“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்? “
“என்ன வேண்டுமானாலும் செய்யும்.”
ஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல அமைந்திருக்கிறது கூகுளின் ஒரு சீக்ரட் லேப். சுருக்கமாக X.
எல்லா நிறுவனங்களுக்கும் இருப்பதுபோலவே, கூகுளுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஓர் ஆராய்ச்சி நிலையம்தான் இந்த X லேப். ஆனால், இங்கே உருவாகும் ஐடியாக்களும், அது வடிவம்பெறும் விதமும் மிகமிக சுவாரஸ்யமானவை. செடி வளர்ப்பு தொழில்நுட்பம் தொடங்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் பட்டம் வரை பல்வேறு வித்தியாசமான தொழில்நுட்பங்கள், கூகுளுக்காக இங்கேதான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த லேப்பின் தாரகமந்திரம்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பவரிகள்.
2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்தான் இந்த லேப். முதலில் இதன் பெயர் கூகுள் X. பின்னர் இரு வருடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செல்லவே, பின்னர் இந்த லேப் கூகுளிடமிருந்து கழட்டிவிடப்பட்டது. தற்போது ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக மட்டுமே இது இயங்கிவருகிறது. கூகுளிடமிருந்து பிரிந்ததும் இதன் பெயரை, கூகுள் X என்பதிலிருந்து வெறும் X ஆக மாற்றிவிட்டது கூகுள். மன்னிக்க… ஆல்ஃபாபெட். இதுதான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் வரலாறு. இதன் பணி என்ன? “உலக மக்களின் பிரச்னைகளுக்கு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதுதான் எங்கள் தலையாய பணி” என்கிறது X.
டிரைவர் இல்லாமலே இயங்கும் தானியங்கி கார், இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தித்தரும் பலூன்கள், குறைந்த செலவில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மக்கானி பட்டம், கப்பல் வசதி இல்லாத நாடுகளுக்குப் பொருள்களை அனுப்ப உதவும் கப்பல், பொருள்களை டெலிவரி செய்யும் புராஜெக்ட் விங், புகைப்படங்களைக் கண்டறிய உதவும் Deep Learning தொழில்நுட்பம் என இந்த லேப்பின் ஒன்லைன் எல்லாமே அட்டகாசமானவை. இப்படி பிரம்மாண்ட ஐடியாக்கள் பிடிப்பதால், இந்த ஆராய்ச்சி நிலையத்தை ‘மூன்ஷாட் ஃபேக்டரி’ என அழைக்கிறார் இதன் தலைவர் ஆஸ்ட்ரோ டெல்லர். இவர்தான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி. கூகுளின் மில்லியன் டாலர் புராஜெக்ட்கள் பலவற்றிற்கு இவர்தான் தலைவர்.
இந்த மூன்ஷாட் தொழிற்சாலையின் ப்ளூபிரின்ட் ரொம்ப சிம்பிள். முதலாவது, இந்த உலகில் பல மில்லியன் மக்கள் சந்திக்கும் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கண்டறிவது. இரண்டாவது அதற்கான தீர்வுகளைக் கண்டறிவது அல்லது உருவாக்குவது; மூன்றாவது, அந்தத் தீர்வுகளை செயல்படுத்தும் வழிகளைக் கண்டறிவது. இந்த மூன்றும் சங்கமிக்கும் இடம்தான் இந்த சீக்ரெட் லேப். உதாரணமாக புராஜெக்ட் லூன் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.
இணைய வசதி இல்லாத பல லட்சக்கணக்கான மக்களுக்கு இணைய வசதி செய்துதர வேண்டும். ஆனால், செலவு மிகக்குறைவாக இருக்க வேண்டும் – இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்கான சவால். முதலில் இந்தச் சவாலைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்வார்கள். மக்களுக்கு எந்தெந்த வழிகளில் இணைய வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும், ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் இது சாத்தியமா, இதிலிருக்கும் தடைகள் என எல்லாக் கோணத்திலும் ஆராய்ந்துவிட்டு, இதுதான் சரியான வழி என ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்தெடுத்ததுதான் பலூன்கள் மூலமாக இணைய சேவையை வழங்கும் திட்டம். பின்னர் சோதனைகள், ஆராய்ச்சிகள், திட்டமிடல் என அனைத்தும் மின்னல் வேகத்தில் தொடங்கும். திட்டம் தொடங்கிய சில நாள்களிலேயே, இது செயல்முறையில் சாத்தியமா என்பது தெரிந்துவிடும். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்றால் மட்டுமே அந்த ஆராய்ச்சி தொடரும். இல்லையெனில் ‘ஃபெயிலு ஃபெயிலு’ என புராஜெக்ட்டை நிறுத்திவிடுவார்கள். பின்னர், அடுத்த ஐடியா, அடுத்த புராஜெக்ட் என ஆராய்ச்சிகள் தொடரும்.
