Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2009
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,468 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை

என்னுரை

அந்த நூலின் சில பக்கங்கள் என்னை அதிரிச்சிக்குள்ளாக்கியது!

மதுரை காமராசர் மற்றும் மனோன்மனியம் சுந்தரனார் பல்ககலைக்கலகங்களில் இளங்கலை வரலாறு பயிலும் மாணவர்கள் “இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு” பற்றி பயில, அவர்களுக்கு வழிகாட்டி நூலாக அதிகம் பயன்படுவது பேராசிரியர் G. வெங்கடேசன் எழுதிய History of Freedom Struggle in India நூலாகும். இந்நூலின் 251-253 பக்கங்களில் மாப்பிள்ளைப்புரட்சி பற்றிப்பேசிவரும் ஆசிரியர்:

மாப்பிள்ளை கிளர்ச்சி ஒரு சுதந்திரப்போராட்டக்கிளர்ச்சியே அல்ல, அது மதக்காழ்ப்புணர்ச்சி காரணமாக மலபார் முஸ்லிம்கள் ஏற்படுத்திய கலவரம். மேலும் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை கேரளாவில் பின்னடையச்செய்தது இக்கிளர்ச்சியே. அதுமட்டுமல்ல மலபார் முஸ்லிம்போராளிகளும், மதவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தனர் – மதமாற்றம் செய்தனர் – இந்துப்பெண்களைக் கற்பழிதிதனர் – இந்துக்களின் உடமைகளைக் கொள்ளையிட்டனர் – வீடுகளைத் தீயிட்டனர்!*

*G.Venkatesan, History of Freedom Struggle in India, p.p251-253.

-என்று மாப்பிள்ளைக்கிளர்ச்சியை மதிப்பீடு செய்கிறார். மிகப்பெரும் தியாகம் புரிந்த பரம்பரையை – அதன் வரலாற்றை இளம் நெஞ்சங்களுக்குத் துவேச எண்ணத்துடன் அறிமுகம் செய்யும் வகையில் எழுதியுள்ளார்.

இந்திய மண்ணின் விடுதலைக்காக – பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தென்னகத்தில் நிகழ்ந்த ரத்தப்புரட்சி… மாப்பிள்ளைப்புரட்சி. கேரளாவின் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்ககள் ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராகவும் – அவர்களுக்கு விசுவாச ஊழியர்களான மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த இப்புரட்சியை ஒடுக்க மாப்பிள்ளை அவுட்ரேச் சட்டம், மாப்பிள்ளைக் கத்திச் சட்டம் போன்றவற்றை மலபார் முஸ்லிம்கள் மீது அரசு தினித்தது.

கிலாபத் இயக்கத்தின் எழுச்சியில் நிகழ்ந்த இக்கிளர்ச்சியின் போது பொக்காத்தூரில் உயிரிழந்த மாப்பிள்ளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 600. பட்டாம்பியில் உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 500. கைது செய்யப்பட்டு திரூரிலிருந்து கோயம்பத்தூருக்கு சரக்கு ரயிலின் காற்றுப்புகாத பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டு வரும்போது, மூச்சுத்திணறி இறந்த மாப்பிள்ளைகளின் எண்ணிக்கை 55 என்று 1921 செப்டம்பர் 1 – இல் வெளியான “தி இண்டிபென்டன்ட்” பத்திரிக்கை கூறியது.*

*B.M.Tank, Non-Co.operation Movement in India.1921, A Historical Study, P.106.

இதுவெல்லாம் மாப்பிள்ளை முஸ்லிம்களின் தியாகத்தைப் பற்றி நான் படித்து கண்கள் பனித்த வரலாறு.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதிய பல வரலாற்று அறிஞர்களது நூல்களின் பக்கங்களுக்குள் சோகங்களின் கனத்தோடு அடைபட்டுக்கிடக்கும் இந்தப்புரட்சி வரலாறு பேராசிரியர் வெங்கடேசன் அவர்களுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சரியமே.

1985- இல் வெளிவந்த இவரது நூலின் ஆங்கில மற்றும் தமிழ்ப் பதிப்புகளையே இளங்களை மாணவர்கள் அதிகமாகப்படிக்கின்றனர். எத்தனையோ நேர்மையான ஆய்வு மனம் கொண்ட பேராசிரியர்கள் – வரலாற்று அறிஞர்கள் தமிழகத்தில இருந்தும், இவரது வரிகளுக்குள் முகம் காட்டும் வகுப்புணர்வுக்கு ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்காதது வருந்துதற்குறியது.

ஒரிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் முன்னாள பாராளுமன்ற உறுப்பினரும் வரலாற்று அறிஞருமான B. N. பாண்டே அவர்கள் எழுதிய “இஸ்லாமும் இந்தியக் கலாச் சாரமும்” என்ற நூலைப்படித்தபோது, B.N. பாண்டே போன்ற அறிஞர்களுக்கு இருந்த தார்மீக உணர்வு கூட இஸ்லாமிய கல்வியாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டேன். என்னை ஆதங்கப்பட வைத்த அக்கட்டுரைச்செய்தி இது தான்:

B.N.  பாண்டே அவர்கள் 1928 – இல் அலகாபாத்தில் மாவீரர் திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, ஆங்கிலோ -பெங்காலி கல்லூரி மாணவர் மன்றத்தின் வரலாற்றுக்கழகத்தை தொடங்கிவைத்து உரையாற்ற அழைக்கப் பட்டிருந்தார். அவ்வுரைக்காக ஆயத்தம் செய்யும் போது, அன்று ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஒரிசா, பீஹார், பெங்கால் மாநிலங்களின் உயர்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நூலைப்படித்து அதிர்ந்திருக்கிறார்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறைத் தலைவர் டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய அவ்வரலாற்று நு}லில், B.N.  பாண்டே அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி இதுதான்:

திப்புசுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் இணையப் பலாத்காரம் செய்த போது, அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்!

– இத்தகவலைப் படித்தவுடன் B.N.  பாண்டே உடனடியாக, “எந்த ஆதாரத்தைக்கொண்டு இதை எழுதினீர்கள்” -என்று டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். பல கடிதங்களுக்குப் பிறகு டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரியிடம் இருந்து வந்த கடிதத்தில், “மைசூர் கெஸட்டில் இருந்து இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது” – என்று பதில் வருகிறது. உடனடியாக மைசூர் பல்கலைக்ககைத்தின் துணைவேந்தர் சர்.பிஜேந்திரநாத் ஸீல் அவர்களுக்கு, “டாக்டர்.ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் மைசூர் கெஸட்டிலிருந்து எடுத்தாக கூறப்படும் செய்தி உண்மைதானா” – என்று விசாரித்து எழுதுகிறார். துணைவேந்தர் அக்கடிதத்தை, அன்று மைசூர் கெஸட்டின் புதுப்பதிப்பினைத் தயார் செய்து கொண்டிருந்த பேராசிரியர் ஸ்ரீஹண்டையா அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் மைசூர் கெஸட்டினை
ஆராய்ந்து அலசிவிட்டு, “இது மாதிரி சம்பவம் எதுவும் மைசூர் கெஸட்டில் இடம் பெறவில்லை” – என்று பதில் தருகிறார்.

அத்தோடு திப்புசுல்தானின் பிரதம மந்திரி புரணாயா என்ற பிராமணர் என்பதையும், சேனைத்தலைவர் கிருஷ்ணராவ் என்பதையும் தெரிவித்தார். மேலும் திப்புசுல்தான் 156  இந்துக் கோவில்களுக்கு வருடாந்திர செலவுக்காக மாண்யம் வழங்கிய பட்டியலையும்: சிருங்கேரி மடம் ஜகத் குரு சங்கராச்சாரியாருக்கும் திப்புசுல்தானுக்கும் இருந்த நேச உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களாகத் திப்புசுல்தான் சிருங்கேரி மடத்திற்கு எழுதிய 30 கடிதங்களின் புகைப்பட நகல்களையும் B.N. பாண்டே அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.*

(*மராத்தியைச் சேர்ந்த பிண்டாரிகள் எனச்சொல்லப்பட்ட முரட்டுப்படையினர் ரகுநாதப் பட்டவர்த்தனின் தலைமையில் சிருங்கேரி மடத்தையும் சாரதா ஆலயத்தையும் (1791-இல்) கொள்ளையிட்டனர். சாரதா பீடம் உட்பட 60 லடசம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையிட்டதோடு, பிராமண அர்ச்சகர்கள் பலரையும் கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் துங்கபத்திரா நதிக்கரையில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் தனது உண்ணா விரதத்தை கை விடும் படியும், இழப்புகளை ஈடு செய்வதாகவும் பீடாதிபதிக்கு திப்புசுல்தான் எழுதிய மடல்களுள் ஒன்று.
பார்க்க பின்னிணைப்பு.1 – Page 35)

