Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2005
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,969 முறை படிக்கப்பட்டுள்ளது!

வழி காட்டி

கதவு திறக்கும் ஒலி! அத்தா வெளியே கிளம்பிக் கொண்டிருக்க வேண்டும்! ஸுபுஹு தொழுதுவிட்டு நேரே கடற்கரைக்குச் சென்றால் மத்தியானம் இரண்டுமணிவாக்கில் தான் வீடடில் பார்க்கலாம்.

நாற்பது நாற்பத்தைந்து வருடப் பழக்கம்!

சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தார் – பள்ளிக்குக் கிளம்பினார் ரஹீம்.

லேசான பனி பெய்து கொண்டிருந்தது.

முன்பெல்லாம் இந்தப் பனிகூூட உடலை நடுக்கும்! – சவூதிப் பனியில் மரத்துப்போன உடம்புக்கு அது ஏஸீயின் இதமான சுகத்தைத் தந்தது போல் தான் இருந்தது இப்போது!

தொழுது முடித்து விட்டுத் திரும்பிப் பார்த்தார் – அத்தா படியிறங்கிக் கொண்டிருந்தார்! நடையில் சோர்வு தெரிந்து!

முகத்தில் அதே சோகம்!

வந்ததிலிருந்து அவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் – எந்த முக மலர்ச்சியையும் பார்க்க முடியவில்லை.

புதுப்பிக்கப்பட்டுள்ள வீடோ, புதிது புதிதாக வாங்கிப் போடப்பட்டுள்ள பொருட்களோ, மாறியுள்ள குடும்ப பொருளாதாரப் பின்னணிகளோ எந்த மாற்றத்தையும் அத்தாவிடம் ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.

அத்தாவின் அத்தா – அவருக்கு அத்தா! என்று இப்படி வழிவழியாக வந்த தொழில் அவருக்கு! சம்மாட்டி வீடு என்று செரன்னால் தான் யாருக்கும் சட்டென்று புரியும்!

சம்மாட்டி என்பதால் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பவர்கள் என்பதில்லை – மீனுக்கு விலை வைக்கும் பொறுப்பு! எவ்வளவு மீன் பாடேறினாலும் சம்மாட்டிமுன் அது கொட்டப்படும்.

அவர் வைத்தது தான் விலை – அதற்கு அப்பீல் கிடையாது. புதிய புதிய வியாபாரிகளும், வெளியூர் தரகுக்காரர்களும் நுழைந்து விட்ட இந்தக்காலத்திலும் ‘அப்பாக் குட்டி சம்மாட்டி’ வைத்ததுதான் விலை!

அப்படி ஒரு நியாயவான் – கூடுதல் குறைச்சல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஒரு பறியில் வீட்டுக்கு மீனும் கையில் ஏதாவதும் கொடுப்பார்கள்! – பரக்கத்தாகவே இருக்கும்.! எவ்வளவு என்று கூட எண்ணிப் பார்க்காமல் அப்படியே வந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு குளித்துத் தொழுது சாப்பிட்டு விட்டுப் படுத்தால் இனி அஸரிலிருந்து இஷா வரை பள்ளிவாசல் தான் இருப்பிடம்!

ஒன்பது மணிவாக்கில் இரவு சாப்பாடு – தூக்கம் என்று ஒரு இயல்பில் சுற்றும் வாழ்ககை வட்டம்!

அத்தாவின் சோர்வுக்கும் சோகத்துக்கும் காரணம் புரியத்தான் செய்கிறது. இருந்தாலும் வெளிப்படையாக பேசி மணமூட்டத்தைக் களையும துடிப்பில்லை – தைரியமில்லை!

‘போகப் போகச் சரியாய்ப் போகும்’ என்ற நினைப்பு பொய்த்துப் போனது போல் தான் இருந்தது.

அம்மாவிடம் கூட எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை!

அம்மாவுக்கு எல்லாமே அத்தாதான்!

வித்தியாசமான தாம்பத்யம் அவர்களுடையது!

“ளே!” என்று அழைத்து ஏதோ ஓரிரு வார்த்தைகள் எப்போதாவது சொல்வார் அத்தா!

“என்னங்க? இந்தாங்க!” என்ற அளவில் தன் எண்ணங்களைப் பிரதபலிப்பாள் அம்மா!

அவர்கள் அதிகம் பேசி அவர் பார்த்ததில்லை – அதே போல சண்டை போட்டும் பார்த்ததில்லை!

ஒரு கட்டுப்பாட்டில் – கனகச்சிதமாக நகர்ந்த ஆரோக்கியமான வாழ்க்கையோட்டம் அவர்களுடையது!

“புள்ளய ஆலிமாக்கிப் பாக்கனுண்டு ஆசையா இருக்கு – நாளைக்கு லால்பேட்டைக்கு கூட்டிட்டுப் போறேன்” என்றார் அத்தா ஒருநாள்!

