இந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்! – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
அது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த சில நாள்களில் சிகிச்சையளித்து முற்றிலுமாகக் குணப்படுத்திவிட முடியும்.
இது, தொற்றா நோய்களின் காலம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய், இதய நோய்கள்… மருத்துவமனைகள் நிறைகின்றன. தொற்றா நோய்களால் இந்தியாவில் ஒவ்வொரு நொடியிலும் 10 பேர் இறக்கிறார்கள். பல்வேறு நோய்களால் உயிரிழக்கும் ஒரு கோடி பேரில் 52 லட்சம் பேர் தொற்றா நோய்களால் இறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொற்றா நோய்களில் மிகப்பெரும் கொள்ளை நோயாக உருவெடுத்து நிற்பவை இதயம் தொடர்பான நோய்கள்தான். உலகச் சுகாதார நிறுவன அறிக்கைபடி, உலககெங்கும் இதய நோய்களால் ஆண்டுக்கு 25 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள்.
முன்பெல்லாம் 50-60 வயதுக்காரர்களுக்குத்தான் இதய நோய்கள் வரும். இன்று, 20 வயது இளைஞனெல்லாம் இதய நோயைச் சுமந்துகொண்டு திரிகிறான். ஸ்டென்ட், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, வேஸ்குலர் ஆக்சஸ் டிவைஸ் (Vascular Access Device), பேஸ்மேக்கர், பைபாஸ் போன்ற வார்த்தைகள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை தொடங்கும் முன்னரே துயரம் சூழ்ந்துவிடுகிறது. காலம் முழுக்க மாத்திரைகள், முற்றினால் அறுவை சிகிச்சை என வாழ்க்கையைப் பெரும் இன்னலில் தள்ளிவிடும் இதயநோய், இன்று சர்வசாதாரணமாக இளம் தலைமுறையைப் பீடிக்கக் காரணமென்ன?
“வாழ்க்கைமுறை மாற்றம்தான் காரணம்” என்கிறார் இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம்.
“நம் பண்பாடு என்பது உணவுக்கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு எனப் பலவற்றை உள்ளடக்கியது. ‘உணவே மருந்து’ என்பதே நம் முன்னோரின் வாழ்க்கை முறையாக இருந்தது. நல்ல உணவு, உணவுக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஓய்வு… இவைதான் நலவாழ்வுக்கான சூத்திரம். கம்மங் களியோ, கேழ்வரகுக் கூழோ சாப்பிட்டுவிட்டுக் கடும் வெயிலில் கடினமாக வேலை செய்வார்கள். உணவு கலோரியாகி எரிந்துபோகும். சரிவிகிதச் சத்துணவைச் சாப்பிட்டு, உடலைப் பாதிக்கும் தவறான செயல்களைத் தவிர்த்து, கட்டுப்பாட்டோடு இருந்ததால்தான் நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி நெடுங்காலம் வாழ்ந்தார்கள்.
ஆனால், இன்று எல்லாக் கட்டுப்பாடுகளும் தளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது. உடல் பருமன், இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம்சர்க்கரை நோய், இதய நோய்கள் என நோய்களை வாசல் திறந்து வரவேற்கத் தொடங்கிவிட்டது உடல். கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு இளம் வயதுக்காரர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
எங்கள் மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்காக வந்த 35 வயதுக்குட்பட்ட 300 பேரைக் கொண்டு ஓர் ஆய்வு நடத்தினோம். புகைபிடித்தலே நோய்க்கான முதல் காரணமாக இருந்தது. உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில், மிகச் சிறு வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கம் உருவாகிவிடுகிறது. புகைப்பிடிப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் நிற்பவர்களுக்கும் இதய நோயைப் பரிசளிக்கிறார்கள்.
புகைக்கு அடுத்தபடியாக உணவுப்பழக்கம் முக்கியக் காரணமாக இருந்தது. உணவுக்கும் தட்பவெப்பத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. ‘இந்த நிலத்தில் வாழும் மக்கள், இதைச் சாப்பிட வேண்டும்’ என்று திட்டமிட்டுத்தான் இயற்கை சில நியதிகளை உருவாக்கிவைத்திருக்கிறது. நாம் அரிசியை முதன்மை உணவாகச் சாப்பிடுவதும், வட மாநிலத்திலுள்ளவர்கள் கோதுமையைச் சாப்பிடுவதும் அப்படித்தான். அந்த உணவுக்கு உடல் கட்டுப்பட்டுச் செயல்படும். இன்று தட்பவெப்பத்துக்குத் தொடர்பில்லாத உணவுகள் எல்லாம் வந்துவிட்டன. சாப்பிடுவது ஃபேஷன் என்றாகிவிட்டது. உடம்பால் அந்த உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. உணவுக்கேற்ற உழைப்பும் இல்லை. அதனால் கொழுப்பாக மாறி, எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் படிந்துவிடுகிறது. நாங்கள் நடத்திய அந்த ஆய்வில் ரத்தக்குழாயில் படிந்த கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்) முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டது.
