பூகம்பம், எங்கோ ஓரிடத்தில் பிறந்து சில நொடிகளில் உலகையே உலுக்கச் செய்யும் அற்ப ஆயுள் கொண்ட குழந்தையை என்ன சொல்வது? “பூகம்பம்” என்ற பெயர் கொண்ட அரக்கக் குழந்தை பிறந்து கண்ணை மூடி திறப்பதற்குள் பல உயிர்கள் மூடிவிடுகின்றன. ஏழை, பணக்காரர்கள், பச்சிளங்குழந்தைகள், முதியவர்கள், குடிசை, மாட மாளிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் தன் அகோரப்பசிக்கு உணவாக்கிக் கொள்கிறது.
மனித சமுதாயத்தையே நிலைகுலையச் செய்கிறது. இயற்கை அவ்வப்பொழுது ஆடும் ருத்ரதாண்டவங்களில் மிகக் கொடியதான ஒன்றாக பூகம்பம் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு அடியும் மரண அடிதான். இதன் அடி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் வல்லமைப் பெற்றது. மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் இப்பேரழிவிற்கு சாவு மணி அடிக்க பல விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தடுக்க முடியுமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதை முன்கூட்டியே அறிந்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததன் நற்பலனாக அமைந்தன இத்தொழில் நுட்பம்.
பூகம்பத்தைப் பற்றி தற்போது இருக்கும் முன்னறிவிப்புக் கருவிகள் அவ்வளவு துல்லியமாக இல்லை. இதுவரை நடந்துள்ள பூகம்பங்கள் சாட்டிலைட் கருவிகள் மூலம் புவித் தட்டு நகர்வதை கண்காணிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அதாவது ஒரு பத்து ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ அல்லது 30 ஆண்டுகளிலோ ஏற்பட இருக்கும் பூகம்பங்களை அதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே அறிவித்தன. ஆனால் குறைந்த கால அவகாசத்திற்குள் நடைபெற இருக்கும் பூகம்ப முன்னறிவிப்புகள் மூலம் உயிர் சேதத்தை தவிர்ப்பதோடு இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காது.
பூகம்பம் நடைபெறுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் கிடைக்கும் முன்னறிவிப்புகள் சுரங்கப்பாதையை கடக்கும் ரயில் அதனைவிட்டு கடந்துவிடுவதன்மூலம் ஆபத்தை தவிர்க்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு முன் கிடைக்கும் முன்னறிவிப்புகள் மூலம் மக்களை கட்டிடத்தின் பாதுக்காப்பான இடத்திற்கோ அல்லது பாதுகாப்பற்ற கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றியோ வீடுகளில் வரும் சமையல் எரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்களை அடைப்பதன் மூலமாகவோ ஆபத்தை தவிர்க்கலாம்.
மேலும் தொழிற்சாலைகளிலுள்ள ஊழியர்கள் ஆபத்தான பணிகளை உதாரணமாக சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் உயரமான கட்டிடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையடைந்து தப்பிக்கலாம். முக்கியமான கோப்புகள் மற்றும் கணிப்பொறியில் உள்ள தரவுகளை அழியாமல் பாதுகாத்து வைக்க முடியும். அரசாங்கமும் எச்சரிக்கையடைந்து சிரத்தையான பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலகங்களில் உள்ளவர்களை எச்சரித்து பாது காக்கலாம்.
ஒருநாள் முன்னதாக பெறப்படும் எச்சரிக்கையினால் மக்கள் குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுடன் இடம் பெயர்வதற்கு வழிவகுக்கிறது. அர சாங்கமும் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளிலுள்ள மக்களை உஷார்படுத்துவதோடு அவசரகால நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் ஆயத்தமாக முடியும். இதன்மூலம் பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறியமுடியும் அறிவிக்கவும் வேண்டும் என்பது புலனாகிறது.
அகச்சிவப்பு கதிர்கள் மூலம் முன்னறிவிப்புகள்:
விண்கலங்கள் அகச்சிவப்புக் கதிர்களை கண்டறிவதன் மூலம் பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காணமுடியும். சீனாவில் கடந்த 20 ஆண்டுகளாக இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்களை பெறுவதன் மூலம் முன்னறிவிப்புகளை பதிந்துள்ளனர்.