அம்மாவின் முகத்தில் தயக்கம்!

ஒரே பிள்ளையைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற தடுமாற்றம் அதற்கான காரணம்!

ஆனால் அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை “உங்க இஷ்டம் போல செய்யுங்க” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டாள்.

ஒவ்வொரு ரமலானிலும் விடுமுறையின் போது வரும் போது மட்டும் “இன்னும் எத்தனை வருஷம் ஓதனும் அத்தா?” என்று ஒரு வார்த்தை கேட்பார்!

காலம் சருங்கி வர, சுருங்கி வர அவர் முகத்தில் மகிழ்ச்சி மலரும்!

அத்தாவின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஒரே நேரத்தில் அவர் பார்த்துப் பூரித்துப் போனது தஹ்ஸீலான போதுதான்.

பட்டமளிக்கும் விழாவுக்கு அவரும் கூட வந்திருந்தார்!

பகக்த்துக் கிராமம் ஒன்றில் பேஷ் இமாமாகப் பொறுப்பு எடுததுக் கொண்ட போது கண்கலங்க அவர் சொன்னது இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது.

“உங்களை ஆலிமாக்கிப் பாக்கனுங்கற ஆசையில, பரம்பரை பரம்பரையாச் சோறு போட்டுக்கிட்டிருக்கிற தொழிலையே மாத்திபுட்டேண்டு எல்லோரும் எம்மேல ஜாஸ்தியான கோபம்! இருந்தாலும் நாலு பேருக்கு ஈமான் இஸ்லாம் சொல்லிக் கொடுக்கிற வேலை உங்களுக்கு! இன்னிக்கு வழிகெட்டுப் போய்கிட்டிருக்கிற சமுதாயத்துக்கு வழிகாட்டுற வேலை. இதுல. அதிகமா காசு சம்பாதிக்க முடியாது! ஆனா அல்லாவுக்கு உகப்பான வேலை அத்தா! ஆகிறத்துக்குச் சம்பாதிக்கிற வேலை!”

சேர்ந்தாற்போல இத்தனை வார்த்தைகளை அத்தா பேசி அவர் இதற்கு முன் பார்த்ததில்லை.

வாரந்தோறும் ஜும்ஆவுக்கு அவர் வேலை பார்த்த கிரமாத்துக்கு வந்து, அவரது ஜும்ஆ பிரசங்கத்தை ஊன்றிக் கவனித்துப் பூரித்துப் போனார்!

“நம்ம ஆலிசாவோட அத்தா” என்று அந்த ஊர் மக்கள் சொல்லும்போது அவர் முகம் மகிழ்ச்சியில் மின்னும்; புளகாங்கிதத்தில் பூரிக்கும்.

வெளிச்சாப்பாடு ஆகாது என்பதற்காக அவசரமாகத் திருமணத்தையும் முடித்து வைத்து அம்மாவையும் கூட துணைக்கு அனுப்பி வைத்து விட்டு, தான் அப்படி இப்படி கடை, உறவினர் வீட்டில் சாப்பாடு என்று சமாளித்துக் கொண்டார்.

அத்தாவின் மனவோட்டத்தை  – ஆசையைப் புரிந்து கொண்டவராகத்தான் அவர் இருந்தார். ஆனால் அந்த பேஷ் இமாம் பணியில் அவருக்கு ஈடுபாடே ஏற்படவில்லை – அந்த ஊர் பிடிக்கவில்லை என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு ஊராக மாறியும் பார்த்தாகிவிட்டது.

பகிரங்கமாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டவனுக்கு மஹர் என்று பொய்சொல்லி மணமுடித்து வைக்கும் வேலை!

ஹராமான வருமானக்காரர்களிடம் கைமடக்குப் பெற்றாக வேண்டிய கட்டாயம்!

மார்க்கம் காட்டும் நெறிகளைச் சொல்லிக் காட்டினால் மனம் கசந்து போய் சண்டைக்கு வரும் பணக்காரர்கள் – அவர்களுக்கு ஜால்ரா போட ஒரு கோஷ்டி! வக்காலத்து வாங்கும் ஜமாஅத்து பெரியவர்கள்!

ஊஹும்.. அவரால் அந்தப் பணியை ஜீரணிக்கவே முடியவில்லை.

அந்தச் சூழ்நிலையில் தான் உடன் ஓதிய ஹனிபா – அப்போது சவூதியிலிருந்து திரும்பியிருந்த ஹனிபாவின் தொடர்பு!

அவர் மூலமாக டிரைவிங் கற்றுக்கொண்டு சவூதி பயண ஏற்பாடு!

அத்தாவிடம சொன்னால் சம்மதம் கிடைக்காது என்பதால் ரகசியமாகவே எல்லா ஏறடபாடுகளும்! எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு எதிரில் வந்து நின்றபோது அத்தா துடித்த துடிப்பு..!

ஒரு வார்த்தைகூட போசாது வெறித்த பார்வை!

