இன்று:
அவசரம் அவசரமாய்
அடுப்படியை ஒடுப்பறித்தாள்
ஆளுக்கு மூன்று இட்டிலியை
அடுப்படியில் மூடிவைத்தாள்
“ஏலே, இல்யாஸு!
எழுந்திருச்சு ஓடியா!
இட்டிலியைத் தின்னுப்புட்டு
எதுத்த வூட்ல விளையாடு!
அத்தா வந்தாக்கா
‘அம்மா எங்கே’ம்பார்
ஆஸ்பத்திரிக்குப் போயிடுச்சுன்னு
அவருகிட்டே சொல்லிப்புடு”
என்ற உம்முகுல்தும்
ஏகமாய்ப் பரபரத்து
உள்ளறைக்குச் சென்றாள்
ஒய்யாரமாய் அலங்கரித்தாள்!
அலங்காரம் முடிந்தவுடன்
அவசரமாய் பஸ்பிடித்து
விரைந்தாள்; வீதியெங்கும்
விரிந்துநின்ற பெருங்கூட்டக்
கடலில் நுழைந்தாள்;
கரைந்து மறைந்துவிட்டாள்!
நேரம் ஓடியது;கூட்டம்
நெட்டித் தள்ளியது!
மேலே வெயில்
மேனியெல்லாம் வேர்வை மயம்!
கூட்ட நெருக்குதலில்
கூக்குரலில் அமளிமயம்!
வரிசை குழம்பியதால்
வந்ததொரு தகராறு
வாய்பேச்சு முற்றி
வந்ததங்கே கைகலப்பு!
கையில் தடியுடனே
காவலுக்கு நின்றவர்கள்
போட்டார்கள் ‘பூசை’
பெண்கூட்டம் சிதறியது!
அந்த அமளியில்
அடிதடியில்; கல்வீச்சில்
முந்தி டிக்கட் வாங்க
முனைந்துநின்ற கூட்டமெல்லாம்
சந்துக்குள் சிதறி
சடுதியில் மறைந்ததுவே
அமளி ஓய்ந்தபின்னர்
அங்கே சில பெண் பிணங்கள்!
காவலர்கள் ஓடினர்
கவலையுடன் பார்த்தனர்
மூச்சுத் திணறலில்
‘மூச்சுவிட்ட’ மூவரையும்
மூடிப்போட்டனர்!
மும்முரமாய் இயங்கினர்!
அடுத்த நாள் காலையில்
அந்த நிகழ்ச்சி பற்றி
எடுப்பாய் வந்தது
இப்படி ஒரு செய்தி;
“சினிமா நெரிசலில்
சிக்கி இறந்தனர்
மூன்று பெண்கள் – அதில் ஒருத்தி
முஸ்லிம் பெண்ணாகும்!”
அந்தப் பரபரப்பிலும்
அவளணிந்த துப்பட்டி
அடயாளம் காட்டியது
அருமை நம் உம்முகுல்தை!
சினிமா ஆசையினால்,
சீர்கெட்ட புத்தியினால்
சீரழிந்த ஒரு குடும்பச்
சித்திரமும் இதுவாகும்!
அன்று:
உஹதுப் போர்க்களம்
உக்கிரமான சண்டை
மக்கத்துக் குரைஷிப்படை
மறுபடியும் திரும்பிவந்து
மூர்க்கமாய்த் தாக்கியது;
முஸ்லிம்படை சிதறியது!
உத்தமத் திருநபியின்
உத்தரவைப் புறக்கணித்து
உதிரிகளாய்ப் போய்விட்டோர்
ஓடோடிப் போனார்கள்!
பத்துப் பதின்மூன்றுபேர்தான்
பயஹம்பர் நபி துணைக்கு
பாதுகாப்பாய் நின்றார்கள்;
பகைஎதிர்த்துப் பாய்ந்தார்கள்!
அந்தப் பதின்மூவரில், அபுதுஜானாவும்
அம்மை உம்மு உமாராவும்
அடங்குவர், பாருங்கள்
பெண்கள் மெல்லியர்தான் – ஆனால்
பெண்மை வலியுடைத்து!
என்பதை நிரூபித்தார்
ஏற்றமிகு உம்மு உமாரா!
வாளைச் சுழற்றினார்;
வந்தெதிர்த்த பகைவர்களை
வெட்டி வீழ்த்தினார்
வீரத்தாய் அவரன்றோ?
ஆண்களையே அஞ்சவைத்த
அந்தப் பெரும்போரினிலே
ஆண்களையும் மிஞ்சிநின்று
அவர்புரிந்த சாகசத்தை
எம்பெருமான் கண்டார்கள்
ஏற்றமுறப் புகழ்ந்தார்கள்!
வலது கையில் வெட்டு!
வலியோ தாளவில்லை
ரத்தம் கொட்டியது
ரணமோ வாட்டியது!
ஆனாலும் அந்த
அருமைத்தாய் வீரத்தில்
அணுவளவும் குறையவில்லை!
அவ்வளவு இறையுணர்வு!
‘உஹதின் வீராங்கனை’ என
உலகம் இன்றளவும்
உயர்த்திப் புகழ்கிறது!
அந்த உம்மு உமாராவும்…
இந்த நம் உம்முகுல்தும்..
சொந்த பந்தம்தான்..
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது..?
சொல்லுங்கள் …
என்ன செய்வது?