Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,534 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு தாயின் ஹஜ்

இரவு வெகுநேரம்வரை தூக்கம் வரவில்லை ஆமினாவுக்கு! கோடையின் புழுக்கம் ஒரு பக்கம். மனத்தில் மண்டியிருந்த விவரிக்க முடியாத உணர்வுகளின் தாக்கம் இன்னொரு பக்கம்!

எப்போது தூங்கினாள் என்பது தெரியாது. இருந்தும் வழக்கம் போல அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள்.

தொழுது முடித்துவிட்டு அன்றையப் பணிகளைத் தொடங்கினாள்.

மனம் எங்கோ சுற்றிக் கொண்டிருந்தது உண்மை தான் என்றாலும் அனிச்சைச் செயலாய் ஆப்பக்கடைப் பணிகள் தொடர்ந்தன.

புளித்து, நுரைத்த மாவை கொட்டாங்கச்சி அகப்பையால் அள்ளி, எண்ணெய் தடவிய மண் சட்டியில் இட்டதும் ‘சுர்ர்’ என்ற ஓசை!

அருகில் இருந்த ‘தட்டுப்புலா’ என்ற பனை ஈர்க்குத் தட்டில் ஆவிபறக்கும் ஆப்பம் நிறைய ஆரம்பித்தது!

வாடிக்கையாக வாங்கும் பெண்கள் விட்டுப் போன ‘இடியாப்பக் கொட்டானில்’ அவர்கள் ஆர்டருக்கு ஏற்ப அடுக்கி வைத்துக் கொண்டாள்.

கணவன்மாருக்குச் சாயா போட்டு வைத்து விட்டு, காலைநேர வேலைப் பரபரப்போடு ஆப்பம் வாங்க ‘அரக்கப் பரக்க’ ஓடிவரும் பெண்களைக் காத்துக் கிடக்க விடாமல் எளிதில் எடுத்து நீட்டிவிடும் தொழில் நுணுக்கம் தெரிந்தவள் ஆமினா.

இன்று நேற்றுப் பழக்கமா என்ன? எத்தனை வருட அனுபவம்!

எல்லோரையும் போலத்தான் அவள் புருஷனும் பிழைப்புத் தேடி மலேசியாவுக்குப் போனான். அவனோடு பயணம் போன அத்தனைபேரும் சொத்து சுகங்களோடு செழிப்போடு வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் அவளிடமே ஆப்பம் வாங்குவதற்கு இன்று வரிசையில் நிற்கிறார்கள்.!

யாரோ ஒரு மலாய்க்காரப் பெண்ணை ‘வைத்து’க் கொண்டு ஒரே போக்காய்ப் போய்விட்டான் அவள் கணவன்! பெற்ற ஒரே பிள்ளையின் வளர்ப்புக் கடமைக்காக ஆப்பச் சட்டியில் தஞ்சம். இதோ இன்றும் தொடர்கிறது. ம்ம்ம்.. எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

சரி. புருஷன்தான் அப்படி! இரத்தத்தை வியர்வையாக்கி, எத்தணையோ அவமானங்களைத் தாங்கி வளர்த்து ஆளாக்கினாளே அவள் பெற்ற பிள்ளை அமீர்! அவனாவது அவளது அவலத்தைப் போக்கியிருக்கக் கூடாது.?

ம்ம்ம்..! அவள் வாங்கி வந்த வரம் இப்படியாகி விட்டது ஆப்பச்சட்டியே வாழ்க்கை என்று,
அவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் அமீரைப் பத்தாவது வரை படிக்க வைத்தாள். யார் யார் காலையோ பிடித்துக் குவைத்துக்கு விசா வாங்கி அனுப்பி வைத்தாள்.

ஒரு வருடத்தில் கடனையொல்லாம் அடைத்தாள் – இரண்டாம் வருடம் கொஞ்சம் காசு கூடச் சேமிக்க முடிந்தது! குவைத்திலிருந்து முதற்பயணம் வந்தவுடனேயே ‘நான் நீ’ என்று பெண் கொடுக்கப் போட்டி!

காசு பணத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் ‘நம்மைப் போல ஒரு ஏழையாய் இருந்தால் குடும்பத்துக்கு ஒத்துப் போகுமே?” என்று நினைத்துப் பரீதாவை மருமகளாக்கிக் கொண்டு வந்தாள்!

புதிதாக வசதியைப் பார்த்ததும் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டாள் அவள்.