மூன்றாவது காரணம், ஸ்ட்ரெஸ். இளைஞர்கள் எதையோ தேடி அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வு, உறக்கம் மறந்து வேலைசெய்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பிறகு பணிச்சூழலும் மாறிவிட்டது. குறிப்பாக, ஐ.டி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையும் வேலையும் பிரிக்க முடியாததாக மாறிவிட்டது. அலுவலகச் சூழல் இப்படி இருப்பது, குடும்பத்தையும் பாதிக்கிறது. அது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கிறது.
இவை தவிர, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் என அந்த ஆய்வில் காரணங்கள் நீள்கின்றன. அந்தக் காலத்தில் செய்யும் வேலையே உடற்பயிற்சியாக இருந்தது. இன்று, உடற்பயிற்சிக்கான வாய்ப்பே இல்லை. படிக்கட்டுகளைக்கூடப் பயன்படுத்துவதில்லை. காலையில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால், மாலையில்தான் எழுந்து செல்கிறார்கள். உடல் பற்றிய அக்கறை உணர்வு இளைய தலைமுறையிடம் இல்லை.
உலக அளவில் வளர்ச்சி என்பது, உடல்நலத்தையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது. நாம் அவற்றை எதிர்மறையாகப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டரும், பிற நவீன கண்டுபிடிப்புகளும் நம் உழைப்புத்திறனை வேறு வடிவிற்கு மாற்றிவிட்டன. உடற்பயிற்சி என்பதே இல்லாமல் போய்விட்டது.
உலக அளவில் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களில், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஐந்து முதல் ஆறு சதவிகிதம் பேர். அதுவே இந்தியாவில் 12 முதல் 15 சதவிகிதமாக இருக்கிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஸ்ட்ரெஸ்ஸை நிர்வகிக்கும் திறன், உடற்பயிற்சி ஆகியவற்றை இளைஞர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். சத்தான, நம் தட்பவெப்பத்துக்கு உகந்த, பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத உணவை உட்கொள்ள வேண்டும். அப்படியான மாற்றங்கள் வந்தால் மட்டுமே இதய நோயை வெல்ல முடியும்” என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நின்ற, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதய நோய் வரும். பெண்களுக்கு இயற்கையாகச் சுரக்கும் ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் ஹார்மோன் மாதவிலக்கு நிற்கும்வரை மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இதய நோய் வருவது அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. `உணவுமுறைதான் அதற்கு முக்கியக் காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர, வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகம் மட்டுமில்லாமல் வீட்டையும் நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. இது அதிக மன அழுத்தத்தையும் சோர்வையும் உண்டாக்குகிறது. அதுவும் இதய நோய்களுக்கு முக்கியக் காரணம்.
“பிற நாட்டினரோடு ஒப்பிடும்போது, ஆசியர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு மரபு ரீதியாகவே இதய நோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்கிறார் மூத்த இதய நோய் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜே.கே.பெரியசாமி.
“அமெரிக்கா போன்ற மேலை நாட்டினரின் ரத்தக்குழாய் மூன்று முதல் நான்கு எம்.எம் அளவுக்கு இருக்கிறது. ஆனால், இந்தியர்களின் ரத்தக்குழாயின் அளவு இரண்டு முதல் 2.50 எம்.எம் அளவுக்குத்தான் இருக்கிறது. ஒரு தடவை இதயம் துடிக்கும்போது 70 முதல் 80 மி.லி டாக்டர் ஜே.கே.பெரியசாமிரத்தம் உடம்புக்குள் பம்ப் செய்யப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 80 முறை இதயம் துடிக்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தத்தை இதயம் உடம்புக்குள் பம்ப் செய்துகொண்டிருக்கிறது.
நம் ரத்தக்குழாய்கள் சிறிதாக இருப்பதால், குறைந்த அளவு கொலஸ்ட்ராலே அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதனால் இந்தியர்கள் அதிக அளவில் இதய நோய்க்கு உள்ளாகிறார்கள். மரபு ரீதியாகவே இந்தியர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்தாக வேண்டும். குறைந்தது நாளொன்றுக்கு மூன்று கி.மீ நடப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் அப்படித்தான் நடந்தார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் இதயத்தின் பம்ப் செயல்பாடு அதிகரிக்கும். ஒரு நிமிடத்துக்கு ஐந்து லிட்டர் என்ற அளவு 7-8 லிட்டர் என்று அதிகரிக்கும்போது இயல்பாகவே ரத்தக்குழாய் விரிவடைந்துவிடும். படியும் கொழுப்பும், இயற்கையாக அடித்துச் செல்லப்பட்டுவிடும்.
