Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2005
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,872 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கையே விளையாட்டாய்…

மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் பெடாலிங்ஜெயா! மஹ்மூதுக்கு அதிகாலையிலேயே வழிப்பு வந்துவிட்டது வழக்கம் போல! கையை ஊன்றி படுக்கையிலீரந்த எழ முயன்றான்.

வலதுகை உள்ளங்கை தரையில் படிந்ததும் ‘சுரீர்’ என்று பலித்து – முதல் நாள் பட்டதீக்காயத்தை நினைவுபடுத்தியது! – கையைத் தடவி விட்டுக்கொண்டான்! -அன்று விடுமுறையாதலால் குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையில் எல்லோரும் உருண்டு கிடந்தார்கள்! அவர்கள் காலை பத்துப் பதினோரு மணிக்கு எழுந்தாலே பெரிய காரியம்.

மெல்ல எழுந்து, யாரையும் மிதித்து விடாமல் படுத்துக் கிடந்தவர்களை ஜாக்கிரதையாகக் கடநது, பாத்ரூமுக்குச் சென்றான்.

அந்த விஸ்தாரமான அறையின் சுவர்களில் அடுக்கடுக்காய் சிமெண்ட் அலமாரிகளில் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த பழைய மோஸ்தர் சூட்கேஸைத் திறந்தான்! மேலேயே கிடந்தது அந்தக் கடிதம்

00000

இங்கே தமிழ்நாட்டு கடற்கரைக் கிராமத்தில் சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தாள் சபிய்யா! சுவரிலிருந்த மணி ஏற்கனவே எட்டாகிவிட்டிருந்தது! கோபம் ஜிவ்வென்று ஏறியது அவளுக்கு!

பக்கத்தில் படுத்துக் கிடந்த மகள் பாரிஸாவின் முதுகில் படீர் என்று ஒன்று வைத்தாள – சுளீர் என்ற அந்த அடியில் துள்ளி எழுந்து மலங்க மலங்க விழித்தாள் 13 வயது பாரிஸா.

-” ஏண்டி! காலை ஆறுமணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? அப்படி என்னடி பொணமாட்டம் ஒரு தூக்கம் உனக்கு?” என்றாள் முறைத்துக்கொண்டே! பாரிஸாவுக்குப் புரிந்தது!

எதற்காவது அதிகாலையில் எழவேண்டியிருந்தால் அந்தப் பெரிய மனுஷியின் துணையைத்தான் நாடுவாள் சபிய்யா!

காலையில் மதரஸாவுக்குப் போவதற்காக எழுந்து பழக்கப்பட்டவள் – ஆனால் கடந்த சில மாதங்களாக அவள் மதரஸாவுக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டாள் அம்மாக்காரி! ‘அதுலாம் ஓதுனது போதும் – ஒழுங்காவூட்டு வேலையைக்கத்துக்க!’ என்ற அவளது ஆலோசனையை ஏற்கப்போக, இப்போது அவளுமே எட்டு மணிக்கு எழும் பழக்கம் வந்து விட்டது!

இந்தச் சனியன் புடிச்சவளெ நம்பிக்கிட்டுக் கெடந்தது தப்பாய்பாேச்சேடா அல்லா!” என்றபடி கையை ஊன்றி எழ முயன்றாள்! கைநிறைய அப்பியிருந்த காய்ந்துபோன மருதாணி உறுத்தியது!

அதை உற்றுப் பார்த்தவள் கொஞ்சம் மருதாணியைப் பிய்த்து நன்றாகச் சிவந்திருந்தது என்ற திருப்தியில் எழுந்து பரபரப்பாக கிணற்றடிக்கு ஓடினாள்.

00000

இடுப்பில் சொருகியிருந்த சிகரெட் லைட்டரை எடுத்துப் பொருத்தி அந்த விடிந்தும் விடியாத இருள் படர்ந்த காலைப் பொழுதில் அந்தக்கடிதத்தை மேலும் ஒரு தடவை படித்தான் மஹ்மூது!

