சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 1
* சீர்மிகு சித்தார்கோட்டை. வந்தாரை வாழ வைக்கும் சித்தார்கோட்டை
* சித்தார்கோட்டை என்று சொன்னாலே உள்ளத்தில் உவகை பொங்கும்.
சின்ன ஊராகயிருந்தாலும் சுற்றுப்புற ஊர்களில் இதன் மதிப்பு அதிகம். குறிப்பாக மலேசியாவில் ‘சபாக்பெர்னம்’ என்ற ஊரையும் பர்மாவில் ‘உவாக்கேமா’ என்ற ஊரையும் ‘சின்ன சித்தார்கோட்டை’ என்று குறிப்பிடுவது வழக்கம். அந்த இரு ஊர்களிலும் இவ்வூர் மக்கள் தொழில் நிமித்தமாக அதிக அளவில் குடியேறியுள்ளார்கள்.
‘நான் சித்தார்கோட்டையைச் சேர்ந்தவன்’ என்று சொல்லும்போதே ஒவ்வொருவர் முகத்திலும் பெருமை பொங்குவதைக் காணலாம். ஆனால் அதே சமயம் ‘உங்கள் பூர்வீகம் எந்த ஊர்? என்று யாரையாவது கேட்டுவிட்டால் அவர்க்ள முகம் மாறிவிடும். நம்மை முறைத்துப் பார்ப்பார்கள். “நான் இந்த ஊரின் பூர்வீகக் குடி” என்று சீற்றத்துடன் பதில் வரும்.
அது சரி, பூர்வீகக்குடி என்றால் எப்போது முதல்? இந்த ஊரின் வயது என்ன? எப்போது உருவானது? எந்த சூழ்நிலையில? எந்த வகையில்? யாரால்? என்ற பல கேள்விகள் இந்த பூர்வீகக்குடி என்ற சொற்றொடர் ஏற்படுத்துகிறது.
பெரும்பாலும் தற்போது இந்த ஊரில் வசிக்கும் மக்களில் 50 சதவிகிதம் பேர் “பூர்வீகக்குடி” பாத்தியங் கொண்டாடுகிறார்கள். சுமார் 200 வருடங்களுக்குள் இங்கு குடியேறியுள்ளவர்களின் பூர்வீக ஊர்கள் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 200 வருடங்களுக்கு முன்னால் குடியேறியவர்களின் ஊர்கள் குழப்பமாக உள்ளது. தெளிவாக வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.
எது எப்படி இருப்பினும் இந்த ஊர் புதிதாக அமைந்த ஊர் என்பது சர்வ நிச்சயமான ஒரு விஷயம்.
எப்பொழுது இந்த ஊர் உருவானது என்பது தெரிந்து விட்டால் இதன் ஆரம்ப கால நிலை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்பொழுது இந்த ஊரை உருவாக்கியவர்கள் யார் என்பது தெரிந்து விடும். அந்த நபர்(கள்) யார்?
அவர்களுக்குப் பின் அடுத்ததாக குடியேறியவர்கள் யார்? இனனும் சிலவருடங்கள் கழித்து குடியேறியவர்கள் யார்? பட்டியல் நீளும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் முன்னால் வந்து குடியேறியவர்களும் சரி பின்னால் வந்து குடியேறியவர்களும் சரி வேறு எங்கேயோயிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் தானே!
தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு, சொத்து சுகங்களை விட்டு வருடக்கணக்காக வாழ்ந்த ஊரை விட்டு குடி பெயர்ந்து வந்தவர்கள் தானே!
வளமான வாழ்க்கையைத் தேடி, பாதுகாப்பான சூழ்நிலையைத் தேடி, அமைதியான உறைவிடத்தைத் தேடி புலம் பெயர்ந்த பல அகதிகள் சேர்ந்து உருவாக்கிய ஊர்தான் சித்தார்கோட்டை.
இதன் உருவாக்கத்தில் விரிவாக்கத்தில், வளர்ச்சியில், முன்னேற்றத்தில் அனைவருக்கும் பங்குண்டு. இதில் முன்பின் என்ற வேறுபாடு கிடையாது. இனி ஆய்வைத் துவங்குவோம்.!
வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகவும், தேவையற்ற குழப்பங்களையும் சந்தேகங்களையும் தவிர்ப்பதற்காகவும் எனது ஆய்வை பிசிறில்லாமல் நேரான வழியில் நடத்தவும் இந்த ஆய்வுக்கோவையை 4 பகுதிகளாகப் பிரித்துள்ளேன்.
* முதல் பகுதயில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் தென்னகத்தில் குறிப்பாக கிழக்குக் கடற்கரையோர பகுதிகளில் உள்ள அரசியல், பொருளாதார சூழ்நிலை, வணிகப் போக்குவரத்து, மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, எந்தெந்த ஊர்களில் இருந்து மக்கள் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள் என்ற விவரங்கள் இடம் பெறும்.
* இரண்டாம் பகுதியில் பாண்டிய இளவல் பிரவேசமும், அடுத்து சுல்தான் செய்யது இபுராஹீம் அவர்களது பிரச்சாரக்குழு வருகையும், ஊர் பிளவுபடுவதும் பெயர்ப் பிரச்னையும், முஸ்லிம்களின் பொருளாதாரச் சீர்குலைவும், கல்வியில் பின்தங்கிய நிலை பற்றியும் விவரிக்கப்படும்
* மூன்றாம் பகுதியில் கல்வி முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி பற்றிய விவரம்.
