Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 31,736 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை வெரைட்டி ரைஸ்! 2/2

உருளை மசாலா ரைஸ்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உருளைக்கிழங்கு & 2, மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், தனியாதூள் & ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், மாங்காய்தூள் & அரை டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்கை சேருங்கள். அத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு வெந்ததும் மற்ற தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். குழந்தைகளுக்கு இதன் ருசி மிகவும் பிடிக்கும்.

முருங்கைக் கீரை சாதம் தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், துவரம்பருப்பு & கால் கப், முருங்கை கீரை & அரை கப், பெரிய வெங்காயம் & 1, உப்பு & தேவையான அளவு, நெய் & 2 டீஸ்பூன்.

வறுத்து பொடிக்க: உளுத்தம்பருப்பு & 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை & 2 டீஸ்பூன், பச்சரிசி & 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 4, கொப்பரை துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் & ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், பூண்டு & 3 பல், காய்ந்த மிளகாய் & 1, எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி சாதத்தில் சேருங்கள். அத்துடன் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

வேர்க்கடலை பொடி சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, வறுத்த வேர்க்கடலை & கால் கப்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

வறுத்து பொடிக்க: உளுத்தம்பருப்பு & 2 டீஸ்பூன், கொப்பரை துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் & 5, சீரகம் & அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து வையுங்கள். வேர்க்கடலையை தோல் நீக்குங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சிவக்க வறுத்து, அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து பொடித்துக்கொள்ளுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் சேர்த்து, அத்துடன் நெய், வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். வேர்க்கடலை மணத்துடனும் வித்தியாசமான சுவையுடனும் அசத்தும் இந்த புதுமையான சாதம்.

கத்தரி மசாலா சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், கத்தரிக்காய் & 4, புளி விழுது & ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாதூள் & ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் & 6, தனியா & 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு & ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் & 2 டீஸ்பூன், எண்ணெய் & ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பொடித்து வைத்திருக்கும் பொடியை அத்துடன் சேர்த்து, கரம் மசாலா, புளி விழுது சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் சாதம் சேர்த்து நன்கு கலந்து வையுங்கள்.

ஆந்திரா சர்க்கரை பொங்கல்

தேவையானவை: பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி & ஒரு கப், பாசிப்பருப்பு & கால் கப், சர்க்கரை & ஒரு கப், ஏலக்காய்தூள் & அரை டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், குங்குமப்பூ & சிட்டிகை, கேசரி கலர் & ஒரு சிட்டிகை. தாளிக்க: பல்லுபல்லாக நறுக்கிய தேங்காய் & 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரிப்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை & 8, நெய் & 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியே உதிராக வேகவைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள். அது கொதித்து, சற்று கெட்டியானதும் சாதம், பருப்பு, நெய், ஏலக்காய்தூள், கேசரி கலர், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்குங்கள். நெய்யில், முந்திரி, தேங்காய், திராட்சை வறுத்து சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். விருந்துகளுக்கும் பண்டிகைகளுக்கும் ஏற்ற சாதம் இது.

காராபாத்

தேவையானவை: சீரகச்சம்பா அரிசி & ஒரு கப், பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 3, மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & 2 டீஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு, உப்பு & தேவையான அளவு. தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், நெய் & 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியுடன் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 2 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி, கரைந்து வதங்கியதும் மிளகாய்தூள், கரம் மசாலாதூள், மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். பிறகு, வடித்த சாதம், எலுமிச்சம்பழச் சாறு, தேவையானால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

வெஜ் மசாலா ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி & ஒரு கப், காய்கறிகள் (பீன்ஸ், கேரட், பட்டாணி) & அரை கப், டொமேட்டோ சாஸ் & ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி சாஸ் & ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் & 1, மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், சாஸ்கள், காய்கறி சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு சாதம் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

சிம்பிள் வெஜ்  ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி & ஒரு கப், காய்கறிகள் (பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ்) & அரை கப், பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 3, இஞ்சி&பூண்டு விழுது & ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, நெய் & 2 டீஸ்பூன்.

தாளிக்க: பட்டை & ஒரு துண்டு, லவங்கம் & 2, ஏலக்காய் & 2, எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், கீறிய மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி&பூண்டு விழுது  சேர்த்து 2 நிமிடம் வதக்கி, காய்கறிகள் சேருங்கள். சிறிது உப்பு சேர்த்து, காய் நன்கு வேகும் வரை வதக்கி சாதம், நெய், சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

கட்டா ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி & ஒரு கப், தக்காளி & 3, மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு. தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், நெய் & ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

‘கட்டா’ செய்ய: கடலைமாவு & அரை கப், எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் & அரை டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். கட்டா செய்யக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, கயிறு போல நீளவாக்கில் கனமாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, நன்கு கொதிக்கும்போது உருட்டிய கட்டாக்களைப் போட்டு, நடுத்தரத் தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள் (20 நிமிடம் கூட வேகவிடலாம்). வெந்ததும் நீரை வடித்துவிட்டு, ஆறவிடுங்கள். ஆறிய கட்டாக்களை, சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய கட்டா துண்டுகளைச் சேருங்கள். 3 நிமிடம் நன்கு வதக்கி, தக்காளி சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாதத்தைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும். ருசியோ ருசி என்பார்கள் சுவைத்தவர்கள்!