பேராசிரியர் ஸ்ரீஹண்டையாவிடமிருந்து பெற்ற ஆதாரங்களைக் கொண்டு, அன்று பாடத் திட்டத்திற்கான நூல்களைத் தேர்வு செய்யும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு, “பொய்யும் புனைந்துரையுமாக அமைந்துள்ள டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்” – என்று B.N.  பாண்டே எழுதுகிறார். அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அஸ்டோஸ் முகர்ஜி, இதன் மேல் நடவடிக்கை எடுத்து டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலைப்பாடத்திட்டத்தில் இருந்து தடை செய்கிறார்.**

(** B.N. Pande, “Distortion of medival Indian History”, Islam and Indian Culture Pa37-39)

அறிஞர் B.N.  பாண்டேயின் இம்முயற்சியினை ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்றால், திப்புசுல்தான் பற்றி ஒரு வரலாற்று நூலில் வெளியான தவறான தகவலை அப்புறப் படுத்துவதற்காகவும் வரலாறு நேர்மையாகச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம் அல்லாத ஒரு வரலாற்று அறிஞர் மேற்கொண்ட முயற்சிகளில், முஸ்லிம் அறிஞர்கள் இறங்காத காரணத்தினால்தான் ஆங்கிலேயர் காலம் தொட்டு இன்று வரை இந்திய இஸ்லாமியரின் வரலாறுகள் திரிக்கப்பட்ட வரலாறாகவே வெளிவந்துள்ளன.

இந்தியாவின் வரலாறு அதிலும் குறிப்பாக இந்திய இஸ்லாமியரின் வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை.

முஸ்லிம்களைத் தேச விரோதிகள், தேசப்பற்று இல்லாதவர்கள், வன்முறையாளர்கள், இந்த மண்ணின் மரபுகளுடனும் இந்திய தேசத்தின் பண்பாட்டு பாரம்பரியங்களுடனும் ஒத்துப் போகாதவர்கள் என்றெல்லாம் கட்டுக்கதைகள் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் இந்திய தேசத்தின் விடுதலைப்போரில் பச்சை ரத்தங்களாய் பரிமாரப்பட்ட இஸ்லாமியர்களின் தியாகங்களும் வரலாறுகளும் மீண்டும் மீண்டும் பேசப்படவேண்டும்.

இந்த தார்மீக பொறுப்புணர்வின் அடிப்படையில் தான் தியாகத்தின் நிறம் பச்சை – என்ற இந்நூலை, நான் அறிந்த வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு படைத்துள்ளேன்.

இந்திய விடுதலைக்கு இஸலாமியர் ஆற்றிய தொண்டுகளை முழுமையாகப் பேசுவதோ, பல்வேறு தளங்களில் நின்று தியாகம் புரிந்தோர் பெயர்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதோ என் நோக்கமல்ல. என் மனதைப் பாதித்த விசயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை மட்டுமே இந்நூலின் பக்கங்களுக்குள் நான் பத்திரப்படுத்தியுள்ளேன்.

இந்நூலாக்கத்திற்கு துணைநின்ற நெஞ்சங்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். வரலாற்று ஆதாரங்களைத்திரட்ட துணை நின்ற முனைவர் S. வர்க்கீஸ் ஜெயராஜ் மற்றும் நண்பர்களுக்கும்: தேவையான நூல்களைத் தந்து உதவிய .. இன்று தமிழகத்திலேயே அதிகமான இஸ்லாமிய ஆன்மிக – இலக்கிய நூற்களைச் சேகரித்து வைத்துள்ள “இஸ்லாமிய நூற்காவலர்” கம்பம் S. முகம்மது அலி அவர்களுக்கும்: எனது எழுத்தாக்கம் நூல் வடிவம் பெற முழு ஒத்துழைப்பு நல்கிய தக்கலை ஹாமிம் முஸ்தபா அவர்களுக்கும் என் நன்றிகள்.

என் எண்ணங்களை – எதிர்பார்ப்புகளைக் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைத்து தந்த நாகர்கோவில்
“இமேஜ்”|ஆப்செட் பிரிண்டர்ஸ்-க்கும்: நூலை மிகச்கிறப்பாக பதிப்பித்து வெளியிட்ட.. சமுதாயத்தின் விடியல் வெள்ளியாத் திகழும் இலக்கியச்சோலை பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள்.

இந்திய விடுதலைக்காகப் பல்வேறு நிலைகளில் நின்று இஸ்லாமியர் ஆற்றிய பணிகளை – தியாகங்களை இங்கு வாசகர்களுக்குள் வசப்படுத்த முயற்சித்துள்ளேன். வாசியுங்கள்… விமர்சனங்களை எனக்கு எழுதுங்கள். அவை மேலும் என்னையும் என படைப்புகளையும் செம்மைப்படுத்த உதவும்.

