Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2009
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,066 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்

டில்லி சக்கரவர்த்தி பகதுர்ஷாவின் பிரதான சமஸ்தா கவிவாணர் தாமே ஒரு தேசிய கீதத்தை இயற்றினார். அந்த கீதத்தை அப்போது பாடாதவர்களே இல்லை எனலாம். பொது வைபவங்கள் எல்லாவற்றிலும் அதைப் பாட வேண்டும் என்று டில்லி சக்கரவர்த்தியே நேரில் கட்டளைப் பிறப்பித்தார். அந்த கீதமானது இந்தியர்களின் பண்டைய வீரச் செயல்களை விளக்கியதுடன், தற்போதைய வீழ்ச்சியையும் கேட்பவர் மனம் உருகும்படி சித்தரித்தது. வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம் 63.

எறிந்த கல் ஏலம் போனது

குமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில் காங்கிரஸ் சார்பில் சுதந்திரப் போராட்டக் கூட்டம் முதன்முதலாக சதாவதானத்தை நிகழ்த்திக்காட்டிய சாதனையாளரும் மிகச்சிறந்த தேசியவாதியுமான சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவர்முன் ஒரு கல் வந்து விழுகிறது. மேடையிலிருந்தோரும் கூட்டத்தினரும் அதிர்ந்து விடுகின்றனர். ஆனால் பாவலரோ நிதானமாக் கனிந்து அக்கல்லை எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டுப் பேச்சைத் தொர்கிறார்.

இக்கல் பாவலர் மேல் எறியப்பட்ட கல் அன்று: மக்கள் விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரசின் மேல் எறியப்பட்ட கல். காங்கிரசின் பெயரால் பாவலர் மேல் விழுந்த இக்கல்,கண்ணாடிப் பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்துப் போற்றப்பட வேண்டிய காலம் தொலைவில் இல்லை: அண்மையிலேயுள்ளது. ‘விடுதலைக்கு உழைத்த பாவலர் மேல் விழுந்த கல்’ – என்று பொறிக்கப்பட்டு போற்றப்படப் போகிறது?

– என்று உணர்ச்சி பொங்க பேசியபின் அக்கல்லை ஏலத்திற்கு விட்டார். கருங்கல் கனத்த பொருளைத் தந்தது. அப்பணம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 1920 – லிருந்து காங்கிரஸ் இயக்கத்தின் போராளிகளை வழிநடத்தியவர்கள்,பாவலர்,டாக்டர் எம்.இ.நாயுடு சிதாணுப்பிள்ளை ஆகிய மூவர்தான். இதில் பாவலரே போராட்டங்களுக்கு ஆஸ்தான தலைவர்.

புரவலரின் பேச்சாற்றல் போராட்டங்களுக்கு மக்கள் வலுவைத் தேடித்தந்தது. அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இரவிப்புதூர் என்னுமிடத்தில் பாவலர் தலைமையில் ஒரு பெருந் தேசிய கூட்டம், வ.வே.சு. ஐயர் இக்கூட்டத்தில் பங்கேற்றார். பாவலர் பேச்சை ஆரம்பிக்கிறார் :

கூறை என்றால் திருமணத்திற்குரிய புது ஆடை, அதற்குக் கைத்தறி ஆடைகளை எடுப்பதே வழக்கம்: இறப்பின் போதும் புதுஆடை போர்த்துவது வழக்கம், அதற்கு மில் துணி எடுப்பர். எனவே மண ஆடையாக கைத்தறித் துணியையும் பிண ஆடையாக மில் துணியையும் அணிவர். எனவே நீங்களெல்லாம் மணமக்களா? பிண மக்களா? மணமக்கள் என்றால் கதர் மட்டுமே அணியுங்கள்!

– என்று கூட்டத்தினரின் சிந்தனையைத் தட்டி எழுப்பிவிட்டு பேச்சை முடித்தார். உடனே கூட்டத்தினர் தாங்கள் அணிந்திருந்த மில்துணிகளையும், அந்நியத் துணிகளையும் களைந்து ஓரிடத்தில் குவித்தனர். சிறிது நேரத்தில் அந்நியத் துணிகள் அங்கே தீய்க்கு இரையாயின.

நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் நான் பயின்ற போது,எனது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ.ந. மகாலிங்கம் அவர்கள் ஒருமுறை வகுப்பில் கூறினார் :

இரவிப்புதூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார் நமச்சிவாயம் அவர்கள், பாவலரின் பேச்சைக் கேட்டு, தான் அணிந்திருந்த அந்நியத்துணிகளைக் களைந்து தீச்சுவாலைக்கு தின்னக் கொடுத்து விட்டு, உள்ளாடையுடன் இரவிப்புதூரில் இருந்து எங்கள் ஊரான தெங்கம்புதூருக்கு 15 கிலோ மீட்டர் நடந்தே வந்தார்.

