Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2010
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,311 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி -2

ஹஜ்ஜுக்கான காலங்கள்.

ஹஜ்ஜுக்கான காலங்களாக, ஷவ்வால், துல்கஃதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஒருவர் ஷவ்வால் மாதத்தில் இருந்து துல்ஹஜ் பிறை எட்டுவரை தனது ஹஜ்ஜுக்காக தன்னைத் தயார் படுத்தலாம். அதேவேளை உம்ராவிற்கென கால நிர்ணயம் கிடையாது. ஹஜ்ஜுடன் இணைந்து செய்யப்படும் உம்ராவாக இருப்பின் அதை மேற்குறிப்பிட்ட மாதங்களிலேயே நிறைவேற்ற வேண்டும். (விபரம் பின்னர் தரப்படும்).

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ مَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلاَ رَفَثَ وَلاَ فُسُوقَ وَلاَ جِدَالَ فِي الْحَجِّ (البقرة : 197 )

ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.  ஆகவே எவர் அவற்றில் (தன்மீது) ஹஜ்ஜைக் கடைமையாக்கிக் கொண்டாரோ அவர் (ஹஜ் கடமைக்குள் பிரவேசத்த பின்னர்) உடலுறவு கொள்வதோ, தீய செயல்கள் புரிவதோ, வீண்தர்க்கம் செய்வதோ கூடாது. (அல்பகரா. வச:197).

மேற்படி திருமறை வசனத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒருவர் மேற்கூறப்பட்ட மாதங்களில் தலைப்பிறை தென்பட்டது முதல் துல் ஹஜ் எட்டுவரையிலும் உள்ள காலப்பகுதியில் ஹஜ் செய்வதற்காக தன்னைத் தயார் படுத்திக் கொண்டு மக்கா செல்லமுடியும் என்பதை விளங்கலாம்.
இஹ்ராமில் நுழைவதற்கான (மீகாத்) எல்லைகள்
மேற் கூறப்பட்ட கடமையினை நாம் நிறைவு செய்வதற்காக அல்லாஹ்வின் தூதரால் நமக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஹஜ், அல்லது உம்ராவிற்காக அவற்றைக் கடந்து செல்வோர் இஹ்ராம் அணியாது அந்த எல்லைகளைக் கடந்து செலல்லக்கூடாது என்ற உத்தரவாதமும் அவர்களால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.  அதையும் மீறி ஒருவர் செல்வாராயின் இஹ்ராம் அணிந்து செல்லாத குற்றத்திற்காக அவர் ஃபித்யா- எனப்படும் குற்றப்பரிகாரம்- நிறைவேற்றுவது அவசியமாகும். (அவற்றைப் பற்றி பின்னர் கவனிப்போம்)
மதீனா வழியாகச் செல்வோர் ‘துல்ஹுலைபா” விலிருந்தும், எகிப்து, ஜோர்தான் போன்ற நாடுகளில் இருந்து பணயமாகி ‘ஜித்தா” வழியாகச் செல்வோர் ‘ஜுஹ்ஃபா” (தற்போதய ராபிஹ்) எல்லையில் இருந்தும், எமன், மற்றும் அதன் வழியாக வருவோர், ‘எலம்லம்” (தற்போதைய (ஸஃதிய்யா) எல்;லையில் இருந்தும் ‘தாயிஃப்” வழியாக வருவோர் தாயிபிலுள்ள ‘அஸ்ஸைலுல் கபீர்” என்றழைக்கப்படும் ‘கர்னுல் மனாஸில்” எல்லையில் இருந்தும் ஈராக்கிலிருந்து வருவோர் ‘தாது இர்க்” (தற்போதய லரீபா) எனும் எல்;லையில் இருந்தும், ‘ஹஜ்” அல்லது ‘உம்ரா” விற்கான நிய்யத் செய்து ‘இஹ்ராம்” ஆடை அணிந்து செல்ல வேண்டும்.  இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட எல்லை(மீகாத்)களாகும்.  ஹஜ் அல்லது உம்ரா செய்யும் ஒருவர் இஹ்ராம் அணியாது இவைகளைக் கடக்கக் கூடாது.  எல்லைகளுக்கு உட்பட்டோர் அவர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்தும், மக்காவாசிகள் மக்காவில் இருந்தும் இஹ்ராம் அணிவர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்கள் புகாரி முஸ்லிம்).
எல்லைகளுக்கு உட்பட்டோர், மற்றும் மக்காவாசிகளின் எல்லை.
وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ (متفق عليه)

