Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2009
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,807 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்

கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* – INA கேப்டன் ஷா

நவாஸ்கான். ஸேவக் கி ஹிந்த்

1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத் ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ‘ஆசாத் ஹிந்த் பவுச்’ என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார்.

அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது,

“தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இநிதிய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்” – என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, “எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்” என்று அறிவித்தனர்.

இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! – என்று பேச, கூட்டத்திலிரந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?

…இந்திய தேச பக்தர்கள் பலர் தங்களுடைய சொத்துக்களைச் சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு அர்ப்பணம் செய்தனர். ஸ்ரீஹபீப், ஸ்ரீகன்னா முதலிய பிரமுகர்கள் சுதந்திரப் போருக்கு உதவியாக லட்சக்கணக்கான தொகையை வாரி வழங்கினர். சில நாட்களில் இந்திய தேசிய வங்கியில் 25 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. –ஜெயமணி சுப்பிரமணியம்.*

“ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்” – என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன.

அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.**

இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். (* ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181) – (** கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86.)

நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம்

பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.

பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.

1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.

23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*

 23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா.

தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?
(* அமீர் ஹம்சா, ‘நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்’ , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)
மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்

தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 – ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பட்டுள்ளார்.*

அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, “அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?” – என்று காந்திஜி கேட்டார். அதற்கு “என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது” – என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 – ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?(* நிஜாமுத்தீன் ஜமாலி, ‘ஒரு துணி வியாபாரியின் கதை,’ சிந்தனைச்சரம் நவம்பர் 1997., பக்கம்32-33.)

வ.உ.சி – யின் நேசர்

உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோமபை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது. வ.உ.சி – யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப்

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர். 1905 – இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.

1907 – இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.

1908 – இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார்,

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்
நூலோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ!

– என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப்
பகிர்ந்திருக்கிறார்.

1908 – இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்… முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். – தனது ‘சுயசரிதை’ யில் வ.உ.சி.

வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். ஆந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான்.* முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல. (* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)

சுதேசி ஸ்டீம் நேவிகேசன்

இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ – என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 – இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவா ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட் ஆவார்.

ரூபாய் இரண்டு வட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர்(பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர்
முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார். – என்று 20-10-1906 – இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது ‘சுதேசியத்தின் வெற்றி’ நூலில் எடுத்தாண்டுள்ளார்.*

இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை – தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)

தொடரும்…