இன்று | அன்று |
“பாத்துச்செய் பஷீரு! பத்து நாள்ல திருப்பித் தாரேன்” பரக்கத்து கெஞ்சினான் பஷீர் கோபித்தான். “என்னடா பரக்கத்து என்னதான் செலவுனக்கு? சின்னக் குடும்பம் சீரான வியாபாரம்! சொந்த வீடு; சொத்துப் பத்தும் உண்டுதான்! கடன் கடன்னு கண்டபடி வாங்கினா கட்டுக்குள் நிக்குமோ? கடைசியில் சிரமமாச்சே?” “அப்புறமாப் பேசலாம் அதப்பத்தி பஷீரு! இப்ப எனக்குத்தேவை இருபத்தி ரெண்டாயிரம்! மானப் பிரச்சினை மனசுவச்சுத் தந்துடுப்பா” “இருந்தாத் தந்துடுவேன் இப்ப இல்லை; எனை நம்பு!” கறாராய்ச் சொல்லிவிட்டான் கான்ட்ராக்டர் பஷீருந்தான்! பத்துப் பேரைச் சந்திச்சும் பணம்பெயரும் வழியில்லை! பணமின்றிப் போனால் பரீதா முகம் சோர்ந்துபோகும்! வீட்டைவிட்டு வரும்போதே விவரமாய்ச் சொல்லிவிட்டாள்! வீண்பேச்சுக் கிடமில்லை விளக்கிக் காட்ட வழியில்லை! வானத்தை வெறித்தான்; வாடினான்; பதைபதைத்தான்! மாமிமகள் தனக்கென்று வரித்திருந்தான் பலகாலம்! ஓரளவு படிப்பும் ஒழுங்கான தொழில்துறையும் சொத்து சுகங்களும் சொகுசான வாழ்க்கையும் மாமிபெற்ற மாணிக்கத்தை மணமுடிக்கப் போதுமென்று மனதிலவன் நினைத்திருந்தான்; மகிழ்ச்சியிலே திளைத்திருந்தான்! ஆனால் திடீரென்று அரபுநாட்டுப் பணத்தோடு அபுல்ஹஸன் வந்துநின்றான் அவன்நினைப்பில் மண்போட! பெரிய கம்பெனியில் பெர்ஸனல் மேனஜராம் ஆயிரம் ஆயிரமாய் அழகான சம்பளமாம்! மாமி வாய்பிளக்க மாமா மௌனிக்க பரீதா மட்டுமே பரக்கத்தையே பற்றிநின்றாள்! “மச்சாந்தான் வேண்டும் மற்றவர்கள் வேண்டாம்போ!” என்றவள் நின்றதால் எல்லோரும் தோற்றார்கள்! அப்படி அன்பால் அரவணைத்த மனைவிக்கு ஆசைப் பட்டதெல்லாம் அரைநொடியில் வாங்கித்தர பரக்கத்து ஆசைப்பட்டான்; பத்திடத்தில் கடன்பட்டான்! டிவி வீடியோ டன்லப்பு மெத்தை வகை ஃபிரிட்ஜ் வாஷிங்மெஷின் பிடித்தமான நகைநட்டு வாங்கிக் கொடுத்தான் வாட்டியது கடன்சுமைகள்! கேட்டதெல்லாம் கிடைத்ததால் கேட்பதே தொழிலாச்சு! நோட்டுநோட்டாய் வெளியேற நோய்நொடிகள் தொழிலுக்கு! சூழ்நிலையை விளக்கினால் சுடுசொற்கள் வழக்கமாச்சு! அபுல்ஹஸனை மறுத்துவிட்டு அவனைஅவள் கட்டியதும் வசையாக மாறியது வருந்தினான்; பரிதவித்தான்! இப்போது……. வானத்தை வெறிக்கிறான்; வழிதேடி விழிக்கிறான்! |
காலையில் இருந்து கடைத்தெரு முழுவதும் தேடியும், வேலை தென்பட வில்லை! ஒவ்வொரு நாளும் உழைத்துச் சேர்க்கும் ஒருதிர் ஹம்தான் உணவுக்கு வழியாம்! வீட்டில் ‘இருப்பு’ ஒன்றும் இல்லை! விஷயம் தெரியும் வீரர் அலிக்கு! இருட்டும் வேளை இடப்புறமிருந்து வந்தது ஒட்டகம் அதன்மேல் மூட்டைகள்! அலியின் மனதில் அத்துனை மகிழ்ச்சி! ஒட்டகப் பாதையில் உடனவர் நடந்தார்! மூடையை இறக்கி முறையாய் வைத்ததும் ஓட்டுநர் தந்தார் ஒருதிர் ஹத்தை! காசைப் பெற்றதும் கடைக்கு ஓடினார்! கடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. அங்கிங் கலைந்து அரைப் படிகோதுமை வாங்கிக் கொண்டு வீட்டுக் கோடினார்! அவர்வரும் வரைக்கும் அமைதியாய் இருந்த அண்ணலின் மகளார் அருமை ஃபாத்திமா சுறுசுறுப் பாக சுடுரொட்டி செய்து அவருக்குத் தந்தனர்; அவரும் உண்டனர்! அரபகம் ஆண்ட அதிபதி மகளும் அவரது கணவர் அலிரலி அவர்களும் நடத்திக் காட்டிய நல்லறம் இதுவே! உள்ளதைக் கொண்டு நல்லது காணும் இல்லறக் காட்சியே இஸ்லாத்தின் மாட்சியாம்! அந்தஃபாத்திமா அலியும் இந்த பரீதாபரக்கத்தும் சொந்த பந்தம்தான் சோதர முஸ்லிம்கள்தான்! என்ன செய்வது? சொல்லுங்கள்…. என்ன செய்வது? |