Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2011
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,845 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூதாட்டி தந்த தன்னம்பிக்கை

டாக்டர் கலாம்

அந்தமிகப்பெரும் அழிவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் போன்ற ஓர் இயற்கைப் பேரழிவை நவீன சரித்திரத்தில் இந்தியா கண்டதும் இல்லை. மனமகிழ்ச்சியைத் தரும் மக்களின் நண்பனாய், மீன் வளத்தை அள்ளித் தரும் தோழனாய், கடற்கரை வாழ் மக்களின் மனதோடும் வாழ்வோடும் கலந்திருந்த அற்புதமான கடல், திடீரென்று இப்படி பிரமாண்டமாய்ப் பொங்கித் தன் அலை என்கிற வலையால் ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் என்பது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத ஒன்று.

இந்தோனேஷியாவின் கடல் அடியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் விளைவால் எழுந்த ராட்சஸ அலை, மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 2500 கி. மீ. தூரம் பயணம் செய்து செல்லும் வழியில் இருந்த அந்தமான் தீவுகள், இலங்கைத் தீவு, தமிழ்நாட்டின் பல கடற்கரைப் பிரதேசங்கள், கேரளா, ஆந்திரம் என்று பரவி தன் கொடுங்கோபத்தைக் காட்டி விட்டு, ஆப்பிரிக்காவின் சோமாலியா வரை சென்றுதான் ஓய்ந்தது. அந்தக் கொடும் பயணத்தில் அது காவு கொண்ட உயிர்கள் பல்லாயிரம். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், சென்னை, கடலூர், புதுவை போன்ற இடங்களில் எண்ணற்ற அப்பாவி மக்கள் அதன் கோரதாண்டவத்துக்கு இரையானார்கள். எல்லாமே ஒருசில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டப் பேரழிவு!

ஆனாலும் ஏன் இந்தக் கடல்சீற்றம், திடீரென்று இயற்கைக்கு என்ன நேர்ந்தது, இதைத் தடுத்திருக்க முடியாதா போன்ற எண்ணங்கள் எல்லாம் உடனே விடை கிடைக்க முடியாத அளவுக்கு இருந்தன. ஏனென்றால் சுனாமி என்பது நமக்கு மிகவும் புதிதான ஒரு பேரழிவு. ஜப்பானில் இந்தச் சுனாமி அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்கிற செய்திகள் எல்லாம் மெதுவாக வரத் தொடங்கின.

ஆனால் கடல் பொங்கி தண்ணீர் நகரத்துக்குள் நுழைந்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட போது என் மனம் திடுக்கிட்டது. இது ஒரு சாதாரண இயற்கை அழிவு இல்லை, இது பேரிடர் என்பது புரிந்ததும் என்னால் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்திருக்கவே முடியவில்லை. உடனே பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தமிழ்நாடு அரசாங்கத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு சொன்னேன். அவர்களும் தாமதமின்றி மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் செய்யத் துவங்கினார்கள். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் உடனே தொடர்பு கொண்டு “உங்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்ய உதவி செய்கிறேன் என்றேன்’. அவரும் மின்னல் வேகத்தில் பணிகளைத் தொடங்கினார். சிறப்பாக செயல்பட்டார்.

நேரம் செல்லச் செல்லத்தான் அந்த பயங்கர சுனாமி எத்தனை பெரிய அளவில் அழியாட்டம் போட்டிருக்கிறது என்கிற செய்திகள் தெரிய ஆரம்பித்தன. காலையில் மெரீனா பீச்சில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்களிலிருந்து வேளாங்கண்ணியில் பிரார்த்தனைக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை, மீனவர் குடும்பத்தினரை, சுற்றுலாப் பயணிகளை இரக்கமில்லாத அலை இழுத்துச் சென்றிருப்பது தெரிய வந்ததும் நான் ஆழ்ந்த சோகத்தினை அடைந்தேன். நம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறையச் செய்த அழிவுதான் இது என்றாலும், உடனடியாக ஆக்ஷனில் இறங்க வேண்டிய தருணமும் அதுதானே?

என் அலுவலர்களும், அணியைச் சேர்ந்தவர்களும் உடனடியாக விரைந்து செயல்பட்டார்கள். இதைப் போன்ற எதிர்பாராத அழிவுகளின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடக்கூடிய பல நிறுவனங்களை அழைத்துப் பேசினேன். என்னால் இயன்றவரை தேசமெங்கும் செய்தி கேட்டுப் பதறிய பல அதிகாரிகளை, தொண்டு நிறுவன ஊழியர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தேன். தமிழக அரசுக்கு விரைவாக மீட்புப் பணிகளுக்கான உதவிகள் கிடைக்கிறதா என்று உதவியாளர்களை வைத்து கண்காணித்தபடி இருந்தேன். பல கடல்சார் விஞ்ஞானிகளுடன் பேசினேன். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்களை அழைத்து, சுனாமி எச்சரிக்கை ஆணையத்தை எவ்வளவு விரைவில் அமைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மீட்புப்பணிகளைப் பற்றிய செய்திகள் என்னை வந்தடைந்தபடி இருந்தன.

