Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2005
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,091 முறை படிக்கப்பட்டுள்ளது!

யதார்த்தம்

இந்த இருபது ஆண்டுகளில் அப்படியொன்றும் பெரிய மாற்றங்கள் இல்லை அந்த ஊரில்! மஞ்சள் நிறத்தில் உயரமான, அகலமான செட்டி நாட்டு வீடுகள்! பெயிண்ட் அடித்து எத்தணையோ ஆண்டுகளாகிவிட்ட கறைபடர்ந்த சுவர்கள்!

பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கபட்டிருந்தது. ஓரிரு புதிய கட்டிடங்கள்! தியாகிகள் பூங்கா அதே மாதிரியே நின்றது. அதிலும் அந்த தியாகிகள் வைத்த வேப்ப மரங்கள் இருந்ததால் அப்பெயர். இல்லாவிட்டால் ‘தியாகிகள் பொட்டல்’ என்றே அழைத்து விடலாம்!

“காரை லெஃப்ட்ல திருப்பு தம்பி!” டிரைவருக்கு உத்தரவிட்டான் பஷீர்!

“சார்! காரைக்குடிக்கு நேராகவே போகலாம!” ஏதோ அவர் பாதை தெரியாமல் சொல்கிறார் என்ற நினைப்பில் டிரைவர் அறிவுறுத்தினான்!

“தெரியும் தம்பி! இந்த ரோட்ல ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு அப்புறமாப் போவோம்! நீ லெப்ட்ல திருப்பு” என்றான்.

தியாகிகள் ஆர்ச்சைக் கடந்து வண்டி ஓடியது! முன்பிருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் கடைகள். மருத்துவமனைகள்!

வண்டியை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த ஸ்டாலில் ஒரு கூல்டிரிங்க் சாப்பிட்டான்! அக்கம் பக்கம் தெரிந்த முகங்களைத் தேடி கண்கள் அலையவிட்டான்!

யாரும் அகப்படவில்லை.

பள்ளிக்கால நண்பர்கள் அழகப்பன், வள்ளியப்பன், ராப்ஸன் டேவிட், சேக்தாவூத், ஒவ்வொருவராக நினைவில் வந்து சென்றார்கள்! அனைவரும் அந்த டவுனைச் சேர்ந்தவர்கள்!

காரில் ஏறப் போகும் போது பரிச்சயமான ஒரு முகம் அடுத்த கடைவாசலில் தென்பட்டது!

அது நம்ம் ராபர்ட் சார் இல்லே?

அருகில் செல்ல எத்தனித்த போது அவருக்கும் கடைக்காரருக்கும் நடந்த உரையாடல் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

“ஏதோ நீ நெனச்சா நடக்கும நசீரு! கொஞ்சம் ஹெல்ப் பண்ணு தம்பி! மத்தவங்ககிட்ட நான் போக முடியுமா?” அவர் குரலில் கெஞ்சும் தொனி!

ஆளே மிகவும் ஆடிப்போயிருந்தார்! ஏற்கனவே ஒடிச்சலான உடம்பு, எப்போதோ ஷேவ் செய்த முகம்- கசங்கிய கதர்ச்சட்டை – கிழிந்த 4 முழ வேஷ்டி!

“என்ன சார் நீங்க, நான் என்ன, ஹெல்ப் பண்ணாமலா இருக்கேன்? ஒரேயடியா எந்தலையில மசாலா அரைச்சா நான் என்ன சார் பண்றது? ரொம்பத் தொந்தரவு கொடுக்காதீங்க, சார்!”

அவன் நிர்தாட்சண்யமாகச் சொன்னான்!

‘அடப்பாவி! படிச்சுத் தந்த வாத்தியாருக்கு உதவக் கூடாதா? இவ்வளவு அலட்சியமாக பதில் சொல்றானே?” பஷீர் மருகினான்.

