Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,809 முறை படிக்கப்பட்டுள்ளது!

காபி போதை மருந்து மாதிரிதான்?

மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர்  மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. “இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே”! மேய்ப்பவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளின் தீவனத்தை ஆராய்ந்தார். ஏதோ சிறுகனிகளைக் கொட்டையோடு அசைபோடுவதைக் கண்டார்.

“ஞானப்பழம் நீயப்பா” என்று பாடாமல் அந்தக் கனியைத் தானும் பொறுக்கி உண்டார். சதைப்பற்று இனிப்பாக இருந்தது. சுடாத பழத்தின் கொட்டையைச் சுட்டு வறுத்துத் தின்றார். சுறுசுறுப்பு அடைந்த உணர்வு. இரவில் தூக்கம் போச்சு.

எப்படியோ, எத்தியோபியக் காபிக் கொட்டையை நினைத்தாலே இனிக்கும். இலந்தைப்பழம் மாதிரி ருசித்துச் சாப்பிடுவர். அங்கு கண்டறியப்பட்ட காப்பிப் பழத்திற்கு “காஃப்பா” (Kaffa) என்ற நகர்ப் பெயரே மூலச்சொல் என்பார் ஒரு சாரார். காபிக் கொட்டை, குதிரைக் குளம்பு வடிவம் கொண்டதாம். அதனால் குளம்பைக் குறிக்கும் “காப்” என்ற ஆங்கிலச்சொல் அடிப்படையில் அதனைக் குளம்பி என்பார் மறுபக்கம்.

ஏதானாலும் காபியில் அடங்கிய முக்கியப் பொருளுக்குச் செல்லப்பெயர் காஃபீன் (Caffein). ஆனால் “காஃபின்” (Caffein) என்பது வேறு. சவப்பெட்டியைக் குறிக்கும். “கோஃபினோஸ்” (Kophinos)) என்ற இதன் கிரேக்க அடிச்சொல்லுக்குக் “கூடை” என்று அர்த்தம்.

காபி என்றால் அதில் “காஃபீன்” (Caffein) மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. காபியில் கிட்டத்தட்ட 2000 வேதிமங்கள் அடக்கம். அனைத்திற்கும் வெவ்வேறு மருந்துக் குணங்கள் உண்டு. சொல்லப்போனால் காபியில் அடங்கிய பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுமாம். பென்சில்வேனியாவில் ஸ்க்ரான்டன் பல்கலைக் கழக ஆய்வு முடிவு.

உலகின் முதல் காப்பிக்கடை முதலாளி இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் சுல்தான். 1554ம் ஆண்டு தொடங்கியது இந்தக் காபித் தூள் வியாபாரம். “கேஃப்” என்றால் பிரெஞ்சு மொழியில் காப்பி நிலையம் (Kophinos). “கஃபட்டேரியா” என்பது ஸ்பானிய மொழியில் “காப்பிக்கடை” (Coffee shop).

ஒருவழியாக, போப் கிளெமென்டைன் சம்மதத்துடன் காபி இத்தாலிக்கு அறிமுகம் ஆனது. கிறிஸ்தவர் அருந்தும் பானம் ஆக தேவாலய அங்கீகாரமும் பெற்றது. மத நல்லிணக்கத்தின் சின்னம் காபி என்றால் அது மிகையாகாது. இசுலாமியர், கிறிஸ்தவர் உணவோடு கலந்து காப்பியை இந்தியாவுக்குள் கள்ளச் சரக்காகக் கடத்தியது நம் ஊர் வியாபாரி. அரேபிய வர்த்தகத்தை முடித்துத் திரும்பும் வேளையில் மடியில் தங்கக் கட்டிகள் மாதிரி ஏழே ஏழு காபிக் கொட்டைகளை ஆசாமி ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாராம். தென் இந்தியாவில் சிக்மகளூர் தான் காபி காலடி பட்ட முதல் மண்.

1668 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் காபியைக் காப்பி அடித்தது அமெரிக்கா. நியூயார்க் நகரின் காலைச் சிற்றுண்டியில் காபி ஆவி பறந்தது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கழித்து ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா காபி குளிர்பானம் ஆயிற்று. டாக்டர் ஜான் எஸ். பெம்பர்ட்டன் என்கிற மருந்தியர் நிபுணர் காஃபீன், கொக்கோ இலைகள், சர்க்கரை, காய்கறிச் சாறு போன்றவை கலந்து 1886 ஆம் ஆண்டு கொக்கோ கோலா என்னும் பானம் தயாரித்தார்.

ஆயின், 1911 ஆம் ஆண்டு கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிராக அமெரிக்கா ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அடங்கிய “காஃபீன்” உடலுக்குக் கேடு என்பது அரசுத் தரப்பு வாதம். குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு இருக்கும்போதே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது முதல் ஆச்சரியம். வழக்கில் அரசாங்கம் தோற்றதைத்தான் இந்தியர்கள் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. போகட்டும்.

