Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2017
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,658 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்!

 கனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.

உடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….

 

  1. வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஓரளவு வீடு சுத்தமானபின்னரே பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அடுத்தடுத்து வீட்டிற்குள் அழைக்கப்படவேண்டும்.
  2. வீட்டிற்குள் நுழைந்ததும் எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து முடிந்த அளவு இயற்கையான காற்று, வெளிச்சம் உள்ளே புக அனுமதியுங்கள். காற்றோட்டம் உள் நுழைந்தால் தேங்கியிருந்த மழைநீரினால் உருவான விஷக்காற்று, அருவெறுப்பான நாற்றம் வெளியேறும். நீங்கள் உள்ளே ஆபத்து மற்றும் எந்த சங்கடங்களுமின்றி சுத்தம் செய்ய முடியும்.

  3. வீட்டிற்குள் நுழைந்தபின் மின் இணைப்பு இருப்பதாக அறியவந்தாலும் தயவுசெய்து அவசர கதியில் விளக்குகள் / மின் விசிறிகளின் சுவிட்சுகளை ஆன் செய்யாதீர்கள். மின்கசிவு இருந்தால் ஷாக் அடிக்கக் கூடும். மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன் எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதுபற்றிய அறிவு இல்லையென்றால் செலவைப்பற்றி கவலைகொள்ளாமல் ஒரு எலக்ட்ரி ஷியன் கொண்டு சரிபார்ப்பது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் தேவையான உபகரணங்களுடன் பாதுகாப்பாக (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) செய்யவும்.
  4. வீட்டிற்கு குடியேறியதும் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள். தேவையென்றால் மருத்துவர் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
  5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். ‘பாதுகாப்பாக இருக்கிறோம். இனி ஒரு பிரச்னையுமில்லை’ என்ற நம்பிக்கையை குடும்பத்தினரிடம் ஏற்படுத்த முயற்சியுங்கள்.
  6. பாதிப்பிற்கு முன் வீட்டில் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. நல்லநிலையில் இருப்பதாக தெரிந்தாலும் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிட்ஜ் நல்லநிலையில் இருந்தாலும் அதை ஒரு முறை சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்தவும். காரணம் மின்வசதியின்றி மூடப்பட்ட நிலையில் இருந்ததால், அதில் பரவியிருந்த வாயு வேதிமாற்றத்தினால் துர்நாற்றத்தையும் விஷவாயுவையும் உருவாக்கியிருக்கலாம். அதனால் கண்டிப்பாக இதில் வைத்துவிட்டுப்போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுப்போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான  காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
  8. சுகாதாரத்தின் அடிப்படை கழிவறைகள். அதனால் வீட்டில் குடியேறியவுடன் கழிவறையை உடனே உபயோகிக்காமல் பளீச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் கொண்டு ஓரிருமுறை கழுவி சுத்தம் செய்தபின் உபயோகிப்பது நல்லது.
  9. வீட்டிலிருந்து வெளியேறியதற்கு முன்பு சமையலுக்கு பயன்படுத்தி வந்த சிலிண்டர்கள் நீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தால் அதை பயன்படுவதை தவிர்க்கவும். சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு தகவல் அளித்து பரிசோதித்தபின்னே பயன்படுத்தவும். முழுமையாக மூழ்காத நிலையில் இருந்தால் அதில் வாயுக் கசிவு இருக்கிறதா என சோதித்தறிந்த பின்னரே பயன்படுத்தவும்.
  10. வெள்ளத்தில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு தெரியவந்ததால் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். இதே நம்பிக்கை பாதுகாப்பிற்காக உங்கள் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு, மற்ற பூச்சியினங்களுக்கு எப்போது தெரியவருவது? அதனால் துணிமணிகளை துவைக்கும் முன்பும், உடுத்துவதற்கு முன்னும் அதில் பாம்பு, பல்லிகள் மற்ற சிறுசிறு பூச்சிகள் ஏதேனும் மறைந்திருக்கிறதா என்பதை சோதித்து பார்த்து அணியவும்.

வெள்ளத்திலிருந்து மீண்ட நாம் வேறு எந்த ஆபத்திலும் சிக்காமல் இருக்க கண்டிப்பாக மேற்சொன்ன எச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளகொள்ளவேண்டும்.

வெள்ளத்திலிருந்து மீண்டுவிட்டோம் என மீண்டும் பழைய கதையை தொடராதீர்கள். வெள்ளத்தில் உங்கள் வீடு சிக்கியதில் உங்களது தவறு ஏதாவது உள்ளதா என்று ஆராயுங்கள். இனிவருங்காலத்தில் அந்த தவறுகளை செய்யக்கூடாது என வீட்டிற்குள் நுழைந்த முதல்நாளே முடிவெடுங்கள். இல்லையேல்.. மறுபடியும் ஒருமுறை இதை நீங்கள் படிக்கநேரிடும்…

நன்றி: நீடூர் இன்ஃபோ