நசீரும் அவனுடன் படித்தவன் தான். பக்கத்துக்கிராமத்தைச் சேர்ந்தவன். இப்போது நன்கு கனத்துப்பருத்திருந்தான். பளபளப்பில் வசதி பளிச்சிட்டது!

நகர மனமில்லாமல் ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு கையில கொண்டு வந்திருந்த துணிப்பையை சோகமாகப் பார்த்தார் ராபர்ட் சார்! பிறகு மெல்லத் திரும்பி நடக்க ஆரம்பித்தார்! அளவு கடந்த சோர்வு அவர் நடையில்! கண்களில் விரக்தி!

உடனே அவரை நிறுத்தி, அவருக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற துடிப்பு.

கஷ்டப்பட்டு பஷீர் தவிர்த்துக் கொண்டான்! இருந்திருந்து இவ்வளவு நாளைக்கப்புறம் சந்திக்கும் போது இப்படியொரு நிலையில் சந்திக்க வேண்டாம் – தர்ம சங்கடமாயிருக்கும் இருவருக்குமே!

அவர் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான் சில நிமிடம்!

பிறகு ஒன்றுமே தெரியாதது போல கடையை நெருங்கினான்.

“நசீரு!” கல்லாவில் இருந்த நசீர், நிமிர்ந்து, கூர்ந்து பார்த்தான்.

“அடடே! பஷீரா? பார்த்து எவ்வளவு நாளாச்சு? சொகமாயிருக்கியா? எங்கேயோ.. புருனையில இருக்கிறதா கேள்விப்பட்டேன!”.

குசலவிசாரிப்பில் கொஞ்ச நேரம்!

‘வேண்டாம்’ என்று சொல்லச் சொல்ல ‘பார்னர் மாங்கோ’ வாங்கிக் கொடுத்து உபசரித்தான்!

“அடப்பாவி! இந்தக காசுக்கு அரைக்கிலோ அரிசி கொடுத்திருந்தாக்கூட அவரோட ஒரு வேளைப் பசி அடங்கியிருக்குமே?’ – தனக்குள் நினைத்துக் கொண்டான் பஷீர்.

பேச்சு பழைய நண்பர்களைத தொட்டது! வள்ளியப்பன் பேங்க் ஆபிஸர். ராப்ஸன் டேவிட் எம்ப்லாய்மெண்ட் ஆபிஸில் அதிகாரி. சேக்தாவூத் சென்னை மண்ணடியில் இரும்பு வியாபாரம் என்று பல செய்திகள் கிடைத்தன!

நம்ம டீச்சர்களெல்லாம் எப்படிடா இருக்காங்க? அரங்க கிருஷ்ணன் ஐயா, முத்துக் கிருஷ்ணன் சார்?”

“எல்லோரும ரிடைராகிட்டாங்கப்பா! இங்கேதான் அங்கங்கே இருக்காங்க. அப்பப்ப பாக்குறதுண்டு!”

“நம்ம ராபர்ட் சார் எப்படிடா இருக்காரு?”  விஷயத்துக்கு வந்தான் பஷீர்!

இப்பத்தான். அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடித் தாண்டா இங்க வந்துட்டுப்போனாரு! வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிட்டுப்போனாரு”

‘அடப்பாவி! என்னமாப் பொய் சொல்றான்?’ – பஷீரால் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

“ஏண்டா பொய் சொல்றே, நசீர்? அவரை கொஞ்சங்கூட இரக்கமில்லாம நீ கடாசி அடிச்சதை நான் தான் நேர்லயே பாத்தேனே?” என்றான்.

நசீரின் முகம் வெகுவாக மாறியது. ஆனால் உடனே சமாளித்துக் கொண்டான்!

