Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,413 முறை படிக்கப்பட்டுள்ளது!

கால எந்திரம் என்னும் அதிசயம்

எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை, காலத்தில் பின்நோக்கிப் பயணம் என்பது இயலாத காரியம். ஏனெனில், காலம் என்பது தட்டையானது, முன்னோக்கி மட்டும் நகரக்கூடியது என்கிறார். மேலும், தாத்தாவுடன் முரண்பாடு (?!) (GrandFather Paradox) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, மிஸ்டர் எக்ஸ், காலத்தில் பின்நோக்கிப் பயணப்படுகிறார். அங்கே அவர்  தனது தாத்தாவைக் கொன்று விட்டு, நிகழ்காலத்திற்குத் திரும்புகிறார். எனில், மிஸ்டர் எக்ஸ்ஸின் அப்பா எப்படி உருவாகியிருக்க முடியும்? மிஸ்டர் எக்ஸ் தான் எப்படி பிறந்திருக்கமுடியும்?

இந்தப்பிரச்சினைக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி இகர் நோகிகோவ், இப்படி பதில் அளிக்கிறார்.”இறந்த காலத்திற்கு சென்று ஒருவர் வரலாற்றை மாற்ற முடியாது. அப்படி அவர் அதை மாற்றினால், அவரால் நிகழ்காலத்திற்குத் திரும்ப வரமுடியாது.” இந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் என்ன ஆகும் என்பதை யாராவது இறந்த காலத்திற்கு சென்று வந்தால் தான் சொல்லமுடியும். மேலும், கால எந்திரம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று சில விஞ்ஞானிகள் குழுவும், முடியும் ஆனால் நிறைய செலவாகும் என்று மற்றொரு குழுவும் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படியோ, காலத்தில் பயணம் செய்வது என்பதே ஒரு சந்தோஷமான, ஆச்சர்யமான கற்பனைதான். சிறுவயதில் நான் லயன் காமிக்ஸில் வரும் ஆர்ச்சி கதைகளில், ஆர்ச்சி என்னும் இயந்திர மனிதன், தன் நண்பர்களுடன் காலத்தில் முன்நோக்கியும், பின்னோக்கியும் பயணம் செய்வது, அங்கே சாகஸங்கள் புரிவது போன்ற சம்பவங்களப் படித்து விட்டு, பலமுறை கற்பனைகளில் ஆழ்ந்து, காந்தி வாழ்ந்த காலத்திற்கு நான் செல்வது போலவும், அங்கே கோட்ஸேவைக் கண்டுபிடித்து, காந்தியைக்கொல்லாமல் செய்யும்படி நான் சாகஸம் புரிவதுபோலவும் கற்பனை செய்து, அதைக் கதையாகக் கூட எழுத முயன்றிருக்கிறேன்.

தமிழில் கால எந்திரம் பற்றிய திரைப்படம் எதுவும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்தத் திரைப்படம் ஒன்று தமிழில் “அபூர்வ சக்தி 365” என்றப் பெயரில் வெளியானது. அதில், பாலகிருஷ்ணா கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் கால எந்திரம் மூலம் பயணம் செய்வார். கடந்த காலம் என்பது ராஜாக்களின் காலமாகவும், அங்கே இளவரசியுடன் காதல், அரசருடன் சண்டை என்று திரைக்கதை செல்லும். பெரும்பாலும், கால எந்திரத்தில் பயணம் செய்யும் ஹீரோ, தவறாமல் ஹீரோயினுடன் பயணம் செய்வதுதான் உசிதம். அப்போதுதான் அதில் சுவாரஸ்யமிருக்கும். கூடவே ஒரு காமெடியனும் இருந்துவிட்டால் – பலே!. இந்தப்படத்திலும், இதே மாதிரி தான் ஹீரோ இறந்த காலத்தில் வந்து லூட்டி அடிக்கிறார். பிறகு, எதிர்காலத்திற்கு செல்லுகிறார்கள். அங்கே, பூமியில் ரசாயனமாற்றம் ஏற்பட்டுவிட்டதால், மக்கள் எல்லோரும் பூமிக்கு அடியில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வந்து வில்லனைப்பழி வாங்குகிறார் பாலகிருஷ்ணா. அந்த வயதில் எனக்கு இந்தப்படம் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 3 முறை அந்தப்படத்தைப் பார்த்தேன்.

ஆங்கிலத்தில் எத்தனையோ படங்கள், கால எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றுள் என்னைக்கவர்ந்தப் படம் “Time Machine (2002)”. இறந்துபோன காதலியை, இறந்தகாலத்திற்குச் சென்று, அவளைக் காப்பாற்ற முயல்கிறான் நாயகன். ஆனால், அதிலும் அவள் இறந்துபோகிறாள். இங்கே, ரஷ்ய விஞ்ஞானி இகர் நோகிகோவின் தத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். அதாவது, விதியை மாற்ற முடியாது. பிறகு, நிகழ்காலத்திற்கு வரும்போது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டு, எதிர் காலத்திற்கு செல்கிறான் நாயகன். எதிர்காலத்திலும் கூட வெவ்வேறு ஆண்டுகளுக்குப் பயணப்படுகிறான் . முடிவில், எதிர்காலத்திலேயே தங்கிவிடுகிறான்.

தமிழில் இப்படியொரு சினிமாவை எடுக்கும் ஆற்றல் சிம்பு தேவனுக்கு இருப்பதாகக் கருதுகிறேன். இறந்தகாலம் மற்றும் எதிர்காலக் காட்சிகளில் தன் பின்நவீனத்துவ உரையாடல்கள் மூலம் அவர் வசனத்தில் பின்னி எடுக்கலாம்.எத்தனையோ படங்கள் கால எந்திரத்தைப் பற்றி நான் பார்த்திருந்தாலும், இன்னும் எத்தனைப் படங்கள் இதே தளத்தில் வந்தாலும் சலிக்காமல் பார்ப்பேன்.

(தகவல் உபயம் : விக்கி பீடியா)

நன்றி: பெத்துசாமி