற்கு அவன் எட்டு மணிக்கே தயாராய் நிற்க, அம்மாவும், அப்பாவும் அசந்து போனார்கள்.
“”ஏண்டா… மணி, தினமும் எட்டரை மணிக்குப் போறவன் நீ. இப்போ சைக்கிள் வந்தாச்சு. இன்னும் ஐந்து பத்து நிமிடம் தாமதமா கிளம்பினா போதுமில்லையா… ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டே…” அம்மா ஆச்சர்யமாய் கேட்க, மணி செல்லமாய் சிணுங்கினான்.

“”அம்மா ப்ளீஸ்மா, நான் சீக்கிரம் போனாத்தான் என் பிரெண்ட்ஸ் கிட்டயெல்லாம் என் சைக்கிளை காட்ட முடியும்.”
அவனுடைய ஆர்வத்திற்கு தலைசாய்த்து அம்மாவும், அப்பாவும் அவனை அனுப்பி வைத்தார்கள்.

சைக்கிளை மிதிக்க மிதிக்க வானத்தில் பறப்பது போல மனசு பூரித்தது மணிக்கு. அவன் இத்தனை சீக்கிரம் வந்ததற்குக் காரணம் புது சைக்கிள் மோகம் மட்டுமல்ல, ஆனந்தும் தான் காரணம்.

ஆனந்த், மணி படிக்கிற அதே பள்ளியில் தான் படித்தான். பத்தாம் வகுப்பு. மணி ஒன்பதாம் வகுப்பு. மணி வசிக்கும் தெருவிலேயே வசிக்கிறான். அவன்தான் மணிக்கு சைக்கிள் ஓட்ட கத்துத் தந்தவன். அவனுடையப் பயிற்சிதான் மணி இத்தனை அழகாய் சைக்கிள் ஓட்டக் காரணமென்றால் மிகையில்லை.

நேற்று கூட சொன்னான்.

“”மணி, உனக்கு சைக்கிள் வந்ததும் எனக்கு ரொம்ப நிம்மதி ஆகிடும்டா. மணிக்கணக்கா பஸ்ஸýக்கு காத்துட்டு நிக்காம நான் நேரா உன் வீட்டுக்கு வந்துடறேன். ஆமாடா, நான் பத்தாம் வகுப்பு படிக்கறதால பள்ளியில நிறைய ஸ்பெஷல் கிளாஸý இருக்கு. என்னால சரியான நேரத்துக்குப் போக முடியாததால எல்லா வகுப்பிலேயும் திட்டு வாங்கறேன். எங்க அப்பாவால எனக்கு சைக்கிள் வாங்கித் தரமுடிலடா. அதனால நாம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்டா…”

அதுதான் மணிக்கு பிடிக்கவில்லை.

ரெண்டு வருஷமாய் அப்பா, அம்மாவிடம் போராடி, தான் சைக்கிள் ஓட்டும் திறமையை நிரூபித்து வாங்கிய சைக்கிள். அது முழுக்க முழுக்க இவனுக்கானதுதான். அதில் யாருக்கும் இடமில்லை. அதனால்தான் அவனை தவிர்த்துவிட்டு சீக்கிரமே கிளம்பி விட்டான்.
மறுநாள்…

“”என்ன மணி, இன்னைக்கும் சீக்கிரம் கிளம்பிட்டே..!” அப்பாவும், அம்மாவும் ஆச்சர்யமாய் கேட்க, ஏதோ ஒரு பாடத்தில் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாய் சொல்லிவிட்டு பறந்தான்.

சைக்கிளில் ஜம்மென்று பறப்பது சுகமாகவும், ரொம்பக் கவுரவமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பும் முன்னரும் ஆனந்தை சந்திக்காமல் மாற்று வழியில் வீடு வந்து சேர்ந்தான். மனசு உற்சாகமாய் இருந்தது. மாலையில் ஆனந்த் வாசலில் சைக்கிளைப் பார்த்து விட்டு ஓடோடி வந்தான்.

“”என்னடா மணி, சைக்கிள் வாங்கிட்டியா..?” என்றான் ஆசையாக.

“”ஆமாண்டா..!” என்றான் சுரத்தில்லாமல்.

“”அப்புறம் ஏண்டா என்னைய விட்டுட்டு காலைல ஸ்கூல் போயிட்ட…” என்றான் அப்பாவியாய்.