இந்நிகழ்ச்சி, பாவலரின் பேச்சு தென்பகுதிகளில் சுதந்திர சேவையின் சீவனாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

”அறியாத இளம் பருவத்தே எனக்கு அரசியல் ஞானப்பாலூட்டிய அம்மையார் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்” – என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பா. நடராஜன் அவர்களும்: ”1937 – ம் ஆண்டில் நாகர்கோவில் நகராண்மைக் கழகத்திடலில் பாவலர் பேசிய வீர முழக்கத்தில் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்” –

என்று தஞசைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களும் கூறியுள்ள சாட்சியங்கள், ஏராளமான இளைஞர்களின் உள்ளத்தில் சுதந்திர வேள்வியை மூட்டிய சிறப்பு பாவலருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.

பா. ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள் பாவலரிடம், இலக்கிய ஞானம் கற்றவர்களாவர்.

‘திலக் சுயராஜ் நிதி’ – க்காக தெருத்தெருவாகப் பாலர் தலைமையில் தேசியப் பாடல்களைப் பாடிச்சென்று நிதி வசூல் செய்தனர்.

காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஆரம்பித்தவுடன், ”கள்ளுக் குடியாதே ஐயா” – என்ற இசைப் பாடலை எழுதி, ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது எனப் பாவலரின் சுதந்திரப் போராட்டப் பணி பரந்து செல்கிறது.

கம்பம் பீர்முகம்மது பாவலர்

ஆண்டிப்பட்டி சப் இன்ஸ்பெக்கடர் பதவி. குற்றப்பிரிவு என ஒதுக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த சிலரைத் தண்டிக்கும்படி வெள்ளைக்கார மேலதிகாரி உத்தரவிட்டார். குற்றம் ஏதும் செய்யாதவர்களை, அப்பாவி இந்தியர்களை ஓர் இந்தியன் தண்டிக்கமாடடான் என்று கூறி மறுக்கிறார். மேலதிகாரி கோபிக்கிறார்.

உடனே தனது போலீஸ் சீருடையை அங்கேயே கழற்றி எறிந்து,வேலையை உதறித் தள்ளிவிட்டுப் புறப்படுகிறார். அவர்தான் கம்பம் பீர்முகம்மது பாவலர்.

கலெக்டரும் கடவுளல்ல

அடிமைப்போலீஸ்

கான்ஸ்டபிள் எமனுமல்ல

அல்லா…யாஅல்லா

இத்தொல்லைகள்

அகலுவது எந்நாளோ?

இப்பொல்லாத பேய்களெல்லாம்

இங்கிலாந்து

போவதும் எந்நாளோ?

-என்று தேசவிடுதலைக்காய் வெதனை வரிகளை வடித்தவர்.

1923 -இல் அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தின்போது, கம்பத்தில் ஜவுளி வியாபாரிகளை எல்லாம் கூட்டி ‘அந்நியத் துணிகளைத் தாங்கள் யாரும் விற்பதில்லை’ என்று அவர்களிடம் சத்தியம் வாங்கும் வரையில் சத்தியாக்கிரகம் நடத்தி சாதித்தார்.

சாந்தமும் பொறுமையும் தனி வடிவாகி

மாந்தரை ஆட்கொள்ள வந்த விவேகி

– என்று காந்திஜி பற்றி இவர் எழுதிய பாடல் அன்று முழங்காத மேடைகளில்லை.

தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கைதாகி அலிப்பூர் சிறையில் வாடினார். இவரது 13 கையெழுத்துப் பிரதிகளைத் தேசத்துரோக புத்தகங்கள் என்று பிரிடடீஸ் சர்க்கார் பறிமுதல் செய்து தீயிட்டுக் கொளுத்தினர். திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மூன்று ஆண்டுகள் பிரச்சாரத்திற்காய் நுழையக் கூடாது என்றும் பிரிட்டீஸ் அரசு இவருக்குத் தடை விதித்திருந்தது. ஆனால் பாவலரோ சரபோஜி உடையில் அந்நகர்களுக்குள் மாறுவேடத்தில் நுழைந்து பிரச்சாரம் செய்தார்.

பீர்முகம்மது அண்ணல் செய்யும்

பிரசங்கம் செவிக்கு அமிர்தம்

ஊர்க்கு உழைக்க இவ்வுலகில்

உடலெடுத்த பூங்குமதம் !

……

ஒத்துழையாமை யெனும் தத்துவமதை

இத்தரையில் நடத்திய தரன்

காசினியோர் புகழும் கம்பம்நகர்தனிலே

களிப்புடன் வசிக்கும் யோகன் !

தொடர்ந்து இவர் மேடையில் பேச்கூடாது என்று ‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ போட்டனர். வாயில் துணியைக் கட்டிக்கொண்டு மேடை ஏறி, சைகை மூலம் நடித்துப் பிரச்சாரம் செய்தார். பாமஞசரி,காந்தி மல்லிகை, முத்தண்ணா போன்ற இவரது நூல்களிலும் சுதந்திர எழுச்சி உண்டு.

