Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,142 முறை படிக்கப்பட்டுள்ளது!

கானல் (சிறுகதை)

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை.

ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது.

“நானா உங்களுக்கு போன்” தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள்.

” யாரு ? ”

” வஜீஹா மாமி ஊட்டுலீந்து ”

ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். இந்த முறை அவன் வீட்டுக்கும் போய் வரவேண்டுமென்ற திட்டமிருந்தது எனக்குள். போன மாதம் கொழும்பில் விபத்தொன்றில் சிக்கி ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறான்.

தொலைபேசி அழைப்பினை எடுத்தேன். மதீனா ராத்தா எடுத்திருந்தார். ஹாரிஸின் மூத்த ராத்தா. அவர்களது உம்மா என்னை அவசரமாகப் பார்க்கவேண்டும் எனச் சொன்னதாகச் சொன்னார். மழை விட்டவுடன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி வைத்தேன்.மனதுக்குள் நிறையக் கேள்விகள் எழும்பி மறைந்தது. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் வருவது எனக்கு இதுதான் முதல் தடவை. அதுவும் வஜீஹா மாமியிடமிருந்து. ஏதும் அவசரமில்லாமல், காரணமில்லாமல் கூப்பிட்டிருக்க மாட்டார்.

மதியச் சாப்பாட்டினை மேசையில் பரத்திவிட்டு உம்மா சாப்பிட அழைத்தார். சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தும் மழை விடுவது போலத் தெரியவில்லை. ஹாரிஸின் வாப்பா அவனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அவனுக்கு மூத்ததாக இரண்டு ராத்தாமார். வாப்பாவின் பென்ஷனில்தான் அவர்களை அவன் உம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார். இப்பொழுது ஹாரிஸும் வேலைக்குப் போவதால் குடும்பக் கஷ்டம் சிறிதளவாவது குறைந்திருக்கவேண்டும்.

அவன் வீடு ஊருக்குள் இருந்தது. நடந்து போவதென்றால் பத்து நிமிடங்களாவது எடுக்கும். சமீனாவிடம் குடையை வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். மண் வீதியெங்கும் சேற்று நீர் தேங்கி அழுக்காகியிருந்தது. நடக்க நடக்க பின் கால்களில் தெறித்தது. பேசாமல் சைக்கிளில் வந்திருக்கலாம்.

சிவப்பு ரோசாவுக்கென ஹாரிஸ் வீட்டு முன் வாயிலில், பதியம் போடப்பட்டிருந்தது. வீதியோடு ஒட்டிய வேலிக்கென வளர்க்கப்பட்ட மரங்களுக்குள்ளிருந்து மல்லிகைக் கொடியொன்று எட்டிப் பார்த்தது. வீட்டு வாயிலில் கூரையிலிருந்து வடிந்த பீலித்தண்ணீரில் சேறு தெறித்திருந்த கால்களைக் கழுவிக்கொண்டு செருப்பைக்கழற்றி வைத்து விட்டுக் கதவைத் தட்டி “ஹாரிஸ் ” என்றபடியே உள் நுழைந்தேன்.

” வாங்கோ தம்பி. ஹாரிஸ் போஸ்ட் ஒபிஸுக்குப் போறனெண்டு சொல்லிட்டு இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தான் போன..வருவான்.. நீங்க இரிங்கோ.” சொன்னபடி உள்ளிருந்து வந்த மதீனா ராத்தாவின் பின்னால் வஜீஹா மாமியும் வந்தார்.

“ஓஹ்..சரி.. மெதுவா வரட்டும்.. ஹாரிஸுக்கு இப்ப எப்படியென்? கால்ல பலத்த அடியெண்டு கேள்விப்பட்டேன். பார்க்க வர எனக்கு லீவு கிடைக்கல்ல. இப்ப நடக்கேலுமா? ” முன் விறாந்தையில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன்.

அருகிலிருந்த கதிரையில் வஜீஹா மாமியும் அமர்ந்து கொண்டே..

