Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,091 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிகரிக்கும் BP நோயாளிகள்! – பின்னணியில் அமெரிக்கா

நவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.

தொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, இந்த எண்ணிக்கையில் இன்னும் 6 கோடி அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை, ஒரு பம்பிங் ஸ்டேஷனாக இருந்து நிர்வகிக்கிறது இதயம். ரத்தம் தங்குதடையின்றி ஓட, குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்கவேண்டும். இதயம் சுருங்கி ரத்தத்தை வெளித்தள்ளும்போது, இந்த அழுத்தம் (சிஸ்டாலிக் அழுத்தம்) 120 மி.மீ மெர்க்குரி அளவு இருக்க வேண்டும். இதயம் விரியும்போது இது 80 மி.மீ மெர்க்குரி (டயஸ்டாலிக் அழுத்தம்) இருக்க வேண்டும். இது நார்மல். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தாது. எடை, உயரம், வயது அடிப்படையில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம். அதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு வரையறையை உருவாக்கியது. 100/70 மி.மீ மெர்க்குரி முதல் 140/90 மி.மீ மெர்க்குரி அளவு வரை ரத்த அழுத்தம் இருந்தால் அது நார்மல். 140/90 மி.மீ அளவைவிட அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம் என்றும்,  100/70 மி.மீ அளவைவிடக் குறைந்தால் குறைந்த ரத்த அழுத்தம் என்றும் வரையறுத்தது. இந்த அடிப்படையில்தான் உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில்தான், அமெரிக்க இதய மருத்துவர் சங்கம் (American Heart Association) அந்நாட்டு இதயநோய் ஆராய்ச்சி மையத்தோடு இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. 130/80 மி.மீ மெர்க்குரி அளவு அழுத்தம் கொண்டவர்களுக்கும் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 140/90 மி.மீ என்ற உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவு வரையறையை 130/80 மி.மீ மெர்க்குரி என்று மாற்றியமைக்க அது பரிந்துரைத்துள்ளது. இதனால், 32 சதவிகிதமாக இருந்த அமெரிக்க நாட்டு உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை 46 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே உயர் ரத்த அழுத்தம் வரும் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி, 40 வயதுக்குக் கீழானவர்களையும் நோயாளிகளாக்கி இருக்கிறது இந்தப் புதிய வரையறை.

சரி… ‘இது அமெரிக்காவில்தானே, இங்கு என்ன பிரச்னை?’ என்கிறீர்களா?

‘மருத்துவ உலகத்தின் தாதா’ அமெரிக்காதான். உலகெங்கும் கிளை விரித்துப் பெரும் வணிகம் செய்யும் பகாசுர மருந்து கம்பெனிகள் அங்குதான் செயல்படுகின்றன. உலக மருத்துவத்தைக் கட்டுப்படுத்தும் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் பிடியில்தான் இருக்கிறது. அமெரிக்க மருத்துவர்கள் இன்று என்ன நினைக்கிறார்களோ அது நாளை உலகம் முழுமைக்கும் மருத்துவ விதிமுறையாக அமலாகும். அந்த அடிப்படையில் விரைவில் இந்தியாவிலும் இந்த வரையறை அமலுக்கு வரலாம்.

உண்மையில் உயர் ரத்த அழுத்தத்துக்கான வரையறை குறைக்கப்படுவது நல்ல விஷயம்தானா? இதயநோய் மருத்துவர்கள் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்கவே செய்கிறார்கள். ‘சிவப்பு விளக்கிற்கு முன்பு ஒளிரும் மஞ்சள் விளக்குப் போன்றதே இந்த அறிவிப்பு’ என்கிறார்கள்.

“நோய் குணமாக, முதலில் நோய் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 120/80 மி.மீ என்ற அளவுக்கு மேல் போனாலோ, குறைந்தாலோ சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. 130/80 மி.மீ-க்கு அதிகமானால் நிச்சயம் அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையையும், உணவுப்பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு நோய் முற்றியபிறகு தவிப்பதைவிட, வரும்போதே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அமெரிக்க இதய மருத்துவச் சங்கம் என்பது அமெரிக்காவின் முதல்நிலை இதய மருத்துவர்களைக் கொண்ட அமைப்பு. பல ஆண்டுகள் ஆய்வு செய்து, விவாதித்து இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள்.

இது நாளைக்கே இந்தியாவுக்கு வந்துவிடப்போவதில்லை. ஐரோப்பிய இதய மருத்துவர்கள் அமைப்பு, இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்திய இதயநோய் மருத்துவர்கள் அமைப்பும் இந்த ஆண்டு இறுதியில் விவாதிக்க இருக்கிறது. அதன்பிறகே இதை ஏற்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் சிவ.முத்துக்குமார்.

மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கமும் இக்கருத்தை ஆமோதிக்கிறார். ‘‘வழக்கமாக 130/80 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்தாலே, அவரை ரிஸ்க் பிரிவில் வைப்போம். ஆனால், உடனடியாக மாத்திரைகளைப் பரிந்துரைப்பதில்லை. உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளச் சொல்வோம். உடற்பயிற்சி செய்ய பரிந்துரைப்போம். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளச் சொல்வோம். 140/80 என்ற அளவுக்கு மேலே சென்றால் சிகிச்சையைத் தொடங்குவோம். அமெரிக்க இதய மருத்துவ சங்கத்தின் அறிவிப்பு நல்ல முன்னெச்சரிக்கை. அதனால் இதை ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் பிரச்னை இருக்கப்போவதில்லை’’ என்கிறார் சொக்கலிங்கம்.

உயர் ரத்த அழுத்தம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒரு பக்கம்; உளவியலாக அது மொத்த வாழ்க்கையையும் பாதிக்கிறது. தவிர, ஒரு நோயாளி மாதமொன்றுக்கு 2,000 ரூபாயை மாத்திரைகளுக்காகச் செலவழிக்கிறார். வாழ்நாள் முழுவதும் மருந்து வாங்குகிறார். இந்தச் சூழலில், நோய்க்கான வரம்பைக் குறைத்து, புதிதாக கோடிக்கணக்கான நோயாளிகளை உருவாக்குவதன் பின்னணியில் மருந்து நிறுவனங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

‘‘அமெரிக்க மருந்துக் கம்பெனிகளின் பலம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதுமாதிரியான ஆராய்ச்சிகளுக்குப் பின்புலம் மருந்துக் கம்பெனிகள்தான். சுயமான, சுதந்திரமான மருத்துவ ஆராய்ச்சிகள் எங்குமே நடப்பதில்லை. ரத்த அழுத்தம் என்பது பல்வேறு காரணிகளால் மனிதருக்கு மனிதர் மாறும். தட்பவெப்பம், வாழ்க்கைமுறை, உணவுமுறை, மரபு எனப் பல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு அம்சத்தின் அடிப்படையில் அதைத் தீர்மானிப்பதே தவறு. இந்தியர்களின் உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவு வரையறையை இந்திய மருத்துவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இப்படித்தான், சர்க்கரை நோய்க்கான வரம்பு அளவைக் குறைத்தார்கள். அதனால் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்தனர். இப்போது ரத்த அழுத்தத்தில் கை வைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. காரணம், இந்தியாவில் இப்படியான ஆராய்ச்சிகளே நடப்பதில்லை’’ என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ரவீந்திரநாத்.

‘‘இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் வெறும் ஃபெல்லோஷிப் வழங்கும் பணிகளைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. மோடி அரசு வந்தபிறகு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நிதியை ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு மடைமாற்றிவிட்டார்கள். யு.ஜி.சி, ஐ.சி.எம்.ஆர் போன்ற நிறுவனங்களைச் சுயநிதியில் இயங்கிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இந்தியா, உலகின் மிகப்பெரிய சந்தை. நம் மரபுக்குத் தொடர்பே இல்லாத ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு வந்து கொட்டினார்கள். உடல்நலனுக்கு எதிரான உணவுகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி ஆரோக்கியம் கெட்டபிறகு இப்போது மருந்துகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இன்னும் அவர்களின் சந்தையை விரிவுபடுத்த நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்காக இதுமாதிரி ஆராய்ச்சிகளைச் செய்து எல்லா நாடுகள் மீதும் திணிக்கிறார்கள்’’ என்கிறார், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் காசி.

‘‘மருந்து வணிகம் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் ஏரியா. நம் செல்களிலேயே கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஆனால், அதை எதிரி மாதிரி சித்திரித்து மருந்து வணிகம் செய்கிறார்கள். இப்போது ரத்த அழுத்தத்திலும் நடக்கிறது. ‘ஒயிட் கோட் சிண்ட்ரோம்’ என்று ஒன்று உண்டு. ரத்த அழுத்தத்தை அளவிடும்போது நமக்கு ரத்த அழுத்தம் அதிகமிருக்குமோ என்ற அச்சமே அளவை அதிகரித்துவிடும். மன அழுத்தமும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பல மருத்துவர்கள் முதல்முறை ரத்த அழுத்தம் அதிகமாகத் தெரிந்தாலே மருந்துகளைப் பரிந்துரைத்து விடுகிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கு மேலும் வசதியாகப்போகிறது’’ என்கிறார் மருத்துவரும், செயற்பாட்டாளருமான புகழேந்தி.