“உங்களுடன் ஒரு நிமிடம் தனியாகப் பேசணும்”
அது 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வாரம்! எனது முதல் ஐக்கிய அமீரகப் பயணத்தின் போது இரவு முழுக்க பல லேபர் கேம்ப்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது நடுநிசி. ஒரு கேம்ப்பில் ஆவலுடன் இளவல்கள் காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் உரையாடல் – உரை! பிறகு அடுத்த நிகழ்ச்சிக்காக அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது 23 வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞர் சற்றே முன் வந்து, “உங்களுடன் ஒரு நிமிடம் தனியாகப் பேசனும்” என்றார். ஏற்பாட்டாளர்கள் பரபரப்பில் இருந்தாலும், அந்தப் பையனின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிக்கலவை என்னுள்ளத்துள் ஊடுருவி அவரை எப்படியாவது தனியாகச் சந்தித்துப் பேசிவிடத் துடித்தது. அனுமதி பெற்றுப் பேசினோம்.
அந்தப் பையன் தென் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான ஊரைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பேரூர். ஒன்பதாம் வகுப்பு வரை படிப்பு. பிறகு ஊர்சுற்றல். எல்லா கெட்ட பழக்கங்களும் அத்துபடிக்கு வருவதற்கு உள்ளூரில் சுற்றித்திரிந்தே அனுபவப் பட்ட சில மூத்தவர்கள் உதவி!
ஆயிற்று; மீசை முளைத்து, ஓரளவு சுயசிந்தனை தோன்ற ஆரம்பித்த போது, உடல் கெட்டிருந்தது. நடுத்தரத்துக்கும் மேல்மட்டக் குடும்பத்தில் மூன்று பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே செல்ல மகன்! கேட்ட காசு கிடைக்கும்! கிடைக்காவிட்டால், ‘செத்து விடுவேன்’ என்று பயம் காட்டி பணம் பறிக்கத்தெரியும்! 120 கிலொமீட்டர் தூரத்தில் இருந்த டவுனுக்கு புதுப்படம் பார்க்க டாக்ஸியில் கழிசடை நன்பர்களை அழைத்துச் சென்று கும்மாளம் அடித்த காலம்! அதெல்லாம் பிறகு மனதிலுறுத்தும் சந்தர்ப்பம் வந்தது. வீட்டில் மரியாதை இல்லை. பேசி வைத்திருந்த மாமா மகளைத் தரமட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்! கூனிக் குறுகி- வெட்கி அலைந்து, ஒருவழியாக கிளீனிங்க் விஸாவில் கரையேறி அமீரகம் வருகை! செலவு போக 400 திர்ஹம் மிஞ்சும்! இந்தப் பணம் ஊருக்குப்போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. என்றாலும் கெட்டுக் கரையேறி மகன் மனுஷனானது போதும் என்று தாய்மட்டும் அன்பு செலுத்த, தந்தை அவருடன் பேசுவதை அவர் பள்ளியில் படிக்க மறுத்து அலைந்து திரிந்த அந்தக் காலத்திலிருந்தே பேசுவதை நிறுத்தியிருந்தார்! இப்போது காலம் கஷ்டமான கேம்ப் வாழ்க்கையில் ஓடுகிறது!
இது இவருக்கு மட்டும் உரிய கண்ணீர்க் கதையின் சாராம்சம் அல்ல. என்றாலும் பொறுமையுடன் கேட்டேன். கலங்கிய அவரை ஆசுவாசப் படுத்தினேன்.
“நான் என்ன செய்ய வேண்டும் தம்பி?” கேட்டேன்.
“முக்கியமான ஒன்றைச் செய்ய வேண்டும்! எழுத வேண்டும்!” என்ற முன்னுரையோடு அவர் சொன்ன கதையின் சுருக்கம் இதோ!