லட்சியத்தில் தோற்றுப் போனதால் தொங்கிப்போன முகம்!

அந்த சோகமும் இறுக்கமும் அவரது முகத்தில் நிரந்தரமாகிப் போனது.

மூன்று பயணம் சவூதிபோய் வந்து விட்ட பிறகும் – இரண்டு பேரக் குழந்தைகளைக் கண்டுவிட்ட பிறகும்கூட அந்தச் சோகம் மாறியதாகத் தெரியவில்லை! மாறாக மேலும் மேலும் அதிகரித்து வருவது போலவும் தெரிகிறது!

அந்த இறுக்கத்தின் வித்தியாசமான பரிமாணங்கைளை அவர் ஊர்வந்த மறுநாள் இரவு தெரிந்து கொள்ள முடிந்தது!

அவருடன் ஓதிய ஆயங்குடி லத்தீப் அவரைப் பார்க்க வந்திருந்தார் – அத்தாவுக்கு ரொம்ப பிடித்தமான ரஹீமின் நண்பர் அவர்!

“எல்லாம எம்மருமக வந்தப்புறந்தேன், ஹஜரத்! அதுக்கு முன்னாடி அவர் அப்படி இல்ல!” – அத்தாவின் இந்தச் சொற்பிரயோகம்தான் அவரை உலுக்கி எடுத்து விட்டது!

பாவம், அவர் மனைவி! அவள் அந்த விஷயத்தில் உண்மையில் நிரபராதி! முழுப்பொறுப்பும் அவரையே சாரும்!

அத்தாவின் இறுக்கத்துக்கும், மருமகள் பேரன் பேத்தியுடன் அவரது ஒட்டாத் தன்மைக்கும் என்ன காரணம் என்பது இப்போது அவருக்குத் தெளிவாகவே புரிந்து போய்விட்டது!

அந்தச் சிந்தனைதான் இரவு முழுதும் அலைக்கழித்து விட்டது!

நன்றாக விடிய ஆரம்பித்துவிட்டது!

பள்ளியை விட்டு இறங்கும் போது பேஷ் இமாம் தன்னைநோக்கி வருவதைப் பார்த்து ரஹீம் ஆலிம் தயங்கி நின்றார்.

பரஸ்பரம் சலாம் பரிமாற்றம்!

“ரெண்டு நாளா ஊருக்குப் போயிருந்தேன் – நீங்க வந்த சேதி நேத்துத்தேன் தெரியும்!” என்று பேச்சை ஆரம்பித்தார் பேஷ் இமாம்.

“ஆமா நானும விசாரிச்சேன்”

ரெண்டு மாசம் லீவுண்டு சொன்னாங்க! ஊருல சும்மாதானே இருக்கப் போறீங்க. இருக்கற வரைக்கும் மதரஸாப்பக்கம் வந்தீங்கண்டா ரொம்ப உதவியாய் இருக்கும்! இருநூறு பசங்களை ஒருத்தனாச் சமாளிக்க முடியல! வேற உஸ்தாதுபோட வருமானம் போதாதுன்னு ஜமாஅத்துல சொல்றாங்க” – பேஷ் இமாம் யோசனையோடு அவர் முகத்தைப் பார்த்தார்!

திடீரென்று அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. – பதில் சொல்லவும் உடனே தோன்றவில்லை!

“ஒங்களுக்கு சிரமமுண்டா, வேண்டாம்! ஒரு பேச்சுக்குக் கேட்டேன்” என்று சமாளிக்க முற்பட்டார் இமாம்.

மின்னல்போல அவருள் ஒரு தோற்றம்! விநாடியில் ஒரு திட்டம்!

“இன்ஷா அல்லாஹ் நாளைக்கு வந்து பேசுவோம்” என்றவாறு நடக்க ஆரம்பித்தார்!

வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவரின் உள்ளத்தில் அடுக்கடுக்கான சிந்தனைகள்! பெற்றோரை நிறைவு செய்ய முடியாத வாழ்கையால் என்ன பிரயோஜனம்? அல்லாவிடம் என்ன பதில் சொல்வது? அத்தா அம்மாவை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால் –

தன் மனைவி மீது ஏற்பட்டுள்ள பழியைத் துடைக்க வேண்டுமானால் – அப்படித்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை!

அந்த ஊரில் அவர் ஆரம்பிக்கப்போகும் மார்க்கக்கல்விக்கூடம் – மதரஸாவின் தோற்றமே இப்போது அவர் மனதில் நிறைந்து நின்றது!

நன்றி: சமரசம்

அஸர் = மாலைத் தொழுகை இஷா = இரவுத் தொழுகை
தஹ்ஸீல் = பட்டம் ஆகிறத்துக்கு = மறுமை வாழ்வுக்கு
மஹர் = மணமகளுக்கு மணமகன் தரும் கட்டாய மணக்கொடை மதரஸா = மார்க்கக் கல்விக்கூடம்