ஆமினாவின் கண்டிப்பு அவளுக்குப் பிடிக்கவில்லை – ஓயாமல் சண்டை, சச்சரவு!

மகராசி, மகனை மூன்றே மாதத்தில் தன் அம்மா வீட்டுக்குக் கொத்திக் கொண்டு போய் விட்டாள்.

“அம்மா! உனக்கும் அவளுக்கும் ஒத்துப் போக மாட்டேங்குது! அதனாலே உனக்குத் தனியாப் பணம் அனுப்பிடறேன். அவ அவுக அம்மா வீட்டிலேயே இருந்துடட்டும்” என்றான் மகன்.

அவளுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது! “உன் பொண்டாட்டிக்காரியைக் கண்டிச்சு அடக்க முடியாத உன் காசு எனக்கு எதுக்குடா? என் ஒரு வயித்தைக் கழுவிக்க முடியாமலா நான் இருக்கேன்? உன் பொண்டாட்டி கூடப் போறதுண்ணா நல்லபடியாப் போ! உன் காசுபணம் எனக்கு வேண்டாம்!” என்று ஒரு பேச்சுக்காகச் சொன்னாள்!

அதையே வேதமாக்கிக் கொண்ட மகன் மாமியார் வீட்டோடு போயே விட்டான்!  பல வருடமாகப் பழகிப்போன ஆப்ப வியாபாரத்தை இடையே வசதி வந்ததும் விட்டு விடாமல் பொழுது போக்காக வைத்துக் கொண்டது நல்லதாகப் போயிற்று!

அது, அவள் வயிற்றுக்கும் கண்டு, இப்போது ஒரு கணிசமான சேமிப்பாகவும் வளர்ந்து நிற்கிறது. இந்த வருடம் அவள் எப்படியும் ‘ஹஜ்’ கடமையை முடித்து விடவும் திட்டமிட்டிருந்தாள், ரகசியமாக!

மகன் தனக்கு ஒன்றும் தராவிட்டாலும் நன்றாக வாழ்ந்து போகட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தவள் நெஞ்சில் நெருப்பாய் இறங்கியது ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு!

இருபது நாட்கள் ஊண் உறக்கம் இன்றி அழுது புலம்பித்தீர்த்தாள், மகனை பற்றி ஒரு தகவலும் கிடைக்காமல்! பக்கத்து வீட்டு டிவியில் ஜோர்டான் பாலைவனத்தில் பரிதாபமாகக் குவிந்து கிடந்த அகதிகளுக்குள் மகன் முகம் தெரிகிறதா என்று தேடித் தேடிக் களைத்துப் போன போது ஒரு நாள் உலர்ந்து போன சருகாய் வந்து சேர்ந்தான் அமீர்!

“நீ உயிரோட திரும்பி வந்ததே அல்லாவோட கருணை! அது போதும்டா, மகனே!” என்று கட்டிப் பிடித்து ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள்!

அப்போது கூட மருமகள் மாறவில்லை!

“உங்க மனசு போல ஆச்சில்லே? இனி நிம்மதியா இருங்க” என்று நொடித்த போது மனம் ஒடிந்து போனாள் – அதன் பிறகு மகனைப் பார்க்க அந்த பக்கம் போகவே இல்லை! அவனும் இங்கே வரவில்லை!

அந்த அடுத்த வீட்டுப் பரக்கத்து மட்டும் அவ்வப்போது வந்து மகன் வீட்டு நிலவரத்தைச் சொல்லி செல்கிறாள்! குடும்பத்தில் கடுமையான சிரமமாம்!

இருக்காதா, பின்னே?

‘வருமானத்துக்கு ஒரு வசதியும் இல்லாம, ஆம்பிளைப் பிள்ளைய வீட்டோட வச்சிக்கிட்டு ஆறேழு மாசத்தை ஓட்டுறதுண்ணா சும்மாவா?’

ஏதோ கொஞ்ச நஞ்சம் இருந்த நகைகளையும் விற்றுக் குடும்பம் ஓடுவதாகப் பேச்சாம்!

பெற்ற மனம் பதை பதைத்தது.

இருந்தாலும் மகனாக வாய் திறந்து கேட்காத போது நாம் ஏன் உதவவேண்டும் என்ற உணர்வும் வந்து அழுத்தியது.