” ஓஹ்…நடக்க ஏலும். இப்ப சைக்கிள் மிதிச்சுக் கொண்டுதான் போஸ்ட் ஒபிஸ் போயிருக்கான். ஒரு மாசமா கொழும்பு ஹொஸ்பிடல்ல இருந்தான். நாங்க மூணு நாளைக்கொருக்காப் போய் பார்த்துட்டு வந்து கொண்டிருந்தம்… பெண்டேஜ் வெட்டினாப் பெறகு கூட்டிக்கொண்டு போகச் சொன்ன..போன கிழமைதான் கூட்டிக் கொண்டு வந்தம். கால்ல வீக்கம் இன்னும் இரிக்கு. வாற கெழமயிலிரிந்து வேலைக்குப் போப்போறான். சொல்றதொண்டும் கேக்குறானில்ல. அதுபத்திப் பேசுறதுக்குத்தான் உங்களக் கொஞ்சம் வரச் சொன்னன் மகன். மதீனா..தம்பிக்கு குடிக்க எதாச்சும் ஊத்திக்கொண்டு வாங்கோ” என்றார்.

” ஐயோ.. வாணம் மாமி.. இப்பத்தான் நல்லாச் சாப்டுட்டு வந்தன்.. ஹாரிஸால என்ன பிரச்சினை மாமி ? அஞ்சு நேரம் தொழுதுகொண்டு உங்கட பேச்சைக் கேட்டு வளர்ற பொடியன் தானே”

” அதெல்லாம் முந்தி மகன். அவனுக்கு மூத்ததா ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க.. கல்யாண வயசாகி மிச்சநாள். இவன் என்னடாண்டால் இருவத்தஞ்சு வயசிலேயே ஒரு பிள்ளையப் பழக்கமாக்கிக் கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கச் சொல்றான். ”

வஜீஹா மாமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதீனா ராத்தா வீட்டு மரத்தில் காய்த்த பப்பாளிப் பழமொன்றை துண்டுகளாக வெட்டியெடுத்து ஒரு தட்டில் கொண்டுவந்து என் முன்னால் இருந்த சிறு மேசையில் வைத்து “எடுங்கோ தம்பி” என்றார்.

” அதுவுமொரு சிங்களப்பிள்ள. ஹொஸ்பிடல்ல வச்சுப் பழக்கமாகியிரிக்கு. வீட்டுக்கு வந்த நாள்ல இரிந்து இவன் அடிக்கடி ஒரு நம்பருக்கு கோல் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறதப் பார்த்துட்டுக் கேட்டா இப்படிச் சொல்றான். ஏன்ட உசிர் இரிக்கிறவரைக்கும் இது போல ஒண்ட ஏன்ட ஊட்டுல செய்ய அனுமதிக்க மாட்டன். எங்கட பரம்பரயிலயே இப்படியொரு காரியத்த யாரும் செஞ்சில்ல இண்டைக்கு வரைக்கும். இவன் இப்படி ஏதாவது செஞ்சுக்கொண்டு வந்து நிண்டானெண்டால் இந்த ரெண்டு கொமர்களையும் நான் எப்படிக் கரை சேத்துறது மகன்?” சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாமிக்கு அழுகை வந்துவிட்டது. உடுத்திருந்த சாரி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கேட்டுக்கொண்டிருந்த மதீனா ராத்தாவின் முகமும் வாடிச் சோர்ந்திருந்தது. நான் பேச்சை மாற்ற விரும்பினேன்.

” சின்ன ராத்தா எங்க? காணல்ல? ” என்றேன்.

” அவ தையல் கிளாஸுக்குப் போயிருக்கா. உம்மா சேர்ந்திருந்த சீட்டுக்காசு கிடைச்சு ஊட்டுக்கு ஒரு தையல் மெஷினும் வாங்கிட்டம்.. நானும் தைக்கிறன். அவள் பூப்போடவெல்லாம் பழகோணுமெண்டு சொல்லிக் கிளாஸுக்குப் போறாள். நல்லா சொல்லித் தாராங்களாம். நீங்க பழம் சாப்பிடுங்கோ தம்பி. ”

“மகன்.. அண்ட அசலுல யாருக்கும் தெரியாது. இவன்ட மாமாவுக்குக் கூடச் சொல்லல்ல. நீங்கதான் அவன்கிட்ட இது சம்பந்தமா பேசோணும்..நீங்க சொன்னாக் கேப்பான். நல்ல புத்தி சொல்லுங்கோ அவனுக்கு. அவன நம்பித்தான் நாங்க எல்லோரும் இரிக்கிறம் மகன். ”

” நீங்க கவலைப்பட வாணம் மாமி.. நான் அவன்கிட்ட பேசுறேன். எல்லாம் சரியாகிடும்.. நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வாணம்.” என்று சொல்லியவாறே எழுந்தேன்.