அந்த கேம்ப்பில் ஒரு மேஸ்த்திரி நிலையில் மேலதிகாரிக்கு மிகவும் நெருக்கமாக வேண்டியவராக ஒரு சகோதர மதச் சகோதரர். தலித் சமூகத்தினர். அவரும் இவரும் ஒரே ஊர்! அந்தப் பையனின் அம்மா இவர்கள் வீட்டில் வேலையாள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில். அவர் முதல் ரேங்க்! இவர் கடைசி! இவர் உடுத்திக் கழித்ததை உடுத்தியவர்; உண்டு போட்ட மிச்சதை உண்டவர்! ஒன்பதாம் வகுப்பில் இவர் கல்விக்கு டாட்டாச் சொன்னார். ஆனால் அவர் தொடர்ந்தார். பட்டப் படிப்பும் படித்தார்! தன் மகனைப் படிக்க வைக்க எல்லா வகையிலும் முயன்று தோற்ற தந்தை அந்த ஏழைப் பையனுக்கு அவ்வப்போது உதவியும் செய்தார். அவர் இங்கு முன்பே வந்து இப்போது அதிகாரியாய்!
இவரை இங்கே கூலித்தொழிலாளியாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது காலம்!
ரொம்பவும் சங்கடம்தான் என்றாலும் பொறுத்துக் கொண்டார். ஆனால் அந்தப் பையன் அடிக்கடி இவரை பிளாக்மெயில் செய்கிறார். “எங்கம்மா உங்க வீட்டிலே வேலை பார்த்ததாக யாரிடமாவது சொன்னே… தொலச்சுப்புடுவேன்… ஒன்வேல ஊட்டுக்குத் திரும்பனும் பார்த்துக்க….” என்று பயமுறுத்துகிறார்.
அவமானத்தில் – அச்சுறுத்தலில் அன்றாட நகர்ச்சி!
அவர் சொன்னார்.. “சார்! என்னோட விதி இந்த மாதிரிப் போச்சு!அல்லா எனக்குத் தந்த நல்ல வாய்ப்பை நான் சரியாகப் பயன் படுத்திக்கத் தவறிட்டேன்… ஒரு நல்ல குடும்பத்துல – நல்ல பெற்றோருக்குப் பிள்ளையாய்ப் பிறந்த பலனை நானே கெடுத்துக்கிட்டேன்…. ஆனா, என்னை மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் இந்த மாதிரி ‘ஸ்கூல் டிராப் அவுட்’ ஆகி, ஊர் சுற்றி…. கெட்டுப்போய், இங்கே கிளீனிங்க் லேபரரா சின்னசின்ன வருமானத்துல வந்து படுற பாடு இருக்கே… அது ரொம்பப் பரிதாபமானது சார்! ஊருக்குப் போன உடனே அதைப் பற்றி நீங்க எழுதனும்… பேசனும்! இந்த சமுதாய அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பாடுபடனும்!” அவர் அழுது கொண்டே சொன்னார்.
நூற்றுக்கும் அதிகமான கூட்டங்களில் அவர் சொன்னதை என்னுடைய ஆசிரியரின் ஆலோசனை போல எடுத்துக்கொண்டு சொல்லியிருப்பேன்!
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சொல்லி வருகிறேன்.
அதன் பிறகு அந்த சகோதரருடன் தொடர்பில்லை.
இதோ இப்போது மீண்டும் ஐக்கிய அமீரகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஊற்றுக்கண் திறந்துகொண்டுவிட்டது.
நெஞ்சில் அந்த கலங்கிய முகம்!
அந்தக் கேம்புக்கு மீண்டும் போக வாய்ப்புக் கிட்டுமா?
அவரைச் சந்திக்க முடியுமா?
தெரியவில்லை.
அல்லாஹ் நாடினால் சந்திக்கவும் நேரலாம்!
அப்போது இருவரின் உணர்வுகளும் எப்படி இருக்கும்?
இன்ஷா அல்லாஹ் போய்விட்டு வந்து சொல்கிறேனே?
(பின்குறிப்பு: 2004 ரமளானில் நான் சென்ற போது சந்திப்புக் கிடைக்கவில்லை)