இவரது சுதந்திரப் போராட்டப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, உத்தமபாளையம் கா.சி. முகம்மது இஸ்மாயில் போன்றோர் போராட்டங்களில் குதித்தனர். போடி கான்முகம்மது புலவர் போன்றோர் சுதந்திர கீதங்களைப் பாடினர்.

வீதியில் ஒரு பாவலர்

1919 முதல் 1930 வரை மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டியவா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர். இஸ்லாமிப் பெண்கள் வீட்டைவிட்டு வெளிவராத ஒரு காலகட்டத்தில் தேசத்திற்காய் ஒரு பெண் வீதி உலா வந்தது புரட்சிதான். ‘தேச வினியோக சிந்து’ – போன்ற தேசிய கீதங்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். கிலாபத் இயக்கத்திலும்,கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டு 1930 – ஆம் ஆண்டில் இருமுறை சிறை சென்றுள்ளார்.

வில்லுப்பாட்டில் ஒரு பாவலர்

ஆசுகவியாகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் வில்லுப்பாட்டுக்களால் தேச விடுதலை உணர்வுகளை

வளர்த்தார்.கிலாபத் இயக்கத்திலும் பங்கேற்றார்.

காமராஜருடன் ஒரு பாவலர்

1922 – இல் காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்திற்காக காமராஜர் மக்கள் மத்தியில் ஆதரவுதிரட்டி ஊர் ஊராகச் சென்றபோது, அவரோடு சென்றவர் பாவலர் விருதுநகர் அப்துல் ரகுமான்.

பிரச்சாரக்கூட்டங்கள் ஆரம்பிக்கும் முன் அப்துல் ரகுமான் சுதந்திர கீதங்களைப் பாடுவார். மக்கள் எழுச்சியுடன் கூடுவர். பாடல் உச்சத்திற்குச் செல்லும் போது, காமராஜர் ‘மகாத்மா காந்திக்கு’ – என்று ஓங்காலக் குரல் கொடுக்க,மக்கள் ‘ஜே!’ எனக் கோசம் எழுப்புவர்.

நாடக மேடையில் நம் பாவலர்கள்

நாடகமேடைகளில் சுதந்திர கீதங்களைத் தனிப்பாடல்களாக இணைத்து விஸ்வநாததாஸ், செங்கோட்டை கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. இதனால் பலமுறை ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு இவர் ஆளானதுண்டு.

மதுரை கொல்லன்பட்டரையைச் சார்ந்த அலியார் என்பவர் ‘சுதந்திர தாகம்’, ‘தாய்வீடு’, ‘தாய்நாடு’, ‘தியாக உள்ளம்’, ‘நவ இந்தியா’ போன்ற தேசபக்தி நாடகங்களை மதுரை மாவட்டம் முழுவதும் நடத்தியுள்ளார்.

பர்மாவிலிருந்து மதுரை வந்து குடியேறிய அப்துல் ரஹ்மான் என்பவரும் பலதேசபக்தி நாடகங்களில் பாடி நடித்துள்ளார்.

‘சுதந்திர முரசு’ ‘விலாவர் ஜரினா’ போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.

இன்னும் எத்தனை பேரோ?

1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று ‘ஆத்திரம் கொள்’ என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். 1946 – இல் வெளியான இவரது ‘ஒளி’ என்ற கவிதைத் தொகுப்பில் பல சுதந்திர கீதங்களைக் காணலாம்.

தோள்கள் விம்முது தசையுந் துடிக்குது

சுதந்திரம் என்றவுடன் –

கோலைவாள் கொண்டு தாக்கினாற் போன்றே இருக்குது

அடிமையென நினைத்தால் –

இதை ஆள்பவன் சிந்திக்க வீணாய் மறுக்கிறான்

அதிகாரத் தன்மையினால் –

புவி ஆள்வதற்காக நாம் ஆத்திரம் கொண்டிடல்

அறமும் முறையுமாம்!

– என்று போராட்ட உணர்வுகளைத் தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.

ஆங்கில ஆட்சியே – உன்

அந்திமக் காலம் நெருங்கிவிட்டது.

– என்று வேலூர் நகரின் வீதிகளில் முஸ்லிம் பக்கிரி ஒருவர் ஓயாது பாடிக்கொண்டே திரிவாராம். இப்படி இந்த தேசத்தின் விடுதலைக்காக தங்கள் புலமைத்திறனை,பேச்சாற்றலை, நடிப்பாற்றலை அர்ப்பணித்த விலாசம் வெளிப்படுத்தாத முஸ்லிம் பாவலர்கள் இன்னும் எத்தனை பேரோ?

தொடரும்…