Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2009
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,836 முறை படிக்கப்பட்டுள்ளது!

மேலாண்மை சரிவுகள்

உறவினர் ஒருவர். அவருக்கு நடுத்தர வயது. கனத்த குரல்! கம்பீரமான உடல்வாகு!

கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த என்னை கைதட்டி அழைத்தார்!

அருகில் சென்றேன்.

“என்னுடன் வா” என்று சுருக்கமாகச் சொன்னார்.

சின்னப்பள்ளிவாசல் காம்பௌன்ட் சுவர்ப்பக்கம் செல்லும் வரை ஒன்றும் பேசவில்லை.

குழப்பத்துடன் அவருடன் சென்றேன்.

சுவரில் கரியால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகத்தைச் சுட்டிக்காட்டி, “இதை எழுதியது நீதானே?” என்று கேட்டார்!

“இல்லை” என்றேன்.

அது ஒரு கொச்சையான வாசகம்!

ஆனால், அதற்கருகில் எழுதப்பட்டிருந்த ஒரு நாடக விளம்பரத்தைச் சுட்டிக்காட்டி, “அது நான் எழுதியது” என்றேன்.

அவர் குரலை உயர்த்தி பயங்காட்டினார்.

அந்த தப்பான வாசகத்தை நான் எழுதவில்லை என்பதை உறுதிபடச் சொன்னேன்; நாடக விளம்பரம் நான் அப்போது எழுதி வீட்டு வெளித்திண்ணையில் அரங்கேற்றப் போகும் நாடகத்துக்கானதென்றும், அதை நான் தான் எழுதினேன் என்பதையும் ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச நேரம் எழுத்துக்களை ஊன்றிப் பார்த்துவிட்டு, கீழே கிடந்த ஒரு கரித்துண்டை எடுத்துத் தந்து சுவரில் ஓரிரு வார்த்தைகள் எழுதச் சொன்னார்.

அந்த எழுத்துக்களைப் ஒப்பிட்டுப் பார்த்தபிறகு சமாதானமாகி,” சரி, நீ போ ……! ஆனால், இனிமேல் சுவரில் எழுதும் கெட்ட பழக்கத்தை – அது எதற்காக என்றாலும் விட்டு விடு” என்றார்.

“நீ எழுதியது குற்றமற்ற வாசகம்தான் என்றாலும், அதற்கருகில் கொச்சையாய் எவனோ ஒருவன் எழுதிய பழியும் உன் உன்மீது விழுகிறது பார்த்தாயா?” என்று விளக்கமும் சொன்னார்!

நான் சுவரில் எழுதியது அதுதான் கடைசி முறை.!

படித்து, வாழ்க்கையில் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்த பிறகு ஒரு விழாவில் பேசிக்கொண்டிருக்கும் போது முன்வரிசையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவரைப் பார்த்துவிட்டேன். பளிச்சிட்ட நினைவுகளை பகிரங்கமாகக் கூறினேன், நன்றியறிதலுடன்!

கூட்டம் முடிந்த பிறகு .. என்னருகே வந்து அப்பெரியவர், “என்ன தம்பி … இப்படி….?” என்று உருக்கத்துடன் கேட்டார்.

“இது நன்றிக்கடன்” என்றேன்.

இப்படித்தான், இளவயதில், அறியாமையால், விளையாட்டுப் போக்கால், நாம் செய்த சிறு சிறு தவறுகளையெல்லாம், அந்தக் காலத்துப் பெரியவர்கள் – அவர்கள் உறவுக்காரர்களாய் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை – உடனே திருத்த முயல்வார்கள்; கண்டிப்பார்கள்; கனிவுடன் புரிய வைப்பார்கள்!

பள்ளிவாசலில் – வெளிப்பகுதியில் உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்தபோது, பள்ளி ‘முஅத்தின்’ சத்தாரப்பா அமைதியாக அருகில் வந்து, “தம்பிங்களா, நீங்கள்லாம் காலேஜுல பெரிய படிப்புப் படிக்கிறீங்க…. தப்பா எடுத்துக்கக் கூடாது… பள்ளி வாசல்ல இருந்து வீண் பேச்சுப் பேசுறது பெருங்குத்தம் …. வீட்டுக்குப் போயி, அங்க பேசுங்க..” என்று சொன்னது……..

பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி ஊரில் வேடிக்கைப் பிறவி போல வலம் வந்துகொண்டிருந்த “லத்தீப்ஸா”, “ஓட்டைச்சட்டி அவுலியாப்பா” போன்றவர்களைச் சீண்டி விளையாடியபோது, அதை “பெரிய ஆலிம்ஸா” உஸ்தாதிடம் தெரியப்படுத்தி உதை வாங்கிக் கொடுத்துத் திருத்திய “குஞ்சுத்தாடியப்பா” என்ற ‘உதவி உஸ்தாத்’ …… இப்படி எத்தனை பேரின் மேற்பார்வையில் – கண்டிப்பான மேலாண்மையில் – இன்று இந்த நிலைக்கு வர முடிந்திருக்கிறது!

