சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று ‘pathy’ கள் – Nephropathy, Neuropathy, Retinopathy)
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது.
அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. இன்சுலின் சுரக்காததாலோ அல்லது இருக்கும் இன்சுலினை உடம்பு பயன்படுக் கொள்ள வகையில்லாததாலோ சேமித்து வைக்கப்பட்ட புரதத்தையும் கொழுப்பையும் உடல் இழக்க நேரிடுகிறது. அதன் விளைவாக உடல் இளைக்கிறது.
இப்படியே இரத்தத்தில் சேர்ந்துவிடும் பொருட்களால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. விளைவு? உடலுறுப்புக்களுக்குப் போதிய இரத்தம் கிட்டாது.
குறிப்பாக மிக நுண்ணிய இரத்த நாளங்களைக் கொண்ட கண்கள், சிறுநீரகங்கள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப் படுகின்றன. சிறு நீரகங்கள் செயல் இழக்க ஏதுவாகிறது. இதில் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியவை கண்கள். கண்களின் விழித்திரையில் (retina) மிக, மிக நுண்ணிய இரத்த நாளங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளில் ஏற்படும் அடைப்புக்களால் அவை வெடித்து கண் உள்ளேயே இரத்தம் கசியலாம். இந்த அடைப்புக்களால் புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் தோன்றி அவை தடித்து விழித்திரையின் சமமான பரப்பை மேடுகளாக மாற்றலாம். அதன் விளைவாக ஒழுங்கில்லா உருவங்கள் (distorted images) தெரியலாம். இவைகளின் பின் விளைவுகள் பார்வை இழப்பாகவும் அமையும்.
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே இருதய நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிக்கு இரத்த நாள அடைப்பு ஏற்படுவதால் இதயநோய் வருவதற்கு எளிதாக வழி வகுத்து விடுகிறது. இதய நோயாளிகளில் ஒரு கணிசமான அளவு சர்க்கரை நோய் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
சர்க்கரை நோயாளிகளிடையே ஏற்படும் மற்றொரு சிக்கல், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாகும். குறிப்பாக கால்களில் மெல்ல மெல்ல உணர்ச்சிகள் குறைந்து விடும். அதனால் ஏதேனும் அடித்தாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ கூட வலி தெரியாது. எனவே நோயாளி அதை கவனிக்காது அலட்சியம் செய்து விடுவார். மேலும் கால்களில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதால் புண் எளிதில் ஆறாமல் விரைவில் பரவும். அதன் விளைவாக அப்பகுதியை வெட்டியெடுக்கும்படியாகக் கூட நேரலாம். இவையன்றி வேறு உறுப்புக்களும் பாதிப்படையலாம்.
சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று ‘pathy’ களைப் பற்றிச் சொல்வார்கள்:
- Nephropathy (நெப்ரொபதி) – சிறு நீரகக் கொளாறுகள் – செயலிழத்தல்
- Neuropathy (நியுரொபதி) – நரம்புகள் பாதிக்கப் படுதல்
- Retinopathy (ரெட்டினொபதி) – கண் விழித்திரை பாதிப்படைதல் – பார்வை இழத்தல்
இவையல்லாமல் அவ்வப்போது தொற்றும் சில்லரை நோய்கள். மற்றவரைவிட சாதாரணமாக நம்மிடையே புழங்கும் சிறு சிறு நோய்கள்கூட இவர்களை எளிதில் பற்றிக் கொள்ளும். இந்த ‘இனிப்பு’ நோயின் கசப்பான விளைவுகள் இவை. மேற்கண்ட விளைவுகளைப்பற்றித் தெரிந்து கொள்ள முறையான மருத்துவ பரிசோதனைகள் தேவை.
முறையான – குறிப்பாக நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் தேவையான சோதனைகளைச் செய்வார்கள். அவற்றுள் சிலவற்றை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.
எம். முஹம்மது ஹுசைன் கனி