எழுபதுகளில் தமிழகத்தின் பல இதழ்களுக்கும் அட்டைப் படங்கள் வழங்கும் பகுதி நேர புகைபடக் கலைஞனாக இருந்தபோது எடுத்த ஒரு புகைப்படம் அவசரமாகத் தேவைப்பட்டது. நேரம் ஒதுக்கித் தேட அரம்பித்த போது, கையில் அகப்பட்டது 1972 , மார்ச் மாதம் – ம் 3 -ம் தேதி நிகழ்ந்த என் திருமண ஆல்பம்! உடலில் ஊடுருவியது ஒரு மின்சாரப் பாய்ச்சல்! இருக்காதா பின்னே? மூன்று பத்தாண்டுகள் உருண்டோடிப் போய்விட்ட அதிசயத்தை மனதில் அசை போட்டவாறு பக்கங்களைப் புரட்டிய போது, ஒரு படத்தில் கண்ணும் கருத்தும் நின்றன.
அந்தப் படத்தில் மொத்தம் 10 பேர் இருந்தனர்.
கழுத்தில் மாலையுடன் நான்!
நிக்காஹ் செய்விக்கும் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த ஆலிம் பெருந்தகை; அருகில் மாமா முஹம்மது களஞ்சியம் மரைக்காயர்; மாமனார் யஹ்யா மரைக்காயர்; அடுத்து சித்தார்கோட்டை பேஷ் இமாம் அப்துல் ஹையி ஆலிம்; பி.எஸ்.கே.ஹிழ்று முஹம்மது அப்பா; அம்பலம் யாகூப் அப்பா! ஓரத்தில் என் மச்சான்மார்கள் டாக்டர் அப்ஸல்கான், வருசைக்களஞ்சியம்!
இதில் இப்பொது என்னைத்தவிர வேறு யாரும் இல்லை!
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுச் சென்றுவிட்டர்கள் ஏற்கனவே!
அடுத்தடுத்து பக்கங்களைப் புரட்டப் புரட்ட, இருப்பவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தந்தது.
ஆம்! 60 -க்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டுப் போய்விட்டிருந்தனர்.
அந்த ஆல்பத்தில் இருந்தவர்களில் பலர் இம்மை வாழ்க்கையில்
- முத்திரை பத்தித்தவர்கள்!
- ஞானம் மிக்கவர்கள்!
- கொடை வள்ளல்கள்!
- ஜமீந்தார்கள்!
- டாக்டர்கள்!
- ஜமாத் நிர்வாகிகள்!
இப்படி பல வகையிலும் சமுதாயத்துக்குப் பிரயோஜனமாக வாழ்ந்தவர்கள்!
அவர்கள் உறவு வட்டத்திலும் – ஊர் வட்டத்திலும் விட்டுச் சென்ற அழுத்தமான சுவடுகளைச் சுற்றியே நினைவலைகள்!
- அவர்களின் கம்பீரமான குரல்கள்!
- ஆஜானுபாகுவான தோற்றங்கள்!
- அதிகார முறுக்கல்கள்!
- ஆழ்ந்த ஞானப் பார்வைகள்!…….
எங்கே அவர்கள்?
எங்கே அனைத்தும்?
இந்த ஒவ்வொருவரிடமும் எனக்கிருந்த ரத்த உறவுகள் – சம்பந்தங்களுக்கும் அப்பால், வியாபித்த தொடர்பு பந்தங்கள் மனதில் முடிவில்லாத வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நின்றன.
அவர்களில் பலர் என்னைப் புடம் போட்டவர்கள்!
பாதை வகுத்தளித்து பண்பாட்டைப் பாய்ச்சியவர்கள்!
நிர்வாக முறைமைகளில் நேர்மையின் ஸ்தானம் எது என்பதை நெஞ்சில் நிலை நிறுத்தியவர்கள்!
அவர்கள் எனக்குப் பயன்பட்டார்கள் பல வகையிலும்; இப்பொதும் என் நினைவில் நெஞ்சில், செயல்பாட்டில் – நிற்கிறார்கள்!
அதே போல நானும் அவர்களுக்கு ஓரளவு பயன்பட்டேன். குறிப்பாக அவர்களின் இறுதி கட்டங்களில்! முதுமையின் பிடியில் அவர்கள் முடங்கிக் கொண்டபோது, ஒரு மருத்துவன் என்ற அளவில் மட்டுமல்ல; அவர்கள் பிள்ளைகளைவிட சற்றுக் கூடுதலாகவே அவர்களது இம்மை நிலைப்பாடுகள் – செயல்பாடுகளைப் புரிந்தவன் என்ற அளவிலும் ஒரு நண்பன் போலப் பயன்பட்டேன்!