ஆக, பெற்றோர் உற்றார் மட்டுமல்ல; நம் சுற்றமும் சூழலும்கூட நாம் ஆரோக்கியமாக உருவானதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பது தெளிவு!

  • அந்த மேலாண்மை சமூக வாழ்வைச் சீர்மைப் படுத்தியது!
  • கரடுமுரடாகிவிடுவதிலிருந்து காப்பாற்றியது!
  • இன்று நம்மை மேன்மக்களாக்கி, கண்ணியமாக வாழ வைத்திருக்கிறது!

இப்போது அந்த மேலாண்மை முழுமையாக சமுதாயத்தில் இருக்கிறதா?

பள்ளிவாசலில் ஒரு விடலைச் சிறுவன் செய்த தவறுக்காகக் கண்டித்த பெரியவர் ஒருவரைப் பார்த்து “இதப்பத்தியெல்லாம் கண்டுக்காம நீ பாட்டுக்குப் போ பெருசு!” என்று அவமானப் படுத்திய ஒரு நிகழ்வு பார்வைக்கு வந்தபோது…..

ரமளான் பகலில் பகிரங்கமாக சிகரெட் பிடித்த உறவுக்காரப் பையனுக்கு அது பாரதூரமான தவறென்று சுட்டிக் காட்டியதற்காக படாதபாடு படுத்தப்பட்ட பெரியவர் ஒருவரைப் பற்றிக் கூறக்கேட்ட போது…..

இந்த விடலைகள் மீது ஆத்திரம் வருவதை விட ஆதங்கமும், அனுதாபமும்தான் மேலிடிகிறது!

இப்படியான சிறு சிறு செதுக்குதல்களில்தான் வாழ்வின் கலாசார வடிவமைப்புப் பூரணமாகிறது என்பதை அவர்கள் உணராமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் மனதில் நிறைகிறது!

பெற்றோர்களால் கன்காணிக்க முடியவில்லை – அதற்கு நேரமுமில்லை!
ஆசிரியர்களுக்கு ஆலோசனை சொல்லக் கூடிய உரிமையோ – தண்டிக்கக்கூடிய தகுதியோ தரப்படவில்லை!

மீறிச்செய்தால், காவல் துறையின் பார்வை அவர்களைக் கிரிமினல்கள் போலவே நடத்தும் யதார்த்தம்!

“எனக்கென்ன வந்துவிட்டது?; எப்படியாவது போய்த்தொலையட்டும்!” என்று உஸ்தாதுமார்களும், சில பல அனுபவங்களுக்குப் பிறகு ஒதுங்கிக் கொண்டாகிவிட்டது!…
உறவினர்கள் சுட்டிக் காட்டினாலும் “அவரென்ன சொல்வது?” என்று ஈகோ பிரச்சினைகள்; பாய்ச்சல்கள்!

தன்னம்பிக்கையை அளிக்கிறோம் என்ற பெயரில் தவறான வழிகாட்டுதல்கள்!

சினிமாவும் அரசியலும் கற்றுக் கொடுக்கும் சமூகச் சீரழிவுக் கலாசாரங்கள்!….

பல்சுவை பராக்குக் காட்டியே பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுவார்க்கும் மீடியாக்கள்!…; கணிணி வலைகள்!

இந்த நிலையில்… கொடு விலங்குகளுக்கு மத்தியில் பிரசவிக்கப் பட்ட மான் குட்டிகள் போல நம் இளந்தலைமுறை!

  • பிக்பாக்கெட்டுகளாக….
  • செயின் பறிப்பவர்களாக….
  • பண இரட்டிப்புச் செய்பவர்களாக…
  • கொலைகாரர்களாக….
  • மருந்துப் பித்தர்களாக….
  • ஆபாச கேஸட் ஸிடி விற்பவர்களாக….

நம் பிள்ளைகள் பெயரும்.. முகமும் மீடியாக்களில் வரும்போது நெஞ்சம் குமுறுகிறது!
நிலை இழந்து தடுமாறுகிறது!

இந்த நிலையில்…

  • சுவரில் எழுதுவதிலிருந்து என்னைத் திருத்திய அந்த உறவினர்….
  • ‘பள்ளியின் ஒழுக்கம்’ போதித்த முஅத்தின் சத்தாரப்பா….
  • கசப்பான மருந்தால் நெறிப்படுத்திய குஞ்சுத்தாடியப்பா….
  • என் உஸ்தாதுகள்…
  • ஆசிரியர்கள்….

அனைவரையும் நான் மிகுந்த நன்றியறிதலுடன் நினைவு கூர்கிறேன்!
அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!