தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

UserOnline

அச்செடுக்க அச்செடுக்க 2 முறை படிக்கப்பட்டுள்ளது!

மௌலானா அபுல் கலாம் ஆசாத்: இந்தியக் கல்வியின் சிற்பி

“கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்”

என்று நம்பிச் செயல்பட்டவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான இவர், விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த அறிஞர், பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். இவரது பிறந்த நாளான நவம்பர் 11, ஆண்டுதோறும் “தேசியக் கல்வி தினமாக”க் கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு ஆசாத் அவர்கள் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று மெக்காவில் பிறந்தார். சிறுவயதிலேயே குடும்பத்துடன் கல்கத்தாவில் குடியேறினார். பாரம்பரியக் கல்வியுடன் ஆங்கிலம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றையும் ஆர்வத்துடன் கற்றார். “அல்-ஹிலால்” என்ற உருது இதவைத் தொடங்கி, மக்களிடம் தேசிய உணர்வை வளர்த்தார். 1923-ல், தனது 35ஆவது வயதில் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். மத நல்லிணக்கத்தில் இறுதிவரை உறுதியாக நின்றார்.

கல்வி அமைச்சராக ஆற்றிய பணிகள் 1947 முதல் 1958-ல் தாம் மறையும் வரை, சுமார் பதினோரு ஆண்டுகள் அவர் மத்திய கல்வி அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது நாட்டில் கல்வியறிவு மிகக் குறைவாக இருந்தது. அந்த இக்கட்டான சூழலில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள்:

  1. அனைவருக்கும் கல்வி: பதினான்கு வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தினார். கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படைப் பிறப்புரிமை என்பது அவரது அசைக்க முடியாத கொள்கையாக இருந்தது.
  2. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறக் கல்வி சமத்துவம்: கல்வி என்பது நகர்ப்புற மக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் மட்டுமே உரியது அல்ல; அது கிராமப்புற மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் சமமாகச் சென்று சேர வேண்டும் என்பதற்காக அவர் மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
  3. பெண்கல்வி: பெண்கள் கல்வி பெறாமல் சமூகம் முன்னேற முடியாது என்பதை ஆழமாக நம்பினார். பெண்கள் கல்வி பெறுவதன் முக்கியத்துவத்தை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துரைத்து அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  4. உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி: டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் (1948) அமைக்கப்பட்டது. உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் விதமாக ‘பல்கலைக்கழக மானியக் குழு’ (UGC) இவரது காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், நவீன இந்தியாவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் இரு கண்களாகத் தேவை என்பதை உணர்ந்து, இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.
  5. கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி: கல்வி அறிவோடு நின்றுவிடாமல், கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார். இதன் விளைவாக சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி மற்றும் லலித் கலா அகாதெமி போன்ற பெருமைமிக்க தேசிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிறுவனங்கள் இன்று இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

கல்வி பற்றிய சிந்தனை ஆசாத்தைப் பொறுத்தவரை, கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்புக்கான கருவி மட்டும் அல்ல; அது அறிவு, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருசேர வளர்க்கும் மகத்தான சக்தி. மதம், மொழி, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். அறிவியல் மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் வளர்க்கும் கல்வியே உண்மையான கல்வி என்று கருதினார்.

அங்கீகாரம் நாட்டுக்கு ஆற்றிய மாபெரும் சேவைக்காக, 1992ஆம் ஆண்டில் அவருக்கு மறைவுக்குப் பின் இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. இவரது சுயசரிதையான “இந்தியா சுதந்திரம் பெறுகிறது” (India Wins Freedom) இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத முக்கிய நூலாகப் போற்றப்படுகிறது.

முடிவுரை இன்றைய நமது கல்வி அமைப்பின் பல அடித்தளங்களான UGC, IIT-கள், கலை இலக்கிய அகாதெமிகள், அனைவருக்கும் கல்வி என்ற லட்சியம் ஆகியவை மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் தொலைநோக்குப் பார்வையின் பயன்களே ஆகும். கல்வியால்தான் ஒரு நாடு உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற அவரது நம்பிக்கையைப் பின்பற்றி, நாமும் கற்போம்; பிறரையும் கற்கச் செய்வோம்!