Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2013
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,840 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீலாத் விழா நபி வழியா? புது வழியா?

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)

ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதான எமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர்.

அல்லாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக மீலாத் விழாவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அனாச்சாரங்கள் பல ஊர்களில் வழக்கொழிந்து போனாலும் சில பிரதேசங்களில் இன்றும் இவை அரங்கேற்றப்பட்டு வருவதால் அது தொடர்பான தெளிவுக்காக இவ் ஆக்கம் வரையப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பது விசுவாசத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். தூதர்(ஸல்) அவர்களை நேசிக்காத ஒருவர் ஒருபோதும் விசுவாசியாக இருக்க முடியாது. இதை அருள்மறை பின்வருமாறு கூறுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி(முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’ (அல்குர்ஆன் 33:06)

மேலும், ஒரு மனிதனின் பெற்றோர், உற்றார், உறவினர், சொத்து, செல்வங்கள் அனைத்தையும் விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேசத்திற்குரியவர்களாக மாறாத வரை அவர் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை(நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உமர்(ரழி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹிஷாம்(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6632)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்?
அருள்மறையாம் திருமறை கூறுகின்றது. ‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!’  (அல்குர்ஆன் 03:31)

அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.

மேலும், திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 4:65)

மீலாது விழாவின் தோற்றம்
இஸ்லாமிய வரலாற்றில், அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் பாத்திமா(ரழி) அவர்களின் பரம்பரையினர் எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி(ரழி) அவர்களே நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள் என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’  எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி(ரழி), ஹுசைன்(ரழி), ஹஸன்(ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா(பிறந்த நாள்) கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.

எனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப்பட்டவையேயன்றி அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மார்க்கம் நிறைவு செய்யப்பட்டு விட்டது

‘அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்(துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தி னார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார்கள். மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்த வர்கள் என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு இது நஹ்ர் உடைய(துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னோம். நபியவர்கள், இது எந்த ஊர் இது புனித நகரமல்லவா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களது மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா எனக் கேட்டார்கள். நாங்கள் ஆம்(தெரிவித்துவிட்டீர்கள்) என்று பதிலளித்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)

மேலுள்ள நபிமொழி அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள்; மார்க்கத்தில் மிகச் சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும் எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது. மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என ஒருவர் வாதிடுவாராயின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது விழா போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை அல்லாஹ்வின்; தூதர்(ஸல்) அவர்கள் சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பதாகிவிடும். மேலும், அருளாளன் அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகின்றான்.

‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக் காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)

மீலாத் விழா மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் போது மேலுள்ள அருள்மறை வசனத்தை மறுத்தவர்களாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களா கின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அல்லாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)

மாற்று மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்
பிறந்த நாள் கொண்டாடுவது கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும். ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: அபூதாவுத்-4033)

மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.

மீலாத் விழா புது வழியே!

மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த நபிவழியல்ல. மாறாக, மனிதர்கள் தங்களது உலகாயுத நோக்கங்களுக்காக உருவாக்கிக் கொண்ட புது வழியே என்பதை அறிந்து கொண்டோம். இவ்வாறு மனிதர்களாக மார்க்கம் என்ற பெயரில் தூதரை கேலி செய்யும் விதமாக புதுவழிகளை தோற்றுவிப்பது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழி இவ்வாறு எடுத்தியம்பு கின்றது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)

‘செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)

மேலுள்ள நபிமொழி மீலாத் விழாவும் அது தொடர்பான நிகழ்வுகளும் எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.

‘உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)

இன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்து போய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில் இஸ்லாத்தின் இனிய போதனைகள் விதைக்கப்பட வேண்டிய மாணவப்பருவத்தினரின் பிஞ்சுநெஞ்சங்களில் இம்மீலாது எனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது மோகத்தை ஏற்படுத்தும் இத்தீய கலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவ சமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது? நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில்  தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது? அன்றாட நடவடிக்கைகளில்  தூதர்(ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக்கருதாது அருள்மறைக் குர்ஆன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர்(ஸல்) அவர்கள் மீதான உண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக!

நன்றி: முஹம்மட் அர்ஷாத் அல் அதரி – தாருல் அதர்