“ஹாரிஸ் வந்தானெண்டால் எங்கட ஊட்டுக்கு வரச்சொல்லுங்கோ.. நான் இன்னும் ரெண்டு நாளைக்கு ஊட்டுலதான் இரிப்பன்.. அவன் வராட்டி ராவாகி நானே வாறேன். போய்ட்டு வாறேன் மாமி ”

செருப்பை அணியும் போது மதீனா ராத்தா ஒரு கறுப்புப் பொலிதீன் பையைக் கொண்டு வந்து நீட்டினார்.

“என்ன ராத்தா இது ? ”

” உம்மாக்கிட்டக் கொடுங்கோ.. மிச்சம் நாளாச்சி அவங்களப் பார்த்து.. நாங்க சலாம் சொன்ன எண்டு சொல்லுங்கோ ”

நான் சரியெனச் சொல்லி, கொடுத்த பப்பாளிப் பழங்களை வாங்கிக் கொண்டு குடையுடன் நகர்ந்தேன். மழை லேசான தூறலாகப் பின் தொடர்ந்தது.

மஃரிபுக்குப் பள்ளிக்குப் போய்விட்டு வருகையில் என்னைத் தேடி வந்த ஹாரிஸ் என் வீட்டில் இருந்தான். அவன் குடித்து விட்டு வைத்திருந்த தேனீர்க் கோப்பையையும் எடுக்காமல் உம்மா அவனது விபத்து பற்றிய கதைகளைப் பரிதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். வாப்பா அவனது காலைக் காட்டச் சொல்லிப் பார்த்தார். நான் அவனை எனது அறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தேன். லேசாக நொண்டியபடியே நடந்துவந்தான். கட்டிலில் அமரச் சொல்லி விபத்து எப்படியானதென விசாரித்தேன்.

“வேலைக்குப் போயிட்டு வரச்சதான்.. பஸ்ஸை நான் இறங்கும் முன்னமே இழுத்துட்டான்..கீழ விழுந்துட்டன்..சின்ன எலும்பு முறிவு.. பெருசாக் கட்டுப்போட்டு உட்டுட்டாங்க.. இன்னம் குளிசை தந்திரிக்கு..குடிக்கச் சொல்லி…”

பிறகு அவனது வேலை பற்றியும், கொழும்பில் தங்குமிடம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு விஷயத்துக்கு வந்தேன்.

” யாரோ ஒரு சிங்களப்புள்ளயொண்டோட பழக்கமாம் ? எப்போலிரிந்து டா? ”

” அது மச்சான்…யாரு உனக்குச் சொன்ன ?”

” அத விடு..நீ சொல்லு.. என்ன பழக்கம்? என்ன விஷயம்..? மறைக்காமச் சொல்லுடா ”

” அது தான் நான் எக்ஸிடண்ட் பட்டு ஹொஸ்பிடல்ல இருக்குறப்ப நல்ல அன்பாப் பார்த்துக் கொண்டது..நான் படுத்திருந்த வார்டுல வேல செய்ற நர்ஸொண்டு..”

” நீ அவள லவ் பண்றியாம்.. கல்யாணம் செய்யப்போறியாம் ? ”

” என் மேல ரொம்ப அன்பு அவளுக்கு.. அவ மேல எனக்கும் விருப்பமொண்டிரிக்கு.. நானின்னும் அவக்கிட்ட அதச் சொல்லல்ல.. ஆனா நான் சொன்னா மறுக்க மாட்டாளெண்டு எனக்கு நல்லாத் தெரியும் ”

” உனக்குப் பைத்தியமாடா மச்சான் ? உனக்கு ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க.. உன்ன நம்பி உன்னோட குடும்பம் இரிக்கு.. நீ இப்படிச் செஞ்சா ஊருல யாரு உன் குடும்பத்த மனுஷனா மதிப்பாங்க ? ”

” ம்ம்..எக்ஸிடண்ட் பட்டுத் தன்னந்தனியா ஹொஸ்பிடல்ல இரிக்கிறப்போ ஊருலிரிந்து எவன் வந்தான் என்னப் பார்க்க? அந்தப் புள்ளதான் பார்த்துக் கொண்டது. கல்யாணமெண்டொண்டு கட்டினா அவளைத்தான் கட்டுவேன்..நீதான் மச்சான் ஹெல்ப் பண்ணனும் ” என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவனிடம் இதற்கு மேல் இது பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்தால் என்ன ?