“கடந்த நூற்றாண்டில் ஒரு தொழில்நுட்பம் வந்தால், அது வளர்வதற்கும், மக்களிடையே சென்று சேர்வதற்கும், பின்னர் மக்களிடையே பரவலாகச் செல்வதற்கும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை எடுக்கும். நீராவி இன்ஜின், தந்தி, தொலைபேசி போன்றவை அப்படித்தான் மக்களிடையே பரவியது. அந்த அளவிற்குத்தான் தொழில்நுட்ப வளர்ச்சியும், வீச்சும் இருந்தது. ஆனால் தற்போது ஒரு தொழில்நுட்பம் வந்தால் வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் உலகையே மாற்றிவிடுகிறது. இந்த வேகம்தான் தற்போது எங்களுக்கான சவால்” என்கிறார் டெல்லர்.
பல்வேறு திட்டங்கள் இங்கே உருவாகிப் பின்னர் கைவிடப்பட்டுள்ளன. ஆனாலும் கூட இங்கே இருந்து வெற்றிகரமாக உருவான விஷயங்கள் நிறைய.
கூகுள் கிளாஸின் அடுத்த வெர்ஷனான என்டர்பிரைஸ் எடிஷன், இன்டர்நெட் பலூன்கள், ட்ரோன் டெலிவரிக்கான புராஜெக்ட் விங், கூகுளின் தானியங்கி கார், கூகுள் ப்ரெய்ன், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான வெரிலி, குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மக்கானி போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். இதுதவிர பூமியையும், சர்வதேச விண்வெளி மையத்தையும் இணைக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் புராஜெக்ட்டையும் தொடங்கி, சில மாதங்களில் கைவிட்டது X. அதற்கு, “பூமியையும் விண்வெளியையும் இணைக்கும் அளவிற்கு வலிமையான கார்பன் நானோ டியூப்கள் உருவாக்கப்படவில்லை. அதனால் தற்போது இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்கிறோம்” என்றது X. வருங்காலத்தில் செய்தாலும் செய்யலாம்.
இப்படி எப்பேர்ப்பட்ட புராஜெக்ட்களையும் X ஒரு கைபார்ப்பதன் ரகசியம் என்ன தெரியுமா?
“கனவுகள் என்பவை வெறும் காட்சிகள் மட்டுமே அல்ல; அவற்றை செயல்படுத்துவதற்கான வழிகளையும் அது தன்னுள் கொண்டுள்ளது. இதுதான் X-ன் முக்கிய அம்சம். இங்கே, ஒரு ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர், ஃபேஷன் டிசைனரோடு பணிசெய்துகொண்டிருப்பார். முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், லேசர் விஞ்ஞானி ஒருவரோடு ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார். இது லேப் X. இங்கே எல்லாம் அப்படித்தான். இங்கே, சில விஞ்ஞானிகள் இருப்பார்கள்; சில பொறியாளர்கள் இருப்பார்கள்; தயாரிப்பாளர்கள் இருப்பார்கள்; அனைவருமே இணைந்து உலகை மாற்றப்போகும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சியை எங்கள் லேப்பில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் காண முடியும்.
இங்கே நாங்கள் தொடங்கும் எல்லா புராஜெக்ட்களையும் நாங்கள் முடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தினந்தோறும் எத்தனை புராஜெக்ட்களைக் கைவிட்டுவிடலாம் என்றுதான் சிந்திப்போம். இப்படி பல புராஜெக்ட்கள் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. இதற்காக நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. வேலையைவிட்டு நீக்குவதில்லை. மாறாக இன்னும் பல புராஜெக்ட்களை இப்படிச் செய்ய ஊக்கப்படுத்துகிறோம். மென்மேலும் உற்சாகப்படுத்துகிறோம். அப்படித்தான் இங்கே பல மகத்தான கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
புராஜெக்ட் லூன்
நாங்கள் தொழில்நுட்பங்களை விரும்புவதில்லை. தொழில்நுட்பத்திற்கான தேவையை உருவாக்கும் பிரச்னைகளையே விரும்புகிறோம். அந்தப் பிரச்னைகள்தான், மக்களின் மகத்தான வாழ்விற்கு உதவும் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. அவை குறித்த கனவில்தான் அதற்கான தீர்வுகளும் இருக்கின்றன.” என X லேப் பற்றி சிலாகிக்கிறார் டெல்லர்.