“பார்த்துட்டியா? இந்தா பாரு பஷீரு! புதுசாப் பாக்குற உனக்கு நான் ஒரு அரக்கன் மாதிரித் தோணும். நான் அதை மறுக்கல. ஆனா கொஞ்சம் யதார்த்தமாச் சிந்திச்சுப் பாரு! நான் இந்த ஊர்ல நெரந்தமாத் தொழில் பண்றேன். கடன உடன வாங்கிப் போட்டு புரட்டுறேன். ஏற்கனவே எனக்கு அவர் ஐயாயிரத்துக்கும் மேலயே கடன் தரனும்.

வெறும் பென்ஷன் மட்டுந்தான் வருமானம். நாலுவபயனுக இருந்தும் ஒருத்தன்கூட வேலைல இல்லை. வீட்ல 8 பேர் சாப்பிட்டாகனும். இந்த லட்சனத்துல எனக்கு எங்கே கடன திருப்பித்தரப் போறாரு?” இருந்தும் அப்பப்பக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். இந்தா போய்ட்டாரு இல்லே. இப்ப அவரு நேரா ஷண்முகம் கடைக்குப் போவாரு! அவனும் நம் ஸ்கூல்ல படிச்சவன். அவன் கொடுத்தா வாங்கிட்டுப் போவாரு! அவனும் இல்லேண்டா மறுபடியும் இங்கதான் வருவாரு – நானும கொடுப்பேன். இது அன்றாட பிரச்சனை!”

பஷீரால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மை தானே? தினமும் கடன் கொடுப்பது எந்தத் தொழிலில தான் சாத்தியம்?

“அது இருக்கட்டும் நசீரு! இப்ப நான் சார் வீட்டுக்குப் போகனும்! வீட்டுக்கு ஒரு பத்து நாளைக்கு வேண்டிய அரிசி மளிகைச் சாமான் பேக் பண்ணு” என்றான் பஷீர்.

நசீர் வறட்சியாகச் சிரிச்சான்!

“பஷீரு! இதெல்லாம் ஒரு கண் துடைப்பு! காரியத்துக்கு ஆகாது! உனக்கு உண்மையிலேயே சாருக்கு உதவி செய்யனுண்டு ஆசை இருந்தா அவரோட பையன்கள்ல பாராவது ஒருத்தனுக்கு நிரந்தர வருமானம் வர்ராப்ல ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணு! இல்லாட்டி வந்த வேலைய முடிச்சிட்டு அமைதியா ஊருக்குத் திரும்பிப்போ! வழக்கம் போல நாங்களாசசு அவராச்சு!” என்றான் நசீர்!

பஷீர், நசீரையே உற்றுப் பார்த்தான். அவன்தான் எவ்வளவு யதார்த்தமாகப் பேசுகிறான்?

காரைக்குடியில் ஒரு நண்பரின் வீட்டுக்குத் தான் பஷீர் சென்று கொண்டிருந்தான். அவர் ஒரு மில் அதிபர்! ஒருவனுக்காவது வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியும்! புருனையில் அவனது நெருங்கிய நண்பன் சீனு கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருக்கிறான். எப்படியும் ஒருவனுக்கு விசா வாங்கி அனுப்பவும் முடியும்!

உறுதிதொனிக்கச் சொன்னான்:

“நசீரு, சாருகிட்டச் சொல்லு. இன்னும் கொஞ்ச நாளில அவரோட அவலங்கள் நீங்கும்னு! காரைக்குடி போயிட்டு திரும்பறப்போ ஒருத்தனுக்கு வேலை! புருனை போயிச் சேர்ந்தவுடனே இன்னொருத்தனுக்கு விசா! அடுத்த விசிட்ல ஊருக்கு வர்றப்பத்தான் நான் அவரைச் சந்திப்பேன்! இப்ப நான் வர்றேன்!”

சொல்லிவிட்டு காருக்குச் சென்ற பஷீரையே கண்ணிமைக்காமல் பார்த்தான் நசீர்! அவன் கண்கள் பனித்திருந்தன!

நன்றி: மணிச்சுடர்