பலமுகங்கள் மனக்கண்ணில் வந்துபோயின மன்சூரின் நினைவு வந்ததும் மனதில் ஒரு தெளிவு! அதுவரை அவனைப் பயன்படுத்திக்கொண்டதில்லை! இளவயதிலிருந்து நெருக்கமானவன் – சபாக்பர்ணத்தல் முப்பது வெள்ளிச் சம்பளத்தில் ஒரே கடையில் வேலை பார்த்தவர்கள் அவர்கள்!

ஒரு முடிவுக்கு வந்தவனாய் மளமளவென்று காலைக் கடன்களை முடிக்க ஆரம்பித்தான்.

00000

அவசரம் அவசரமாக காலை வேலைகளை முடித்துக் கொண்டு சபிய்யா புறப்பட்டாள்.

‘அம்மா பகலைக்கு என்ன செய்ய?’ என்றாள் பாரிஸா.

‘நைனாம்மது கடையிலெ மீன் சாப்பாடு வாங்கித் தின்னுங்க. நான் மத்தியானத்துக்கு மேலே தான் வருவேன்” என்று சொல்லிக்கொண்டே கதவைச் சாத்தக்கூட மறந்தவளாக ஓடும் அம்மாவைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள் பாரிஸா.

00000

மஹ்மூது, மன்சூரின் வீட்டை அடைந்தபோது மணி எட்டரையாகிவிட்டது.

‘என்ன மஹ்மூமதண்ணே விடியக்காலைலெ இந்தப் பக்கம்?’ விசாரித்துக்கொண்டே கதவைத் திறந்தான் மன்சூர்.

ஊருக்கு அவசரமாக் கொஞ்சம் பணம் அனுப்பணும். கடனா..” தன்தேவையை மஹ்மூது வெளிப்படுத்திய போது மன்சூரின் முகத்தில் இல்லாமையின் ரேகைகள் சோகமாய் விரிந்தன.

“நைட்பஜார் வியாபாரத்தை அரசாங்கம் எடுத்துவிட்டு வெளியில் இடம் ஒதுக்கியதிலிருந்து வியாபாரம் மந்தம் தான். போட்டி மலாய்க்கார வியாபாரிகளுக்கு மத்தியில் முதலைத் தேத்தவே சிரமப்படும நிலையிலெ எப்படிக் கடன்கொடுத்து உதவுறது?” மன்சூர் இந்த பதிலில் தன் நிலைமையை ழுமுமையாய் வெளிப்படுத்தி விட்டான்.

அறைக்குத் திரும்பிய மஹ்மூதுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை – வீண் அலைச்சலும் செலவும்தான்! பசி வேறுவயிற்றைக் கிள்ளியது – இரண்டு மூன்று வெள்ளி காலியாகிவிடும் என்பதால் வெளியில் டிபன் சாப்பிடாமல் வந்துவிட்டான் அவன் – 12 மணியானால் வழக்கமாச் சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாமே!

அவன் எப்போதும் இப்படித்தான்! ஐந்து பைசா செலவானாலும் அதை முடிந்தவரை தவிர்க்கப்பார்ப்பான்! அப்படி எறும்பாய்ச் சேர்த்து அனுப்பியும் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலைதான்!

அந்த அறையில் தங்கியிருக்கும் அத்தனைபேருக்கும் அவன் ஒரு கேலிப் பொருள் போல்தான்! மஹ்மூதுக்கு மனம் சோர்ந்து போயிருந்தது – அறையில் இருக்கும் யாரிடமும் பணம் புரட்ட வழியில்லை – ஏற்கனவே சிலருக்கு அவன் வெள்ளி கொடுக்க வேண்டியிருந்தது! மனைவியின் அந்தக் கடிதத்தை மறுபடியும் எடுத்துப்படித்தான்! – கண்கள் கலங்கின.