குறிப்பு: கட்டாக்களை தண்ணீரில் வேகவிடாமல், எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.

அப்பள தேங்காய் சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உப்பு & தேவையான அளவு, அப்பளம் & 4, எண்ணெய் & தேவையான அளவு.

வறுக்க: தேங்காய் துருவல் & அரை கப், கறிவேப்பிலை & சிறிதளவு.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு & 2 டீஸ்பூன், முந்திரி & 6, காய்ந்த மிளகாய் & 4, தேங்காய் எண்னெய் & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். அப்பளத்தைப் பொரித்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து சற்றுப் பொன்னிறமாகப் பொரிந்ததும், பொரித்த அப்பளம், வறுத்த தேங்காய் துருவல், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறுங்கள். அப்பளச் சுவையும் தேங்காய் எண்ணெய் மணமும் சேர்ந்து, வித்தியாசமான சுவை கொடுக்கும்.

ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பால் – 6 கப், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை – தலா சிறிதளவு, தயிர் – அரை கப்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மோர் மிளகாய் – 5, முந்திரிப்பருப்பு – 8, திராட்சை – 10, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பாலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கழுவிய அரிசி சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி நன்கு குழைந்ததும், பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடுங்கள். ஆறியதும், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து குளிர வைத்து பரிமாறுங்கள். விருப்பப்பட்டால், பொடியாகத் துருவிய கேரட், வெள்ளரி சேர்க்கலாம். மாதுளை முத்துக்களையும் சேர்க்கலாம். கலர்ஃபுல்லாகவும் அதிக ருசியுடனும் இருக்கும்.

குறிப்பு: ஆனால், இந்த முறையில் செய்யும் தயிர்சாதம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால், புளித்துவிடும்.

அக்கார அடிசில்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், வறுத்த பாசிப்பருப்பு – கால் கப், பால் – 8 கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், கண்டென்ஸ்டு மில்க் – கால் கப், நெய் – கால் கப், சீவிய பாதாம் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் – கால் டீஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு.

செய்முறை: பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். அரிசி, பருப்பை ஒன்றாகக் கழுவி, பாலுடன் சேருங்கள். சிறு தீயில் வைத்து, அரிசி, பருப்பு நன்கு வேகும் வரை, பால் வற்றும் வரை கிளறுங்கள். ஒரு பாத்திரத்தில், வெல்லத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, சாதத்தில் ஊற்றிக் கிளறுங்கள். அத்துடன் நெய் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து, அடிபிடிக்காமல் விடாமல் கிளறுங்கள் (இல்லையெனில், கண்டென்ஸ்டு மில்க் உடனேயே அடிபிடித்துவிடும்). சற்று சேர்ந்தாற்போல வந்ததும், சீவிய பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்து இறக்குங்கள்.

‘பேக்டு’ ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (மூன்றும் சேர்த்து) – அரை கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி சாறு – அரை கப், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், சீஸ் துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: பூண்டு – 5 பல், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, முதலில் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சாறு, மிளகாய்தூள், சீரகத்தூள், காய் சேர்த்து, பச்சை வாசனை போக கொதித்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல், சாதம் சேர்த்து நன்கு கிளறி ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு சற்று அழுத்திவிட்டு அதன் மேல் மீதமுள்ள சீஸ்துருவலை பரவினாற் போல தூவி ‘பேக்’ செய்யுங்கள். ஓவன் வசதி இல்லாதவர்கள் ஒரு கடாயில் பாதியளவு மணல் பரப்பி அதன் மீது இந்த சாதம் இருக்கும் பாத்திரத்தை வைத்து முப்பது நிமிடங்கள் கழித்து எடுக்கலாம்.

இனிப்பு எள் சாதம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: எள் – கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். எள்ளைக் கல் இல்லாமல் அரித்து, தண்ணீரை வடித்துவிட்டு, வெறும் வாணலியில் போட்டு நன்கு பொரியும் வரை வறுத்தெடுங்கள். மீண்டும் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த எல்லாவற்றையும் வெல்லத்தோடு ஒன்றாகச் சேர்த்துப் பொடியுங்கள். இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, நன்கு கிளறுங்கள். நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டிப் பரிமாறுங்கள். சுவைக்கு சுவை. ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், வெங்காய தாள் – 2 கொத்து, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்.

அரைக்க: காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 4 பல், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காய தாளில் உள்ள வெங்காயத்தை தனியே எடுத்து பொடியாக நறுக்குங்கள். தாளையும் பொடியாக நறுக்குங்கள். மிளகாயை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, உரித்த பூண்டுடன் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர் சாதம், சாஸ்கள், உப்பு, வெங்காய தாள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.

 

நன்றி: அவள்விகடன்