ஈஸியான சுண்டல் செய்யலாமா? செய்ய அடுப்பே தேவையில்லை. ஒரே ஒரு விஷயம், இன்னிக்கு சாயங்காலம் சுண்டல் சாப்பிடணும்னா, நேத்திக்கே முடிவு செய்து கொஞ்சம் தயார் செய்துக்கணும்! ! அதாவது, பச்சைப் பயறு இருக்கில்லையா, (டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்), அதை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணும்.
ஊறிய பின் தண்ணீரை வடித்து, ஒரு துணியில் கட்டி வைத்தால், 10-12 மணி நேரம் கழித்து முளை விட்டிருக்கும்.
இந்த முளை கட்டிய பயறு, உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இதை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம்! இன்னும் சுவை வேணுமா, இத்துடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் – கலந்து சாப்பிடுங்க! இன்னும் மாறுதலான சுவை தேவையா, கொஞ்சம் எலுமிச்சைச் சாறைக் கலந்துக்கோங்க!!
சுண்டல் எங்கேன்னு கேட்கறீங்களா,… இது தாங்க இயற்கைச் சுண்டல்! பழங்காலத்து முறைப்படி சுண்டல் வேணும்னா, கொஞ்சம் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய் தாளித்துக் கொட்டி, லேசாக உப்பும், தேங்காயும் போட்டுச் சுண்டல் தயாரிக்கலாம்! ஆனால், இதற்கு அடுப்பு தேவைப்படும்!!
நாம் இப்போது அடுப்பை உபயோகிக்காமல் சுண்டல் செய்யப் போறோம்! இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் தலைமுறைக்கு ஏற்ற சுண்டலா செய்யணும்னா, முளை கட்டிய பயறுடன், துருவிய காரட், நறுக்கிய தக்காளி, எலுமிச்சைச் சாறு, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுப் பொடியுடன் கலந்தால், ஹெல்த்தி சுண்டல் தயார், அடுப்பில்லாமலே! உங்கள் தேவைக்கேற்ப சிப்ஸ், குர்குரே, கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவை சேர்க்கலாம்!!
இந்த சுண்டலுக்கு இனனுமொரு அட்வான்ட்டேஜ் என்னன்னா, முளை கட்டிய பயறை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்! திடீர் விருந்தாளிகளுக்கு ரெடி சுண்டல் கொடுத்து அசத்தலாம்!
(யாராவது அறிவுஜீவிகள் இதை சுண்டல் இல்லை, சாலட் என்று சொன்னால், சொல்லி விட்டுப் போகட்டும்!! After all, what is in a name, a sundal is a salad is a sundal….)!!