சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பது, சேது சமுத்திர திட்டத்தின் ஒரு இடமான ஆதம்ஸ் பாலப்பகுதிக்கு மட்டுமே பொருந்தும். இன்னொரு இடமான பாக் ஜலசந்தி பகுதிக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஆனாலும், அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பணிகள் அனைத்தும் முடக்கி வைத்துள்ளனர். இதனால், வரும் ஜுலை வரப்போகும் பச்சவுரி குழு அறிக்கைக்கு பிறகும் கூட, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபடுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, கடந்த ஆட்சியில் முனைப்பு காட்டப்பட்டு அதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்றன. சேது சமுத்திர திட்டத்தின் பணிகள் என்பது இரண்டு இடங்களில் நடைபெற்று வந்தன. ஒன்று ராமர் பாலம் என்று கூறப்படும் ஆதம்ஸ் பாலப்பகுதி. இன்னொன்று பாக் ஜலசந்தி பகுதி. இந்த இரண்டில் ஆதம்ஸ் பாலப்பகுதி தான் சர்ச்சையில் சிக்கியது. ராமர் பாலம் இருப்பதாகவும், அதை சேது சமுத்திர திட்டத்திற்காக இடிப்படுவதை ஏற்க முடியாது என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதையடுத்து, விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனது. பெரும் இழுபறிக்கு பிறகு ஆதம்ஸ் பாலப்பகுதியில் நடைபெறும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஆதம்ஸ் பகுதியில் முழு வீச்சில் நடைபெற்ற பணிகள் அனைத்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவால் அப்படியே நின்றன. ஆனாலும், சேது சமுத்திர திட்டத்தின் இன்னொரு இடமான பாக் ஜலசந்தி பகுதியில் பணிகள் நிறுத்தப்படவில்லை. இன்னும் சொல்ல போனால், அந்த பகுதியில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. 2005 முதல் 2009ம் ஆண்டு வரை பாக் ஜலசந்தி பகுதியில் மணல் அள்ளப்பட்டு வந்தது. இத்திட்டத்தின்படி, அள்ளுகின்ற மணல் மீண்டும் படியும் என்பதால், அந்த மணலை திரும்ப திரும்ப அள்ள வேண்டும். மேலும், எவ்வளவு சதவீதம் வரை மணல் படிகிறது என்றும், எத்தனை வேகத்தில் மணல் படிகிறது என்பது குறித்தும், கண்காணித்து உரிய முறையில் மணல் அள்ளப்பட்டு வர வேண்டும்.இந்த பணிகள் அனைத்தும் என்ன காரணத்தினாலோ நடைபெறவில்லை.
அரசியல் ரீதியாக ஏற்பட்ட மாறுபட்ட சூழ்நிலைகளும், சேது சமுத்திர திட்டத்தை அந்தரத்தில் தொங்க வைத்து விட்டன. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பொருந்தாத பகுதியான, பாக் ஜலசந்தி பகுதியில் பணிகள் நடைபெறாமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. ஆனாலும், அந்த பகுதியில் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதில், மத்திய அரசு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு கிடக்கின்றன. மணல் படிவது குறித்து ஏன் ஆய்வு நடத்தவில்லை என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில், ஆதம்ஸ் பாலப்பகுதியில் சர்ச்சைக்குரிய ராமர் பாலத்தை உடைக்காமல், தனுஷ்கோடி வழியாக தரையை தோண்டி வழி ஏற்படுத்த முடியுமா என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு, விரைவில் பதில் கிடைக்கவுள்ளது. “நான்கு ஏ’ என்று பெயரில் அழைக்கப்படும் அந்த பாதை சாத்தியம் தானா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, 2008ல் பச்சவுரி கமிட்டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த கமிட்டியும் நான்கு, ஐந்து முறை கூடி, ஆலோசனையும் நடத்தி இறுதியாக கோவாவில் உள்ள தேசிய கடலாராய்ச்சி மையத்திடம் பணியை ஒப்படைத்தது.
2010 பிப்ரவரியில் தனது ஆராய்ச்சியை துவங்கி இந்த மையம் நடத்தி வந்தது. 2.5 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, இந்த ஆராய்ச்சி நடந்து முடிந்து, வரும் ஜுலையில் தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டிடம் பச்சவுரி கமிட்டி அளிக்கவுள்ளது. அந்த அறிக்கைக்கு பிறகு, சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தடை உத்தரவு பொருந்தாத பகுதியான பாக் ஜலசந்தியில், எந்த காரணமும் இல்லாமலேயே பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. பச்சவுரி கமிட்டியின் அறிக்கை கிடைத்த பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, மாற்றுப் பாதையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், திரும்பவும் பாக் ஜலசந்தி பகுதியில் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
இந்த திட்டத்தை ஆரம்பித்த போது, 2,427 கோடி ரூபாய் வரை மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 2009ல் இந்த திட்டத்தின் செலவு மதிப்பு என்பது 4,000 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த உயர்த்தப்பட்ட செலவு தொகைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டதா என்பதும் தெரியவில்லை.சேது சமுத்திர திட்டத்தின் மணல் அள்ளும் பணிகளுக்காக மட்டும் இதுவரைக்கும் 699 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை கொட்டி செலவழித்த இந்த திட்டத்தை நிறைவேற்ற, அதிகாரிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது மத்திய அரசோ என எந்த தரப்புக்குமே ஆர்வம் காட்டாமல் உள்ளது சரியா என்பதே முக்கிய கேள்வி. (நமது டில்லி நிருபர்)
நன்றி: தினமலர்