இப்போது, நடப்பதே அரிதாகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு வாகனம் இருக்கும். இப்போது ஆளுக்கொரு வாகனம். அருகில் இருக்கும் மளிக்கைக்கடைக்குச் செல்ல வேண்டுமென்றால்கூட வாகனத்தை ஸ்டார்ட் செய்துவிடுகிறார்கள். உடம்பை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பணத்தை நோக்கி ஒடிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால், அது உபயோகமற்ற பயிற்சியாக இருக்கிறது. யாருக்கு எது தேவை என்பதில்தான் ஆரோக்கியம் இருக்கிறது. ஆனால், இங்கே ஜிம்முக்குப் போவது ஃபேஷன் என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றிலும் அமெரிக்கர்களை உதாரணம் காட்டும் இளைய தலைமுறை, இந்த விஷயத்தில் கண்டிப்பாக அமெரிக்கர்களைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். உடல்நிலையில் அவர்களின் அளவுக்கு யாரும் அக்கறை காட்ட முடியாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் சனி, ஞாயிறுகளை அலுவலகத்துக்குத் தர மாட்டார்கள். குடும்பத்துக்குத்தான். உடற்பயிற்சியிலும் அவ்வளவு அக்கறை காட்டுவார்கள்.
இதய நோயைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் கவலைகொள்ளத்தக்க நிலையிலிருக்கிறது. உலகச் சுகாதார நிறுவன அறிக்கைப்படி, உலகத்தில் அதிக இதய நோயாளிகள் உள்ள நாடாக நம் நாடுதான் இருக்கிறது. 60 வருடங்களுக்கு முன்னர், 100-ல் இரண்டு பேருக்கு மட்டுமே இதய நோய் இருந்தது. ‘இப்போது 100-ல் 14 பேருக்கு இருக்கிறது. 2020-ல் இது 20 ஆக உயரும்’ என்கிறார்கள். உடனடியாக விழித்துக்கொள்ளாவிட்டால் நிலை மோசமாகிவிடும்” என்கிறார் டாக்டர் ஜே.கே.பெரியசாமி.
வாழ்க்கையில் எங்கேயாவது போட்டி இருக்கலாம். ஆனால், இப்போது வாழ்க்கையே போட்டியாகிவிட்டது. தொலைக்காட்சிகளைத் திறந்தால் போட்டி. பள்ளியில் தொடங்கி அலுவலகம் வரை எல்லா இடத்திலும் போட்டி. மன அழுத்தத்துக்கு சிறு குழந்தைகள்கூட மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த்தப்புவதில்லை. போட்டி தரும் பரிசுதான் மன அழுத்தம்.
திருப்தி அடைவது, மனதை சேலாக வைத்துக்கொள்வது, மற்றவர்களிடம் திறந்த மனதோடு பழகுவது, பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது போன்றவற்றைப் பழக்கங்களாக்கிக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
‘எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும், அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும்’ என்ற மனநிலையில், நிகழ்காலத்தை அனுபவித்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள். சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல், உடல்நலனில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். மன அழுத்தமானது, ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பிற பிரச்னைகளையும் சேர்த்து வளர்க்கிறது. இறுதியில் அது இதய நோயில் வந்து நிற்கிறது. மனச்சுமையை அதிகரித்துக்கொள்ளாமல் ரிலாக்ஸாக இருப்பது, பிடித்த விஷயங்களில் அவ்வப்போது கவனம் செலுத்துவது, குடும்பத்தோடு அதிக நேரத்தைச் செலவிடுவது, நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, மது, புகையில் இருந்து விலகி நிற்பது போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் உடலின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இதய நோயை வெல்ல முடியும்” என்கிறார் மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்த்.
‘இந்த வயசுல ஓடியாடி உழைச்சாதான் 40 வயசுக்கு மேல உட்கார்ந்து சாப்பிடலாம்’ என்று சிறிதும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களே… அக்கறையில்லாத சாப்பாட்டால் கொழுப்பு ஏறி, வேலைச்சூழலால் மன அழுத்தம் ஏற்பட்டு, சம்பாதித்து முடித்து, உங்களுக்கு 40 வயது ஆகும்போது இதயத்துக்கு 70 வயது ஆகிவிடும். பிறகு எங்கே உட்கார்ந்து சாப்பிடுவது..? கவனமாக இருங்கள்!
நன்றி: விகடன்