அடடா…! அந்தக் கடைசி நேரத்தை அவர்கள் எதிர்கொண்ட விதம்தான் எத்தனை ஆன்மீகப் பாடங்களை உணர்த்துவனவாய் அமைந்தன?
வலி – வேதனை!
வாரக் கணக்கில் உணவெடுக்க முடியாமை!…. இப்படி இருக்கையில் வாய் மட்டும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்! அருகில் சென்று அவதானித்தால், “அல்லாஹ்!அல்லாஹ்!” என்ற அசைவுகளைப் புரியலாம்!
சுப்ஹானல்லாஹ்!
உறவுகளின் அலட்சியங்கள் – வீட்டு ஓரங்களில் வாசங்கள்!
கொல்லைப் புறங்களிலே குளிரிலும் வெயிலிலும்!
இருந்தும் கண்களில் தெறித்த கம்பீர தீட்சண்யங்கள்!
இதுதான் உலகம் – இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்ற யதார்த்த முத்திரைகள்!
ஊசிகளில் பயனில்லை; இனிமேல் அதுகூட உபத்திரவம் தான் என்று நினைத்து ஓரிரு நாட்கள் போய்ப் பார்க்காமல் இருந்துவிட்டால், “உங்களுக்கும் அலுத்து விட்டதா டாக்டர்?” என்ற கேள்வியால் ஒரு முழு நாவலையும் தந்து சென்ற பெரியவர்கள்!
“ஏன் மாமா, என்னைப் பார்க்க வரயிலே ரொம்ப உடஞ்சு போயி வர்ரீங்க? மருமகன் கொஞ்ச வயசுல போகப் போறானே என்ற கவலையா?” என்று கேட்டு அதிர வைத்த – கேன்சரில் மறைந்த முப்பது வயது கூட எட்டாத உறவுக்காரப் பையன்!
“துனியாவோட பேச்ச இத்தோட முடிச்சிக்கிட்டேன்; இனிமே யாரும் தயவு செஞ்சி என் கவனத்தைச் சிதரடிச்சிடாதீங்க” என்று உறவினரிடம் கூறிவிட்டு, என்னையும் என்னுடன் நின்ற டாக்டர் ராமச்சந்திரனையும் நோக்கி “ஒரு மனுஷன் உசிரோட இருக்கிற வரைக்கும் தன் உயிரைக் காப்பத்திக்க வைத்தியம் செஞ்சிக்கிறது கட்டாயக்கடமை(பர்ள்); அதனால், முடிவு என்னங்கிறதைப் பத்திக் கவலைப் படாமல் உங்க சிகிசையைத் தொடருங்க” என்று கூறிவிட்டு எந்த சிகிச்சைக்கும் தேவையேற்படுத்தாமல் ஸுப்ஹ் பாங்குக்கு து ஆ ஓதிவிட்டுச் சரிந்துவிட்ட மாமா!அவர்கள் இறுதியாகப் படித்த நூல்கள் “திருக் குர்- ஆன்; இஹ்யா; மேன் ஆப்டர் டெத் என்பது தெரிந்து அதிரிந்த கணங்கள்! ஆச்சரியங்கள்!
என்று ஊற்றுக்கண்ணின் பீரிட்டுப் பாயும் அழுத்தங்களில் எத்தனை அத்தியாயங்கள் விரியப்போகின்றன? தெரியவில்லை!
வீடுகளில் முடங்கி மூலையில் கிடக்கும் ஆல்பங்கள் திறக்கப் படட்டும்!
மூலையில் போட்டுவிட்ட பழைய வீடியோ கேசட்டுகளை ரீவைன்ட் செய்து மறுபடியும் ஓட விடுங்கள்!
“உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் என்னவாயின? அதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அவற்றில் உங்களுக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குர் ஆன் : 30:40)
என்ற அல்லாஹ்வின் குரல் அவற்றில் கேட்கும்!
அகத்தில் ஒளி பாய்ச்சும்!
ஆன்மீக வெளிச்சத்தில் தெளிவு கிடைக்கும்! இன்ஷா அல்லாஹ்.