அன்புடன்
மு. அப்துல் சமது
தேர்வுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை – ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம் – 625533.

வெளியீட்டாளர் முன்னுரை

நன்றி கொல்வதை வாழ்க்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள்.

தேசப் பிரிவினைக்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள்.

இந்த பாசிஸ்டுகள் மேலே நாம் குறிப்பிட்ட பொய்யைப் பரப்புவதோடு நின்று விடவில்லை. வரலாற்றின் ஒரு முக்கியப்பகுதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் செய்தார்கள். அப்படி அவர்கள் புதைத்த வரலாறு தான் இந்திய விடுதலைப் பேரில் முஸ்லிம்களின் பங்கு.

இந்த பாசிஸ்டுகள் இன்னொரு பாதகத்தையும் எந்தத் தயக்கமுமின்றி செய்து வருகின்றார்கள்.
அது இந்தியாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்றொரு வடி கட்டின பொய்யையும் பரப்பி வருகிறார்கள்.

இந்தப் பொய்கள் அவர்கள் எதிபார்த்த பலனை அவர்களுக்குத் தராமல் போய்விடவில்லை இந்தப் பொய்கள் இன்றைய முஸ்லிம்களிiயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தித் தலைதாழ்த்தச் செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

இந்த நூல் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்து வெளியே கொண்டு வந்து ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தருகின்றது.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம்!! இந்த வiலாறு, அதாவது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடுத்த போர் ஒரு நீண்ட நெடியகாலம் வரை நீடித்தது. ஆகவே முஸ்லிம்களின் விடுதலைப் போர் வரலாறு மிகவும் நீண்டதொரு வரலாறு.

இந்த வரலாறு இல்லாத வரலாறு குறையுடையதொரு வரலாறே!!

ஆதலால் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக மக்கள்முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

இந்த வகையில் நூலாசிரியர் அப்துல் சமது அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள் தொடர வேண்டும்.

இதனாலெல்லாம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிரான இந்திய விடுதலைப் போர் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. ஒரு பெரும் இடைவெளி கொண்டதாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு வரலாற்றுப் படுகொலை ஒரு பலாத்காரத்தோடு திணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் History Of Freedom Struggle in Indiaை ஓர் எடுத்துக்காட்டு.

இதேபோல்தான், யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் ஒரு டிபாய் வரலாறாக வரையப்பட்டு அரசு அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த நூல் இன்னும் இரடடிப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

இந்தியாவின் விடுதலை வரலாற்றை வரைகின்றவர்கள் இந்த வரலாற்றை – இஸ்லாத்தின் சீரிய பங்கை மறந்து விடக்கூடாது! இதை இன்னும் குறிப்பாகச் சொன்னால் “தேசியம்” என்பது பிற்றை நாட்களில் தோன்றிய ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்களின் விடுதலைப் போர் “தேசியம்” என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது.

இந்தியாவில் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். அதே காலகட்டத்தில் கவ்காஸ் பகுதியில் ஸார் மன்னர்களின் ஆதிக்கத்திற்கெதிராக இமாம் காசிமுல்லாஹ் ஷஹீத் இமாம் ஷாமில் ஆகியோர் போராடினார்கள்.

ஆங்கிலேயர்கள் தோல்வியை முதலில் முத்தமிட்டது ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் கைகளில்தான் (இந்த நூலின் பக்கம் 9). அங்கே முஸ்லிம்களை ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறுத்தியது இஸ்லாம்தான்.

இந்த நூலின் பக்கம் 16,17ல் குறிப்படப்படும் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்தது இஸலாம்தான். ஷஹீத் செய்யத் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் அல் மியான் என்ற அபுல் ஹஸன் அலி நத்வீ அவர்கள் இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்தியாவில் முஸ்லிகள் போராடி தங்கள் உயிரைத் தந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் எகிப்தில் ஆங்கிலேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உற்சாம் தந்தது இஸ்லாம்தான்.

இந்த உண்மைகளின் ஒளியில் இஸ்லாத்தின் பங்கு உரிய அழுத்தத்தோடு எடுத்துச் சொல்லப்பட
வேண்டும். இந்த நூலை “இலக்கியச்சோலை”யின் வெளியீடாக வெளியிட முன்வந்து, இசைவும் தந்த பேரா.அப்துல் சமது அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“இலக்கிச்சோலை”யின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் வல்லோன் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் தொடருகின்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்.

வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தருவர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இவண்,
மு. குலாம் முஹம்மது, காப்பாளர், இலக்கியச்சோலை