‘எல்லைகளுக்கு உட்பட்டோர் தாம் இருக்கும் இடத்தில் இருந்தும், மக்காவாசிகள் மக்காவில் இருந்தும் இஹ்ராம் அணிவர் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல்கள் புகாரி, முஸ்லிம்).
மேற் கூறப்பட்ட எல்லைகளுக்குள் வசிப்போர் தமது வதிவிடங்களை எல்லையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  வேறு எல்லைகளுக்குச் சென்று அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வர வேண்டிய அவசியம் இல்லை ” என்பதை புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெறும் நபிமொழிகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு :- ‘தன்யீம்” எனப்படும் இடம் ஹரம் எல்லைக்கு அப்பால் இருக்கின்றது.  அது மக்காவாசிகளின் உம்ராவிற்கான எல்லை என அறிஞர்கள் குறிப்பிடுவதற்கு அமைவாக மக்காவாசிகளாக இருப்போர் தமது எல்லையாகவும் கொள்ளலாம்.
அதே நேரம் இஹ்ராமுடைய நிலையில் மாதவிடாய் ஏற்பட்டு ‘தவாஃப்” மற்றும் ‘ஸஃய்” செய்ய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருந்த பெண்கள் குளித்து, தூய்மையாகிய பின்பு தன்யீமில் இப்போதுள்ள ‘மஸ்ஜித் ஆயிஷா” பள்ளியில் இருந்து தமது விடுபட்ட உம்ராவிற்கான கடமையை முழுமைப்படுத்த இஹ்ராம் அணிவதற்கான கட்டாயக எல்லையாகக் கொள்ள வேண்டும்.
ஹஜ் மாதங்களில் உம்ரா செய்யலாம்
ஜாஹிலிய்யா(அறியாமை)க்கால மக்கள் ஹஜ் மாதங்களில் உம்ராச் செய்வதை பூமியில் நிகழும் பெரும் பாவங்களில் ஒன்றாகக்கருதினர். மட்டுமின்றி, முஹர்ரம் என்ற புனித மாதத்தை ‘ஸஃபர்” மாதமாக மாற்றியமைத்த அவர்கள் அந்த ஸபரில் தாம் விரும்பியதைச் செய்து வந்தார்கள்.  தமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக
إِذَا بَرَا الدَّبَرْ وَعَفَا الْأَثَرْ وَانْسَلَخَ صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ اعْتَمَرْ (متفق عليه)

(ஒட்டகத்தின்) நோய் நீங்கி, (அதன் மீதுள்ள பயணத்) தடயங்களும் அழிந்து (முஹர்ரம் என்ற ) ஸஃபர் மாதமும் கழிந்தால் ‘உம்ரா” செய்பவரின் உம்ரா செல்லுபடியாகும் எனக் கூறுவர். (ஆதார நூல்: முஸ்லிம்). முஹர்ரம் என்ற ஸஃபர் மாதமும் கழிந்த பின்னால் உம்ராச் செய்பவரின் உம்ராவே செல்லுபடியாகும் என்பதே இதன் பொருளாகும்.
இது ஜாஹிலிய்யா(அறியாமை)க்கால மக்களின் நம்பிக்கையே தவிர இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை அல்ல என்பதை மேற்படி நபிமொழியில் இருந்து விளங்கலாம். இந்த நம்பிக்கையை தகர்த்து எறிவதற்காகவே நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ்ஜில் உம்ராச் செய்தார்கள்.

… قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً (متفق عليه)

நபிகள் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக துல்ஹஜ் பிறை நான்காவது தினத்தில் (மக்கா) வந்திருந்திருந்த போது நபித்தோர்களின் ஹஜ்ஜை தமத்துஆக (உம்ராவாக) மாற்றும்படி பணித்தார்கள். (பார்க்க: புகாரி, முஸ்லிம்).
‘ஹஜ்” மாதங்களில் ‘உம்ரா” செய்கின்ற ஒருவர் கட்டயாம் ஹஜ் செய்ய வேண்டும், இல்லையெனில் உம்ராச் செய்வது கூடாது என முஸ்லிம்கள் கூறுவதும் இந்த நம்பிக்கையை ஒத்ததாகும்.