” அவளுக்கு விருப்பமா இந்த லவ்வுல ? ”

” நான் இன்னும் வெளிப்படையா அவக்கிட்டச் சொல்லல.. நேத்தும் கோல் எடுத்தேன்.. ஒரு ஜாதிக் குளிசையை மறந்து வச்சிட்டுப் போயிட்டனெண்டு மறக்காம பார்மஸில வாங்கிக் குடிக்கச் சொன்னா..”

” அவக்கிட்டக் கேட்காம நீ கல்யாணம் வரைக்கும் கற்பன பண்ணி வச்சிரிக்க ”

” இல்ல மச்சான்.. அவள் கட்டாயம் ஏத்துக் கொள்வாளென்ற நம்பிக்கை எனக்கிரிக்கு. நீதான் மச்சான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். எங்கட ஊட்டுல விருப்பப்பட மாட்டாங்க.. நீதான் எடுத்துச் சொல்லணும் ”

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்காளானேன். வஜீஹா மாமிக்கு சார்பாக இவனிடம் பேச வந்தால் இவன் சார்பாக அவரிடம் பேசப் போகவேண்டும் போலிருக்கிறது.

“சரி.. அப்ப நாளைக்கே கேட்டுப்பாரு… நான் வேலைக்குப் போறதுக்கு முந்தி ஏதாச்சும் ஒண்டு செஞ்சு வச்சிட்டுப் போறேன் ”

இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் திரும்பவும் மழை பிடித்துக்கொண்டது. சேற்றுப்பாதையில் சைக்கிள் மிதித்து விழுந்து தொலைத்தால் திரும்பவும் விபரீதமென சைக்கிளை எனது வீட்டில் வைத்து விட்டுக் குடையைக் கொடுத்து நடந்து போகச் சொல்லியனுப்பினேன். அவன் போய் வெகுநேரமாகியும் எனக்குத் தூக்கம் வரவில்லை.

மழை விட்டிருந்த மறுநாட் காலை பத்து மணிக்கெல்லாம் வந்த அவனது தொலைபேசி அழைப்பு எங்கிருக்கிறேனெனக் கேட்டு உடனே என்னைச் சந்திக்கவேண்டுமெனவும் வீட்டிலேயே இருக்கும்படியும் உடனே வருவதாகவும் சொன்னது. நான் காத்திருக்கத் தொடங்கினேன்.

குடையைத் தந்தவனின் முகம் சோர்ந்துபோயிருந்தது.. வீட்டில் ஏதாவது பிரச்சினை பண்ணி விட்டு வந்திருப்பானோ ? மேலும் என்னை யோசிக்கவிடாமல்

” போன்ல அவக்கிட்டப் பேசினேன் ” என்றான்.

” ஓஹ்..என்ன சொன்னா? ”

” ஒரு நோயாளிய அன்பாப் பார்த்துக்கொள்றது நர்ஸ்மாரோட கடமையாம்.. அவளுக்கு என்னை மாதிரியே ஒரு நானா ஆர்மில இருக்கானாம்.. அதனாலயும்தான் அன்பாப் பார்த்துக்கொண்டாளாம் ”

” ம்ம்..நல்ல விஷயம். நீதான் தப்பாப் புரிஞ்சுக்கொண்டிரிக்கிறாய்..நீ கேட்டதுக்கு அவ கோபப்படாமயா இரிந்தா ? ”

” இல்லடா.. நான் கேட்ட உடனே சிரிக்கத் தொடங்கிட்டாடா மச்சான்.. அவளுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு வயசுல ஒரு புள்ளயும் இரிக்காம்” என்றான்.

சொற்குறிப்புக்கள்:
* ஊடு – வீடு
* ராத்தா – அக்கா
* உம்மா – அம்மா
* வாப்பா – அப்பா
* அண்ட அசலுல – அயலில்
* குளிசை – மாத்திரை
* நானா – அண்ணன்

நன்றி: விகடன்