அவனது சொந்த மாமி மகள் அவள்! இளவயதிலிருந்தே அவன் மீது அவனுக்கு ஒரு ஈடுபாடு! கொஞ்சம் அழகானவளும் கூட! தனக்குத்தான் அவள் என்று அவன் ஊக்கமாயிருந்தபோது திடீரென்று போட்டிக்கு முளைத்து விட்டான் “மெத்த வீட்டு” முஹ்ஸின்!  இருந்தாலும் மலேசியா சபுராளி என்ற கனமான ஆயுதத்தால் அவனை வீழ்த்திவிட்டு அவளைக் கைப்பிடித்துச் சாதனை புரிந்தான்!

சமீப காாலமாகத்தான் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லை – வருமானத்துக்கு மேல் செலவு – எப்போதும் பஞ்சப்பாட்டு – பணம் பணம் என்று பிய்த்தெடுக்கிறாள்.

அவள் மீது கோபம் கொள்ளவும் முடியவில்லை – ஏதாவது சொன்னால், ‘அந்த மெத்தை வீட்டு’ முஹ்ஸீனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தா எனக்கு இந்த கதி வந்திருக்குமா? என்று வெடுக்கென்று சொல்லி விடுகிறாள். அந்தப் பயல் வேற அப்படி இப்படி இருந்து, ஏதேதோ தில்லுமுல்லு செய்து இன்று ஊரில் பெரும் புள்ளியாகி விட்டான் – பங்களா, கார் என்று படோடாபமான வாழ்க்கை! கடிதத்தை மஹ்மூது திரும்பத் திரும்பப் படித்தாலே பணத்துக்காக யாரிடமோ வாய்விடப் போகிறான் என்பதை அறிந்திருந்த அறைக் கூட்டாளிகள் இயன்றவரை அவனிடமிருந்து விலகியே நின்றார்கள்! கன்னங்களில் கை கொடுத்தவாறு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான்.

திரும்பத் திரும்ப அந்தக்டித வரிகளே மனதில் நிழலாடின! “என்ன உசிரோட பாக்கனுமுண்டா இந்தக கடிதத்தை தந்தி மாதிரி பாவிச்சு உடனே பத்தாயிரம் அனுப்புங்க” அவன் ஒரு முடிவோடு எழுந்தான்.

00000

தவணை முறை விற்பனைக் கடைக்கு முன் இறங்கிக் கொண்ட சபிய்யா இரண்டு ரூபாயை எடுத்து நீட்டினாள்.

“என்னது?’ என்றான் கடுகடுப்போடு ரிக்ஷாக்காரன் “கொஞ்ச தூரந்தேனேப்பா” என்றாள் சபிய்யா.

“சரியான ஆளும்மா நீ – எடும்மா அஞ்சு ரூபாய்” என்றான் அதிகாரத்தோடு.

சபிய்யாவுக்கு ஆத்திரம் வந்தது – ஏதோ சொல்ல வாயை எடுத்தாள். ஆனால் அதற்குள் சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்ப்பது தெரிந்தது! உடனே ஐந்து ரூபாயை எடுத்து வீசிவிட்டு கடைக்குள் நுழைந்தாள்! ‘வாங்கம்மா! வாங்க! என்று குழைந்து வரவேற்றனர் கடைப் பணியாளர்கள்.

சபிய்யா வாய் நிறையச் சிரிப்போடு சென்று அங்கு கிடந்த ஸடூலில் உட்கார்ந்து கொண்டாள்.

கை்பையைத் திறந்து ரூபாயை எடுத்து மேஜை மீது வைத்தாள்!

‘டேய்! அந்த சுமீத் மிக்ஸியை பேக் செஞ்சு அம்மா கிட்ட கொடு’ என்று உத்தரவு பிறப்பித்தார் முதலாளி!

ஆயிற்று! புருஷனை கழுவாக்கரைத்து வீடு கட்டியாகி விட்டது! வீட்டுக்கு வேண்டிய – வேணடாத தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் வாங்கி குவித்தாகிவிட்டது! டி.வி -ஸ்டீல் பீரோ என்று காலுக்கும் வைக்கும் சாமான்கள்! – இப்போது அவள் கண் ஐஸ் பெட்டியிலும், வாஷிங்மெஷினிலும்தான்! மொத்தமாக இருபதாயிரம் வரும்.

