26 – 06 – 2005 அன்று, உத்திரப்பிரதேசம் மீரட் நகரத்தின் சாதர் பஜார் பகுதியில் வசிக்கும் செல்வி இர்ரம் இதுவரை எந்த முஸ்லிம் பெண்ணும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்து செய்தியில் இடம் பெற்றுள்ளார்.
அவருக்கும் , லக்னோவில் மருந்துக்கம்பெனி நடத்தும் ஜியாவுல் சித்தீக் மணமகணுக்கும் அன்று திருமணம் நடக்கவிருந்தது. எல்லா ஏற்பாடுகளும் தயார்! நிக்காஹ்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு சினிமாவில் வருவதுபோல, மாப்பிள்ளை வீட்டார் தங்கள் கைவரிசையைக் காட்டத்தொடங்கினர்.
ஒரு காரும், 3 லட்சம் பணமும் கையேறினால் தான் நிக்காஹ் என்று கண்டிப்புடன் சொன்னார்கள். பெண் வீட்டார் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். கெஞ்சிப் பார்த்தனர். ஒப்புக் கொள்ள மறுத்து விட்டனர் – மாப்பிள்ளை வீட்டார்! சிலர் பரஸ்பரம் சமாதானம் செய்து தொகையைக் குறைக்க முற்பட்டனர். படியவில்லை. கைபிசைந்து – தவித்து நின்றனர் பெண் வீட்டார்!
தகவல் பெண்ணின் காதுக்குப் போனது.
அவ்வளவுதான்!
படித்த அந்தப்பெண் வெகுண்டார்!
“சீதனமாவது ஒன்னாவது? அதெல்லாம் ஒரு மண்ணும் முடியாது! எனக்கு மார்க்கப்படி மாப்பிள்ளை “மஹர்” தந்தால் ஒழிய திருமணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று போட்டாரே ஒரு போடு! அனைவரும் அதிர்ந்து நிற்க, சமாதானம் பேச வந்தவர்கள் தோற்றுப்போக, இர்ரம் சித்தீக்கைப் புறக்கணித்துவிட்டு எழுந்து போய்விட்டார்!
கடைசி நேரத்தில் கலாட்டா செய்தால் காரும் பணமும் பெற்றுக் கொள்ளலாம் என்று கனவு கண்ட மப்பிள்ளை வீட்டார் வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்பினர்!
எக்ஸ்பிரெஸ் இந்தியாவின் ஆன்லைன் வளைத்தளத்தில் இந்தச் செய்தி 28 – 06 – 2005 பதிவாகியுள்ளது!
சமுதாய முன்னோடி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திருப்பத்தூர் வி. நூர்முஹம்மது அவர்கள் 1950 – ல் “சம்மதமா?” என்ற தலைப்பில் புரட்சிக்கதை ஒன்றை எழுதினார். அந்தக் கதையின் கதாநாயகி எடுத்த அதே முடிவை இன்று இர்ரம் எடுத்திருக்கிறார்! ஒரு முன்னோடி சமுதாய எழுத்தாளரின் முற்போக்குக் கனவு நனவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் இப்போது எகிறிவரும் வரதட்சணை மார்க்கெட்டில் பல தகுதி வாய்ந்த பெண்கள் வீட்டைவிட்டுத் திருமண பந்தத்தில் வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்!’ மூத்த குமர்களின்’ எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில்! எந்த ஒருங்கிணைந்த சமுதாயத் திட்டங்களும் நிலைத்த பலனைத் தர முடியவில்லை.
இர்ரமின் இந்த நடவடிக்கை, இந்த நேரத்தில், வரதட்சணை பேரத்தை முன்வைத்து பெண் வீட்டாரைப் பந்தாட நினைக்கும் மணமகனுக்கும் – மணமகன் வீட்டாருக்கும் விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை நோட்டீஸாகும்!
அது தமிழ்நாட்டிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்த்ரவாதமும் இல்லை; அதை அலட்சியம் செய்துவிடவும் முடியாது!
நன்றி நர்கிஸ் ஆகஸ்ட் 2005