நாசாவின் தெர்மால் அனாமெலி என்ற விண்கலத்தின் மூலம் 21 ஜனவரி 2001ல் அதாவது குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்படுவதற்கு 5 நாட்களுக்கு முன் இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்கள் அறிகுறிகளை பெற்றது. இந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கடியிலுள்ள பாறைகளின் அசைவுகள், ஏற்படும் துளைகள் ஏற்படுவதன் மூலம் எலக்ட்ரான்கள் உற்பத்தியில் மாற்றம் ஏற்படுவதால் இம்மாதிரியான அகச்சிவப்புக் கதிர்கள் பெறப்படுகிறது என்று நம்புகிறார்கள்.
தரைக் கண்காணிப்பு நிலையம் மற்றும் விண்கலம்:
தரைக் கண்காணிப்பு நிலையத்தை விட விண்கலம் (சாட்டிலைட்) மூலம் கண்காணிப்பது சிறந்ததாக இருக்கிறது. தரைக் கண்காணிப்பு நிலையத்தில் குறைந்த அளவு பரப்பளவில் நிகழக்கூடிய புவிப்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை மட்டுமே அறிய முடியும். அதாவது 50 கிலோமீட்டர் சுற்றளவில் நிகழக்கூடிய புவிமாற்றங்களை மட்டுமே உணரிகளின் தன்மைக்கேற்ப அறிய முடியும். ஆனால் விண்கலம் மூலம் அறியப்படும் அறிகுறிகள் பூமியில் அதிகபட்ச இடங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கலாம்.
இன்னும் சில தொழில் நுட்ப சவால்களை ஆராய்ச்சியாளர்கள் சந்தித்து நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஒலி அதிர்வுகளைப் பெறும் விண்கலங்கள் ஏற்கனவே அங்கு ஏற்படுகிற ஒலி மற்றும் புவியில் செயற்கையாக ஏற்படுகிற (எந்திரங்கள் மற்றும் இதர இரைச்சல்கள்) ஒலிகளிலிருந்து புவித்தட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் ஏற்படக்கூடிய ஒலிகளை வேறுபடுத்துவதன் மூலம் உண்மையான பூகம்ப அறிகுறிகளுக்கான சமிக்ஞைகளை பெற வேண்டியிருக்கின்றது.
பூகம்ப முன்னறிவிப்புக் கருவிகளை நிறுவுவதற்கான செலவு:
கலிபோர்னியாவில் நிறுவப்பட்டுள்ள தரை நிலைய உணரி கண்காணிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு மட்டும் 50 லட்சம் முதல் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் ஆகிறது. இதே விண்கலம் மூலம் உணரியை நிறுவுவதற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி அமெரிக்க டாலர்கள் ஆகிறது.
பூகம்ப முன் எச்சரிக்கை ஆராய்ச்சி மற்றும் அதற்கான கருவிகளை நிறுவுவதற்கான செலவு அதிகம் தான். ஆனால் பூகம்பம் ஏற்பட்டப்பின் ஏராளமாக ஆகும் உயிர்ச் சேதம், பொருட் சேதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இது சர்வ சாதாரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு, இராணுவம் இவற்றிற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும்போது விலைமதிக்க முடியாத எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு இச்செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
அதை லேசாக விட்டுவிடவும் முடியாது. எந்த விலை கொடுத்தாகிலும் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும். இம்மாதிரியான எச்சரிக்கைகள் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு இடர்களை தவிர்க்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தவிர்த்து விடலாம். பீதியும், அச்சமும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையை மேற் கொள்ளலாம். மனிதர்களையும் அபாயகரமான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம். எல்லாம் நடந்து முடிந்தபிறகு மறுவாழ்வு, நிதி என்று ஒதுக்குவதைவிட அதற்கு முன்பே இத்தகைய அதிநவீன உயிர்காக்கும் ஆய்வுகளில் செலுத்தப்படும் முதலீட்டின் மிகப்பெரிய இலாபம் மனித உயிரைவிட வேறு என்னவாக இருக்க முடியும்!
எம்.ஜே.எம்.இக்பால், துபாய்
(அதிசயம் தொடரும்)