00000

மதிய உணவை முடித்துக் கொண்டு மஹ்மூது பல இடங்களில் ஏறி இறங்கினான். பலன் தான் பூஜ்யம்! ஏதாவது ஒரு காரணம் சொல்லி பலரும் நடழுவிக் கொண்டார்கள் – அவர்கள் சூழ்நிலை எப்படியோ?

அதிகபட்சம், ஐயாயிரம் கூட அனுப்ப முடியாது என்பது மஹ்மூதுக்கு நன்றாகப் புரிந்தது! இப்போதைக்கு அதை அனுப்புவதென்றும் அடுத்த சில நாட்களில் முயன்ற பாக்கியை அனுப்புவது என்ற முடிவுடனும் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மஹ்மூது!

மனைவியின் நச்சரிப்பு அவனுக்கு மனவேதனை தந்தாலும் அதைக்காட்டிக் கொள்வதில்லை. தன் பொருளாதார பலவீனத்தை அவள் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைத்தான். அதனால் அவள் கேட்கக் கேட்க, கடன் உடன் வாங்கியாவது அனுப்பியே பழக்கப்படுத்தி விட்டான்.

அது ஒரு ரோட்கிராஸிங் – ஏதோ நினைவில் கூட்டத்தோடு கூட்டமாக ரோட்டைக் கடக்க ஓடியபோது, கொஞ்சம் பின்தங்கிவிட, சிக்னல் கிடைத்தவுடன் விரைந்த டெம்போ ஒன்று லேசாக வலது கையை உரசிக்கொண்டு போனது.

மணிக்கட்டே உடைந்துபோனது போல வலி! துடிதுடித்துப் போனான் மஹ்மூது!

கீழே விழுந்து விடாமல் ஒரு வகையாகச் சமாளித்துக் கொண்டான்.

அருகில் நின்றவர்கள் ஒரு டாக்ஸியில் வைத்து ஒரு பிரைவேட் நர்ஸிங்ஹோமுக்கு அனுப்ப – அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மஹ்மூதுக்கு அழுகையே வந்துவிட்டது!

ஆஸ்பத்திரியில் தெரிந்த ஒரு பணியாள் மூலம் தகவல் சொல்லி, வீட்டிலுள்ள நண்பர்கள் வந்து பார்க்க இரவாகி விட்டது. வந்தவர்கள் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள். சொல்லி – ஏதோ கையிலிருந்த கொஞ்சம் வெள்ளிகளையும் கொடுத்து விட்டுப் பறந்தார்கள்.

அடுத்த நாள் தொழிலுக்கு சாமான் தோது பண்ணியாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு!

கையில் லேசான எலும்பு முறிவு என்பதால் ஆறு வாரங்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்! கைச்செலவுக்குப் பணம் தேவைப்படும் என்பதால் அனுப்ப நினைத்த ஐயாயிரத்தையும்கூட அனுப்ப முடியவில்லை.

இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் மஹ்மூது!

நடுநிசியிருக்கும் – நெஞ்சில் ஒரு வகைக் காந்தல்! அவன்படும் அவஸ்தைகளைக் கவணித்துக்கொண்டிருந்த டியூட்டி நர்ஸ் ஒடி வந்து அவன் உடம்பைத் தொட்டுப் பாாத்தாள்!

‘மை காட்’ என்றபடி பரபரப்போடு மேஜைக்குச் சென்று டியூட்டி டாக்டரை இன்ட்டர்காமில் அழைத்தான்!

00000

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. கணவனிடமிருந்து கடிதம் வரவில்லை. – அவள் கேட்டிருந்த பணமும் வந்து சேரவில்லை.

சபிய்யாவுக்கு ஏகமான கோபம்!