* நான்காம் பகுதியில் கல்வி, தொழில், பொருளாதாரம், நாகரீகம் ஆகிய துறையில் முன்னேறியுள்ள இன்றைய சித்தார்கோட்டை.
முதல் பகுதி ஆரம்பிக்குமுன் ஒரு சின்ன விளக்கம். எனது சொந்த நலன் கருதியோ அல்லது வருமானத்தை கருதியோ அல்லது புகழுக்காகவோ நான் இதை எழுதவில்லை. இந்த ஆய்வுக்காக நான் செலவிடும் காலத்திலும், அதைத் தொகுத்து எழுதும் நேரத்திலும் ஒரு சிறு பகுதி என் சொந்த நலனுக்காக ஒதுக்கினால் மேற்கூறிய அனைத்தும் வலிய என்னைத் தேடி வரும். அதை நான் விரும்பவில்லை. தனக்குத்தெரிந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் பணித்துள்ளது.
இந்தத் தொடரில் எனது எழுத்து மூலம் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. யாரையும் குறை சொல்வது எனது நோக்கமுமல்ல. என்னால் இயன்ற வரை நூற்றுக்கணக்கானவர்களிடம் நேரில் கேட்டும், ஏட்டுப் பிரதிகளிலும், அரசு ஆவணங்களிலும் உள்ள குறிப்புகளைக் கொண்டும், கர்ணபரம்பரையாக வரும் செய்திகளையும், அவற்றின் எச்சங்களாகவும் உள்ள அத்தாட்சிகளை நேரிடையாகப் பார்த்தும் மிக கவனமாகப் பகுப்பாய்வு செய்து தொகுத்துள்ளேன்.
என்னுடைய எழுத்திலோ, கருத்திலோ குறை காணும் அன்பர்கள் தயவு செய்து சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். சித்தார்கோட்டை தொடர்பான முக்கிய செய்திகள், சம்பவங்கள் தெரிந்தவர்கள் அனுப்பி வைத்தால் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.
இத்தொடரை எவ்வித இடையூறுமின்றி எழுதி முடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
முதல் பகுதியை ஆரம்பிக்கு முன் வாசகர்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு முதல் பகுதியில் இறுதியில் வரவேண்டிய ஒரு குறிப்பை இப்பொழுது உங்கள் பார்வைக்குத் தர ஆசைப்படுகிறேன்.
இந்த ஊர் உருவான நாளில் இருந்து கி.பி. 1899 வரை இங்கு வந்து தங்கியிருக்கும் அனைவரும் எந்தெந்த ஊர்களில் இருந்து குடிபெயர்ந்து வந்தார்கள் என்ற விவரக்குறிப்பு தான் அது. இப்போது ஊர்களின் பெயரும் எண்ணிக்கையும் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும்.
யார் யார் எந்தெந்த ஊரில இருந்து வந்தார்கள் என்ற விவரம் பின்னர் தெரியவரும்
சித்தார்கோட்டையில் வசிக்கும் மக்களின் மூதாதையர் எங்கிருந்து வந்தார்கள் என்ற விவரம்
1 | அத்தியூத்து | 29 | தும்படைக்கா கோட்டை |
2 | அழகன்குளம் | 30 | தேர்போகி |
3 | ஆனந்தூர் | 31 | தேவகோட்டை |
4 | .இராஜசிங்கமங்கலம் | 32 | தேவிபட்டினம் |
5 | இருமேனி | 33 | தொண்டமான் |
6 | இளையான்குடி | 34 | தொண்டி |
7 | கடுகுசந்தை | 35 | தொருவளூர் |
8 | கருங்குளம் | 36 | நம்புதாளை |
9 | காமன்கோட்டை | 37 | நாகூர் |
10 | கீரனூர் | 38 | பனைக்குளம் |
11 | கீழக்கரை | 39 | பார்த்திபனூர் |
12 | குசவன்குடி | 40 | புதுமடம் |
13 | குதக்கோட்டை | 41 | புதுவயல் |
14 | கொருக்கட்டி | 42 | பூசனூர் |
15 | கொழுந்தரை | 43 | பெருவயல் |
16 | கோட்டைப்பட்டினம் | 44 | பொட்டகவயல் |
17 | கோபால்பட்டினம் | 45 | மஞ்சூர் |
18 | கோரைக்குளம் | 46 | மாரியூர் |
19 | சக்கரக்கோட்டை | 47 | முதுகுளத்தூர் |
20 | சம்பை | 48 | முத்துப்பேட்டை |
21 | சாத்தூர் | 49 | மேலக்கோட்டை |
22 | சிவகாசி | 50 | மோர்ப்பனை |
23 | சுருளி | 51 | வட்டாணம் |
24 | சுந்தரபாண்டியன் பட்டினம் | 52 | வர்ஷநாடு |
25 | சோழியக்குடி | 53 | வழுதூர் |
26 | சோளந்தூர் | 54 | வெல்லா |
27 | திருப்பாலைக்குடி | 55 | வேதாளை |
28 | திருமலைராயன்பட்டினம் |
சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை | சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும் |