தமத்துஃ:
எல்லையில் இஹ்ராம் அணியும் ஒருவர் உம்ராவிற்காக மாத்திரம் நிய்யத் செய்து, தவாஃப் முடித்து, பின் ‘ஸஃய்” (தொங்கோட்டம் ஓடுதல்) ஆகிய கடமைகளை முடித்து தலையையும் மழித்து, இஹ்ராத்தையும் களைந்து, சாதாரண நிலைக்கு வருவதாகும்.  பின்னர் துல்ஹஜ் பிறை எட்டில் ஹஜ்ஜுக்காக மீண்டும் நிய்யத் செய்து, தனது ஹஜ் கடமையை தொடர்வதாகும்.
சுருக்கமாகக் கூறினால் ஹஜ் மாதத்தில் ஒருவர் உம்ரா செய்வது எனலாம்.  தனது இயல்பு நிலையில் சுதந்திரமாக செயல்படுவதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ‘தமத்துஃ” என்ற சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் “கிரான்”
எல்லையில் இஹ்ராம் அணியும் ஒருவர் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவிற்காகவும் சேர்த்து நிய்யத் செய்து, தவாஃப், ஸஃய் (தொங்கோட்டம் ஓடுதல்) ஆகிய கடமைகளை முடித்த பின், தலையையும் மழிக்காது, இஹ்ராத்தையும் களையாது தனது ஹஜ் கடமையை தொடர்வதோடு, துல்ஹஜ் பிறை பத்திலுள்ள கடமைகளை முடித்த பின்னர் இயல்பான நிலைக்கு வருவதாகும். ஹஜ்ஜும், உம்ராவும் இணைத்து செய்யப்படுவதால் இது ‘கிரான்” என அழைக்கப்படுகின்றது.
ஹஜ் ‘இஃப்ராத்”
ஒருவர் ஹஜ்ஜுக்காக மாத்திரம் நிய்யத் செய்து, தவாஃப், மற்றும் ஸஃய் (தொங்கோட்டம் ஓடுதல்) ஆகிய கடமைகளை முடித்து, தலையையும் மழிக்காது, இஹ்ராத்தையும் களையாது ஹாஜி ஒருவர் தனது ஹஜ் கடமையை மாத்திரம் தொடர்வதால் அது ‘இஃப்ராத்” எனக் கூறப்படுகின்றது. இதில் பலிப்பராணி கொடுப்பது கடமை இல்லை. இவ்வகைகள் பற்றி பின்வரும் நபி மொழி உறுதி செய்கின்றது.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ أَرَادَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ (متفق عليه)

நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக நாம் புறப்பட்டுச் சென்றோம்.  உங்களில் யார் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவிற்காகவும் (இஹ்ராம் அணிந்து) தல்பியா கூற விரும்புகிறாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்.  அதே நேரம் யார் ஹஜ்ஜுக்காக மாத்திரம் (இஹ்ராம் அணிந்து) தல்பியா கூற விரும்புகிறாரே அவரும் அவ்வாறு செய்து கொள்ளவும்,  உம்ராவிற்காக மாத்திரம் யார் (இஹ்ராம் அணிந்து) தல்பியா கூற விரும்புகிறரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறாhர்கள். (புகாரி, முஸ்லிம்).
இவைகளுக்கு மத்தியில் காணப்படும் வேறுபாடுகள்
‘கிரான்” முறைப்படி செய்பவர் ஹஜ்ஜுக்காகவும், உம்ராவிற்காகவும் சேர்த்து நிய்யத் செய்த காரணத்தால் அவர் (தாஃபுல் குதூ முடன்) முதல் தவாஃபுடன் செய்த ஸஃய் ஹஜ்ஜுக்காக போதுமானதாகும்.  இதே வழிமுறையை இஃப்ராத் முறைப்படி ஹஜ் செய்தவரும் கடைப்பிடிப்பார்.
இவர்கள் இருவரும் பிறை பத்தில் மற்றொரு ‘தவாஃப்” செய்ய வேண்டும். ஸஃய் ஏற்கெனவே செய்துள்ளதால் மீண்டும் ஸஃய் செய்ய வேண்டிய கடமை இல்லை.  இந்த தவாஃப் ‘தவாபுல் இபாழா” எனப்படும்.  இவர்கள் இருவருக்கும் தவாஃபுல் குதூம் தவறிவிடுமானால் அதில் தவறில்லை.
இதற்கு ஆதாரமாக உர்வா பின் முளர்ரிஸ் (ரழி) அவர்களின் செய்தியை ஆதாரமாகக் கொள்ளலாம் என உஸைமீன் (ரஹ்) அவர்கள் ஷரஹுல் மும்திஃ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
அதே நேரம், ‘தமத்துஃ” முறையில் ‘ஹஜ்” செய்தவர் ஆரம்ப தவாஃபுடன் செய்த ‘ஸஃய்” அவரது உம்ராவிற்கான ஸஃயாக கொள்ளப்படும்.  அதனால் அவர் பிறை பத்தில் தவாஃபுல் இஃபாழாவுடன், ஸஃயும் செய்ய வேண்டும்.  இவர் பலிப்பராணி (குர்பானி) கொடுப்பது கடமையாகும்.  அதே போன்று, கிரான் அடிப்படையில் செய்தவரும் ஹத்ய் என்ற பலிப்பிராணி கொடுப்பது கடமையாகும்.
குறிப்பு: நம்நாட்டு ஹாஜிகள் தமத்துஃ முறையை அதிகம் பேணுவர். அதுவே சிறந்த முறையுமாகும். அதனால் அது பற்றி விரிவாக இங்கு நோக்குவோம்.
இஹ்ராம் அணிவதற்கு முன் செய்யவேண்டிய காரியங்கள்.
குளிப்பு: மாதத்தீட்டு, பிரசவத்தீட்டு போன்ற உபாதைகளால் குளிப்பு கடமையான பெண்கள், உடலுறவு உறக்கம் போன்றவற்றால் குளிப்புக் கடமையான ஆண், பெண்கள் அனைவரும் குளிப்பது கடமையாகும். குறிப்புக் கடமையில்லாத மற்றவர்கள் விரும்பினால் குளிக்கலாம். விரும்பாவிட்டால் குளிக்காது விட்டுவிடலாம்.
மனதால் நிய்யத் செய்து இஹ்ராம் அணிதல்
இஸ்லாத்தின் சகல அமல்களுக்கும் உள்ளத்துடன் தொடர்பு இருப்பது போன்று ஹஜ், உம்ராவிற்கும் தொடர்பு இருக்கிறது. எல்லையை அடைந்ததும் உம்ராவிற்கான எண்ணத்தை மனதில் இருத்தி, اَللّهُمَّ لَبَّيْكَ عُمْرَةً நாவினால் ‘அல்லாஹும்ம லெப்பை(க்)க உம்ரதன்”

அல்லாஹ்வே! உனக்காக உம்ராவை நிறைவேற்றுகிறேன்” என தல்பியாக் கூறிக் கொள்ளல்.
பயணம் தடைப்படுவதை அஞ்சினால்…
உம்ராப் பயணம் செல்லும் போது சில தடங்கல்கள் ஏற்பட்டு, அதனால் உம்ராவை நிறைவு செய்ய முடியாது போகும் என்ற நிலை ஏற்படுவதை ஒருவர் அஞ்சினால் அவர் உம்ராவிற்கான நிய்யத் செய்யும் போது
اللَّهُمَّ إنْ حَـبَسَنـيْ حَـابِسٌ فَمَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي

‘அல்லாஹும்ம இன்ஹஃபஸனீ ஹாஃபிஸுன் ஃப மஹல்லீ ஹைது ஹஃபஸ்தனீ என மனதால் நினைத்துக் கொள்ளல்.
பொருள்: ‘அல்லாஹ்வே! எந்த இடத்தில் என்னை நீ தடுக்கின்றாயோ அதுவே எனது (இஹ்ராத்தைக் களையும்) இடமாகும். (முஸ்லிம்)
இவ்வாறு செய்வதால்… ?
இவ்வாறு ஒருவருக்கு தடங்கல் ஏற்படும் இடத்தில் முடியை மழித்து, அல்லது குறைத்துக் கொள்ளலாம். இவர் ‘ஹத்ய்” எனப்படும் பலிப்பிராணியை பலி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உம்ராவை மறுமுறை ‘கழா”ச் செய்ய வேண்டும்.
அவ்வாறு கூறாத ஒருவருக்கு தடங்கல் ஏற்பட்டு, இஹ்ராத்தை களைய வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ‘ஹுதைபியா” உடன்படிக்கை ஆண்டில் பலிப்பிராணியை கொடுத்து, தமது தலைகளை மழித்து, பின் இஹ்ராத்தை கழைந்தது போன்று செய்ய வேண்டும். முடியுமாயின் உம்ராவை மறு ஆண்டு ‘கழா”ச் செய்தது போன்று கழாவும் செய்ய வேண்டும்.
இஹ்ராத்திற்காக சுன்னத் தொழுகை இல்லை.
இஹ்ராத்திற்கென ஒரு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்யவில்லை என்பதாலும், ஒரு வணக்கத்தை நாமாக கண்டுபிடிக்க முடியாது என்பதாலும் இஹ்ராத்திற்கென விஷேட தொழுகை ஏதும் இல்லை என்பதாலும் இவ்வாறு கூறுகின்றோம்.
சிலர் ஹஜ்ஜுக்கு வழி அனுப்புவோரை பாங்கு கூறி வழி அனுப்புகின்றனர்.  இதுவும் மார்க்கத்தில் இல்லாத புதிய வழிமுறையாகும்.
தொழுவதால், பாங்கு சொல்வதால் என்ன பிரச்சினை நன்மைதானே என நாமாக முடிவு செய்யும் அதிகாரம் நமக்கில்லை.

444  حَدَّثَنَا قَبِيصَةُ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَبِى رَبَاحٍ  شَيْخٌ مِنْ آلِ عُمَرَ  قَالَ : رَأَى سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ رَجُلاً يُصَلِّى بَعْدَ الْعَصْرِ الرَّكْعَتَيْنِ يُكْثِرُ فَقَالَ لَهُ. فَقَالَ : يَا أَبَا مُحَمَّدٍ أَيُعَذِّبُنِى اللَّهُ عَلَى الصَّلاَةِ؟ قَالَ : لاَ وَلَكِنْ يُعَذِّبُكَ اللَّهُ بِخِلاَفِ السُّنَّةِ. (سنن الدارمي -/ المكتبة الشاملة)

ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்) என்ற தாபியீ அவர்கள் அஸருக்குப் பின்னால் அதிகமதிகம் தொழும் மனிதர் ஒருவரை அவதானித்தார்கள். அவரிடம் (கூற வேண்டியதைக்) கூறினார்கள். அம்மனிதர்: அபூ முஹம்மத் அவர்களே! தொழுவதால் அல்லாஹ் என்னை தண்டிப்பானா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள், இல்லை. எனினும் நீ சுன்னா (நபிவழிக்கு) முரணாக செய்வதற்காக உன்னை அவன் தண்டிப்பான் எனக் கூறினார்கள். (ஆதாரம்: தாரமி)
வணக்க வழபாடுகளை நாமாக கண்டுபிடிக்க முடியாது என்பதை இந்த அறிஞரின் கூற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இஹ்ராம் அணிந்து மதீனாவின் எல்லையைக் கடப்போர் கவனத்திற்கு
மதீனாவின் எல்லையிலுள்ள ‘துல்ஹுலைஃபா” பள்ளிவாசல் ‘வாதில் அகீக்” எனும் புனித பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நபிகள் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக அவ்விடத்தில் நிய்யத் செய்து அதைக் கடக்க முற்பட்ட போது வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து,

صحيح البخاري)) صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ

‘இந்தப் புனித ஓடையில் தொழுவீராக” எனக் கூறினார்கள். (புகாரி). என்ற ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு மதீனாவின் எல்லையில் இருந்து ‘இஹ்ராம்” அணியும் ஒருவர் ‘துல்ஹுலைஃபா” பள்ளியில் இரண்டு ரகஅத்துக்கள் தொழ வேண்டும்.

வேறு எல்லையில் இருந்து செல்வோர் இந்த இரு ரகஅத்துக்களையும் தொழ வேண்டியதில்லை. மதீனா எல்லைக்கென வந்துள்ள ஹதீஸை அனைத்து எல்லைக்கும் பொதுவான ஹதீஸாகக் கொள்ள முடியாது

manarulislam.com தொடரும்…