முந்திய நாள் பரக்கத்து வந்து அந்தச் செய்தியைச் சொன்ன பிறகு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது! அமீர் சவூதிக்குச் செல்ல விசா கிடைத்திருக்கிறதாம். ஏஜெண்ட் இருபத்தையாயிரம் பணம் கேட்கிறானாம். “அங்கே இங்கே ஓடியும் ஐயாயிரத்துக்கு மேல் புரட்ட முடியலே மாமி” என்று பரீதா ஒப்பாரி வைத்து அழுததாகப் பரக்கத்து உருக்கத்தோடு சொன்னாள்!

அந்த நிமிடத்திலிருந்து தூக்கம் இல்லை ஆமினாவுக்கு! எதிலும் நிலைத்து நிற்க மனம் மறுக்கிறது. நினைவுகள் மகனைச் சுற்றிச் சுற்றியே வருகின்றன! ஆப்பம் சுடுவதில் கூட முழுக்கவனம் செலுத்த முடியவில்லை.

காலை எட்டு மணி ஆகிவிட்டது!

ஆப்பக் கடையை மூடிவிட்டு எழுந்தாள் ஆமினா. கதவைப் பூட்டிவிட்டு மகன் வீட்டை நோக்கி நடந்தாள்.

“வாங்கம்மா” என்றான் அமீர்., சுரத்தில்லாமல்! மருமகள்காரி முகத்தை வெட்டிக்கொண்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டாள்!

கொஞ்சநேரம் அமைதியாக இருந்துவிட்டு அவளே பேச்சுக் கொடுத்தாள்!

“அப்போ என்ன முடிவிலே இருக்க, அமீரு? எப்போ பயணம் வச்சிருக்கே?”

எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னான் மகன் “எதை வச்சுப் பயணம் பொறப்படுகிறது? இருபத்தைஞ்சாயிரம் கேக்குறானே ஏஜெண்ட்டு? எனக்கு எந்த நாதி உதவி செய்யப் போகுது?”

“ஏண்டா பாவி, அப்படிச் சொல்றே? உங்கத்தா ஒன்னை ஒரு வயசிலே விட்டுட்டு ஒரே போக்காய்ப் போனாரே அப்ப எந்த நாதிடா காப்பாத்துச்சு? நான் ஒருத்தி உசிரோட இருக்கயிலே இப்படி விரக்தியாய்ப் பேச எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு? இந்தாடா ரூபா – இருபத்தஞ்சாயிரம்! எடுத்து உடனே விசாவுக்குக் கட்டு! போயி ஒம் பொண்டாட்டி புள்ளைக்கு ஒழைச்சுப் போட்டுக் காப்பாத்து!” என்று மடியில் கட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து அவன் முன் போட்டாள் ஆமினா!

அடித்து வைத்த சிலைபோல நின்றான் அமீர்!

“அம்மா! உன்கிடடே ஏது இவ்வளவு பணம்?”

“அதைப்பத்தி உனக்கென்னடா? எம்மனசிலே ரொம்பக்காலமா ஒரு ஆசை, ஹஜ்ஜுக்குப் போகணும்னு! எறும்பு சேர்க்கிறது மாதிரி சேத்துக் கிட்டே வந்தேன்! இந்த வருஷம் ஹஜ்ஜுக்கு பொறப்படுற அன்வர் மாமா குடும்பத்தோட போகலாம்னு ஏற்பாட்டோடு இருந்தேன்! நீ விசாவுக்கு காசில்லாமே மருகிக்கிட்டிருக்கிறதைப் பரக்கத்து மாமி சொல்லிச்சு! என் மனசு கேக்குமா? பெத்த ஒத்தப் புள்ளை இப்படி நட்டநடுக் கானகத்திலே பொழைப்பில்லாமெ தவிக்கையிலே நீ ஏன் ஹஜ்ஜுக்கு வரலேண்னா அல்லா கேக்கப் போறான்? எனக்குக் கொடுப்பினை இருந்தா இந்த – வருஷம் இல்லாட்டி இன்னொரு வருஷம் ஹஜ்ஜுக்குப் போறேன்!” என்று சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள் ஆமினா.

கண்கள் பனிக்க அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றான் அமீர்.

அந்தத் தாய் கொடுத்த பாசஅடியின் கனம் தாங்காமல் தலை குனிந்து விம்மினாள் அடுக்களைக்குள் இருந்த பரீதா!

 நன்றி: மஞ்சரி, சிராஜ்

ஹஜ் – மக்காவில் ஒன்று கூடி ஆற்றும் வணக்க வழிபாடு