சுனாமி என்கிற இந்த ஒரே ஒரு சம்பவம், சுவிட்ஸர்லாந்திலும் ஐஸ்லாந்திலும் நான் கண்ட இயற்கைப் பேரழிவு பாதுகாப்பு மையம் போன்றவற்றை இந்தியாவில் உடனே அமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண் டும் என்றுதான் மிகவும் விரும்பினேன். ஆனால் என்னுடைய சக அதிகாரி களிடம் பேசியதைத் தொடர்ந்து, அப்படி உடனே சென்று மீட்பு பணிக்கும், மறுவாழ்வு பணிகளுக் கும் இடையூறாக இருக்க வேண் டாம் என்று முடிவு செய்தேன். நிவாரணப்பணிகள் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே செல்வது அப்பணி களுக்குச் சிறிய அளவிலேனும் தொந்தரவு ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.

அந்த நேரத்தில் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது. உலகத் தின் பரிவும், அவசர உதவிகளும் அங்கே குவிந்து கொண்டிருந்த நிலையில், அவற்றைப் பாதிக்கப் பட்ட மக்கள் பெறுவதற்கான வழிவகை களை மின்னல் வேகத்தில் அரசு செய்து கொண்டிருந்தது. அந்த வேகமான நடவடிக்கைகள் சோகமான நிலை யிலும் சிறிய ஆறுதல்களைக் கொடுத் துக் கொண்டிருந்தன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் திரு ராதாகிருஷ்ணனும், கடலூர் மாவட்ட ஆட்சியாளர் ககன் தீப் சிங் பேடியும் அங்கே சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கடலோர மனிதர்களுக்கான வாழ்வாதாரங் களை மறுபடி பெற்றுத் தருவதற்கு ராப்பகலாக உழைத்தார்கள். ஒரு கணமும் எங்கும் தாமதியாமல் சுனாமியால் பாதிக்கப் பட்ட பகுதிகளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

நான் அந்தப் பகுதி மக்களை அடுத்து சந்திக்க வந்த போது மிகவும் ஆச்சர்யப் பட வைக்கும் முறையில் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு ஓரளவு திரும்பியிருந்தார்கள். தங்களைச் சேர்ந்த பலரின் இன்னுயிர் இழப்பு கள் என்றைக்குமே ஈடு செய்ய முடியாதவை என்றாலும், பொருளாதார ரீதியாகவும், வாழ் வதற்கான அடிப்படை விஷயங்களைப் பெறுவ திலும் அவர்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றது மிக்க ஆறுத லாக இருந்தது. மெல்ல மெல்ல அவர்கள் ஒரு அழிவின் சாம்பலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

வாழ்வின் ஓரங்களில் வசிக்கக் கூடிய மீனவர்கள், தங்கள் கணவர்களை, குழந்தைகளை, மனைவியரை இழந்த வர்கள், ஏழை விவசாயிகள் என்று பலரை நான் சந்தித்த போது இந்த அப்பாவி மக்களை கடல் அநியாயமாகப் புரட்டிப் போட்டு விட்டதே என்கிற தாங்க இயலாத துயரம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் அவர்களின் கண் களில் எப்படிப் பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள் ளக்கூடிய துணிவு துளிர் விட்டிருந்ததை நான் பார்த்தேன்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்து என்னை நோக்கி தள்ளாடிய உருவத்துடன் நடந்து வந்தார் ஒரு 65- 70 வயது மூதாட்டி. அருகில் வந்தவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டார். “”கலாம், கடல்தான் எங்கள் வாழ்க்கை.. உயிர்.. எல்லாமே.. ஆனால் இப்படி நடந்து விட்டதற்காக நாங்கள் கடலைக் கண்டோ, அதன் பிரமாண்டமான சுனாமி அலைகளைக் கண்டோ பயப்படவில்லை.. எங்களின் வெற்றிக்கான போராட்ட உணர்வு, சுனாமி ஏற்படுத்தக் கூடிய தோல்வி உணர்வை ஜெயித்து விட்டது..”’’

இதைச் சொல்லும் போது அந்த மூதாட்டியின் விழி களில் கண்ணீர் தேங்கியிருந்தது. எத்தகைய அழிவிலிருந்தும் மனிதன் மீண்டு வருவான். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வான். தோல்வி தன்னை துவண்டுபோகச் செய்ய விடாத மன உறுதிதான் அவன் சிறப்பு என்கிற உண்மை யை, நம்பிக்கையை அந்த மூதாட்டியின் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. உங்களுக்கும்தானே!

நன்றி: நக்கீரன்