“”இல்லடா… இப்பெல்லாம் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் வெச்சுடறாங்க அதான்…”

“”எத்தனை மணிக்குப் போவே… நானும் வர்றேனே…”

“”எட்டரை மணிக்கு…” என்றவன் கால்மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விட்டான்.

இரண்டொரு நாள் வந்து பார்த்து ஏமாந்த ஆனந்த், பிறகு வருவதேயில்லை. மணிக்கு நிம்மதியாய் இருந்தது. இது அவனுக்கே அவனுக்கான சைக்கிள். இதில் யாருக்கும் இடமில்லை.

அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து அப்பாவே ஒரு நாள் கேட்டார்.

“”என்னாச்சு… மணி, உனக்கும் ஆனந்துக்கும் ஏதாவது சண்டையா? அவன் ஏன் வீட்டுக்கு வர்றதில்லை…?”

“”இல்லப்பா, அவன் நான் சைக்கிள் வாங்கினதைப் பார்த்து பொறாமைப்படறான் போல…”

“”என்னடா… மணி, இப்படியெல்லாம் பேசுற? ஆனந்த் என்ன அப்படிப்பட்ட பையனா? அப்படியே இருந்தாலும் உன்னுடைய நண்பன் தப்பு செஞ்சா நீதானே பக்குவமாய் திருத்தணும். அத விட்டுட்டு இப்படியா புறம் பேசுவாங்க…” அம்மா அதட்டினார்.
“”ஆமாம் மணி, எப்பவும் நீ தனியா போறதை விடவும் நல்ல நண்பரோட போறது இன்னும் அழகாக இருக்கும்” என்றார் அப்பா.

ஆனால், மணி இதெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

அன்று பள்ளியில் இருந்து கிளம்பிய மணிக்கு மெயின் ரோட்டை தாண்டியதும் சோதனை ஏற்பட்டது. மெயின் ரோட்டில் ஒரு வளைவில் திரும்பிய போது, சைக்கிள் சறுக்கி கிழே விழுந்து கையில் அடிபட்டு விட்டது. இன்னொரு பக்கம், சைக்கிள் செயின் கழன்றுக் கொள்ள, அதையெப்படி மாட்டுவது என்று தெரியாமல் முழித்தான் மணி.

பக்கத்தில் உதவிக்கு யாருமில்லை. கடந்து போன ஓரிருவரும் இவனைப் பார்த்துக் கொண்டே போனார்கள். உதவிக்கு வரவேயில்லை. மணிக்கு அழுகை அழுகையாய் வந்தது. இப்படி ஆகுமென்று அவன் நினைக்கவேயில்லை. செயினை மாட்ட முன்னுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த போது ஆனந்த் ஓடோடி வந்தான்.

“”என்னடா மணி ஆச்சு? கையெல்லாம் ஒரே சிராய்ப்பா இருக்கு. செயின் கழண்டுப் போச்சா. கொஞ்சம் தள்ளு, நான் மாட்டறேன்.”

ஐந்து நிமிடத்தில் மாட்டி விட்டான். மணிக்கு வெட்கமாய் இருந்தது.

“”ஆனந்த நீ எப்படிடா இங்கே வந்தே..?”

“”நான் பஸ்ல போகும் போது, நீ இங்கே விழுந்துக் கிடக்குறதைப் பார்த்தேன்டா. அதான் அடுத்த ஸ்டாப்ல இறங்கி ஓடோடி வர்றேன். மணி என் தப்புதாண்டா, சைக்கிள் ஓட்டக் கத்துத் தந்த நான், அதில் ஏற்படற சின்னச் சின்னப் பழுதுகளை எப்படி சரிபார்க்கறதுன்னு சொல்லித் தந்திருக்கணும். என்னை மன்னிச்சுருடா…”

ஆனந்துடைய வார்த்தைக் கேட்டு வெட்கித் தலைக்குனிந்தான் மணி. படிப்பில் மட்டுமில்லை, பண்பிலும் உயர்ந்து நின்றான் மணியின் நண்பனாய் ஆனந்த்.

“”ஆனந்த், இனிமேல் நாம் சேர்ந்தே போவோம்டா. என்னை மன்னிச்சுடுடா…” மணி நிஜமாகவே வருத்தப்பட்டான்.
“”நிஜமாவாடா…” ஆனந்த் குதூகலமாய் புன்னகைத்தப்படி மணியின் பின்னால் ஏறிக் கொண்டான். இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த மணியின் பெற்றோர், பிணக்குபட்ட நண்பர்கள் இருவரும் ஒன்றானதை அறிந்து மகிழ்ச்சியுற்றனர்.