1970 ஆம் ஆண்டுகளில் காபி உலகப் பிரசித்தம். காஃபீன் குறித்து ஏறத்தாழ 4000  5000 ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்து உள்ளதாக ஜேம்ஸ் காஃப்லீன் (James Coughlin)) கூறுகிறார். (இவர் பெயரில் வரும் “காஃப்” இருமல் தொடர்பானது?) தென் கலிஃபோர்னியாவில் நச்சியல் ஆய்வாளர். காபி குடித்தால் புற்றுநோய் வாய்ப்பு கால் பாகம் குறையும் என்பது இவர் கண்டுபிடிப்பு.

ஆனால் 1980 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தாமஸ் காலின்ஸ் நடத்திய ஆய்வு காபிப் பிரியர்களைச் சற்று அதிர வைத்தது. குறிப்பாக, கர்ப்பம் தரித்த அன்னையர் காபி குடித்தால் ஊனக்குழந்தை பிறக்குமாம்.

தம் பரிசோதனையில் இவர் சில எலிகளைத் தேர்ந்து எடுத்தார். எல்லாப் பிராணிகளைப் போலவே எலிகளுக்கும் தொண்டைக் குழிக்குள் சிறு குழாயைச் செருகி 200 காபிக்குச் சமமான அளவு பானத்தை ஊட்டினார். அடுத்த மூன்று வருடங்களாக மறுபரிசோதனை நடத்தினார். காபியைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்தார். முடிவில் எலிக் குஞ்சுகளில் பிறவிக் குறைபாடுகள் அவ்வளவாக இல்லையாம்.

ஒரு நாளைக்கு நாலு நேரம் காபி குடித்தால் பித்தப்பையில் கற்கள் படியும் வாய்ப்பு 40 சதவீதம் என்பது ஒரு கணிப்பு. சிறுநீரகக் கற்கள் வராது. கல்லீரல் புற்று வராது. நீரழிவு நோய் உபாதை எழாது. பார்க்கின்சன் நோய் அண்டாது. நினைவாற்றல் கூடும். மன அழுத்தமும் அகலும். இப்படிப் பல!

இதற்கிடையில், காபியின் தீங்குகள் குறித்த விவாதங்களும் நடந்தேறின. ரத்த அழுத்தமும் அதிகரிக்குமாம். அதனால் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் காபியை நிறுத்த வேண்டும் என்றனர் மருத்துவர் சிலர். தொடக்கக் குடிகாரர்களிடம்தான் இந்தப் பிரச்சினை. பரம்பரைக் காபிக் குடியர்களிடம் ரத்த அழுத்தநோய்க் குறிகள் இல்லையாமே!

இருந்தாலும் ஒரு விஷயம் நம்பிக்கை அளிக்கிறது. காபி குடித்தால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறதாம். அதற்காக அடுக்கு மாடியில் இருந்து ஆடி ஆடி வரும் சொகுசுவாசிகளே, இன்சுலின் மாத்திரைக்குப் பதில் காபி குடித்தால் சரிப்பட்டு வராது. காபியினால் இன்சுலின் ஊற்றுப் பெருகும் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியை லிண்டா பேக்கன்.

அது மட்டுமல்ல, காபி ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான். வேளாவேளைக்கு அருந்தவில்லை என்றால் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுவராம்!

காபியினால் மூளைக்குச் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி என்பது எல்லாம் வெறும் மாயை. காபியே இது பொய்யடா வெறும் போதை மருந்துப் பையடா என்கிறார் ஜாக் ஜேம்ஸ். கால்வேயில் அயர்லாந்து தேசியப் பல்கலைக் கழகத்தின் உளவியல் நிபுணர்.

உளவியல் தொந்தரவுகள் உண்டோ, இல்லையோ கிடக்கட்டும். உடலியல் குறை நிச்சயம் என்று எச்சரிக்கிறார் ஹார்வார்டு பொதுச் சுகாதார கல்வியகப் பேராசிரியர் வால்டர் வில்லெட். காரணம் காப்பியினால் எலும்புகள் கால்சியம் என்கிற சுண்ணாம்புச் சத்து இழந்து பஞ்சு போல் ஆகுமாம்.

பில்டர் காபிக்கு என்ன மகிமையோ அறியோம். ஆனால் வடிகட்டாத (பில்டர் செய்யாத) காப்பியினால் கொலஸ்ட்ரால் சத்து அதிகரிக்கும். ஊளைச்சதை போடும். தஞ்சாவூர் பொம்மை மாதிரி கழுத்தும் இன்றி, காலும் இன்றி எத்தனை நாள் நிதானமாக நடக்க முடியும்?

அது சரி. சராசரி ஆரோக்கியவான் ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபீன் உட்கொள்ளலாம் என்றுதானே? ஒரு சிட்டிகை (280 மில்லிகிராம்) போதும். அதுவே 30 மடங்கானால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

அப்படியானால் தினந்தோறும் வடிகட்டாத (எஸ்ப்ரஸ்ஸோ) காபி ஒரே டம்ளர் உத்தமம். பில்டர் காபி என்றால் இரண்டு கோப்பைக்கு மேல் வேண்டாம். இன்ஸ்டன்ட் காப்பி என்றால் மூன்றரை குவளை.

இவ்வளவு சிரமம் ஏன்? “கையில் சுக்குடன் மல்லி இருக்கையில் காப்பி எதற்காக?” என்று “இசையமுது” இசைக்கிறார் பாரதிதாசன். நூற்றில் ஒரு வார்த்தை.

 http://www.gnanamuthu.com/