திட்டமிட்டிருந்தபடி அந்த  ஃபிரிட்ஜையும் வாஷிங்மெஷினையும் வாங்கிக்கொண்டு வரமுடியாதது அவளுக்குப் பெருத்த அவமானமாகப்பட்டது. அந்தக் கடைக்காரன் அவளைப் பற்றி என்ன நினைப்பான்? முதலில் ஃபிரிட்ஜை மட்டுமாவது வாங்கி விட்டால் என்ன? என்று நினைத்தாள்! திட்டமிட்டப்படி இரண்டையும் வாங்குதே நல்லது என்றது போலி கெளரவம்! அது தான் இறுதியில் வென்றது! பசிக்கிறது என்பதால் புலி புல்லைத் தின்று விடுமா என்ன? ஆனால், இந்தப் பொருட்களை உடனடியாக வாங்க முடியாததால் எரிச்சலோ எரிச்சல்!

அதை எழுத்தாக்கினாள் புருஷனுக்கு!

“உங்களுக்கு என்னப்பத்தி – என் உசிரப்பத்தி கொஞ்சமாவது அக்கறையிருந்தா இப்படி கண்டுக்காம இருப்பியளா? இவ செத்தா இன்னொருத்தின்னு நெனைக்கிற ஆம்பிளக் கூட்டந்தேனே, நீங்க” என்று காரசாரமாக எழுதி கடிதத்தை போட்டாள்.

00000

கைவலி குறைந்திருந்தது. ஆனால், அன்று ஏற்பட்ட நெஞ்சுவலி அவனைப் பாடாய்ப்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும்! மோசமான ஹார்ட்அட்டாக் என்று சொல்லி அவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் போட்டு விட்டார்கள்!

அப்படி இப்படி இரண்டு வாரங்கள் ஆஸ்பத்திரிவாசம்! என்னதான் இலவச வைத்தியம் என்றாலும் கைக்காசு செலவழிக்காமல் முடியுமா?

காசு முழுதும் செலவழிந்திருந்தது – சுகமாகி விட்டாலும் ஓரிரு மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.

மஹ்மூதால் எப்படி ஓய்வெடுக்க  முடியும்? ஓய்வெடுக்க ஊர்செல்லுவதானாலும் ஆயிரம்இரண்டாயிரம் வெள்ளி எப்படித் தோதுசெய்வது?

குழப்பம்தான் நிறைந்திருந்தது! ‘அல்லாஹ் விட்ட வழி’ என்ற நினைப்பில் தொழிலை ஆரம்பித்துவிட வேண்டியது தான் என்ற முடிவில்தான் அவன் இருந்தான்.! பார்க்க வந்த அறைநண்பன் வீட்டிலிருந்து வந்த மனைவியின் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான்.

கடிதத்தில் என்ன செய்தியிருக்கும் என்று அவனால் யூகித்துக்கொள்ள முடிந்திருந்தது!

இருந்தாலும் பிரித்துப் படித்தான்.

சபிய்யாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சில் தீயாய் இறங்கின! மறுபடியும் மூச்சிரைப்பது மாதிர இருந்தது அவனுக்கு!

உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது!

கண்களிலிருந்து குபுகுபுவென கண்ணீர்த்துளிகள்!

00000

மேலும் ஒரு வாரம் ஓடிப்போய்விட்டது. மஹ்மூதிடமிருந்து கடிதமோ பணமோ இல்லை! முதன்முறையாக சபிய்யாவக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது! என்ன நேர்ந்து விட்டது இந்த மனுஷனுக்கு! மாதத்துக்கு நான்கு கடிதம் போடுபவர் ஏன் இப்படி மெளனம் சாதிக்கிறார்?

மேற்குத் தெருவில் கோலாலம்பூரிலிருந்து ஒருவர் ஊர் திரும்பியிருப்பதாக அவள் கேள்விப்பட்டிருந்தாள். அவரிடம் போய் தகவல் தெரிந்து வரலாம் என்று புறப்பட்டுகொண்டிருந்தாள் அவள்!

ஆனால், அவளுக்குத் தொந்தரவு வைக்காமல் தகவல் கோலாலம்பூரிலிருந்து நேரடியாகவே வந்து சேர்ந்தது.

அதுவும் தந்தி ரூபத்தில் வந்தது!

அதுவே மஹ்மூதைப் பற்றிய கடைசித்தகவலாகவும் இருந்தது.

நன்றி: முஸ்லிம் முரசு