வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.
ஆனால் புதன்கிழமை(12.01.2011) வெளியான ‘கேட்’ – CAT தேர்வு முடிவுகளுக்கு பிறகு அந்த வாய்ப்பு மேலும் கடினமாகி விட்டது.
சில ஐ.ஐ. எம் -கள் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்களை அதிகமாக்கிவிட்டன. ராஞ்சியிலுள்ள ஐ.ஐ.எம். தனது கட்-ஆப் மதிப்பெண்ணை 99.66% -ஆக உயர்த்தியுள்ளது. கடந்த வருடம் இது 99.65% -ஆக இருந்தது. அதேசமயம் இந்த கல்வி நிறுவனத்தை வழிநடத்தும் கல்கத்தா – ஐ.ஐ.எம். நிர்ணயித்துள்ள கட்-ஆப் மதிப்பெண் 99.59% என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் ஐ.ஐ.எம்., 540 மாணவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த மாணவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக 99% மதிப்பெண்களும், ஒவ்வொரு பிரிவிலும் 94% மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் கேட்-2010 தேர்வை நடத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான லக்னோ-ஐ.ஐ.எம்., கேட் மதிப்பெண்களுக்கான மதிப்பீடுகளை உயர்த்தியுள்ளது. 30% -ஆக இருந்த மதிப்பீடு 37.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று கட்டணமும் 8 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கோழிக்கோடு-ஐ.ஐ.எம். கல்வி நிறுவனமும், கேட் மதிப்பெண்ணுக்கு 50% மதிப்பீட்டை வழங்க தீர்மானித்துள்ளது. இதில் 15%, ஜி.டி. மற்றும் சமூக திறன்களுக்கும், 25% நேர்முகத்தேர்வுக்கும், 10% எழுத்து திறமைக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஐ.ஐ.எம். -கள் தங்கள் நிறுவனத்தில் பலதரப்பு விகிதாச்சாரத்தை அதிகப்படுத்த பொறியியல் பின்னணி அல்லாத மாணவர்களையும், பெண்களையும் அதிகளவில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, லக்னோ – ஐ.ஐ.எம்., அந்தவகை மாணவர்களுக்கு 2.5% கூடுதல் புள்ளிகளை வழங்க முடிவு செய்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐ.ஐ.எம் -களின் இயக்குனர்கள் கூட்டாக பி.ஐ. மற்றும் ஜி.டி. நடத்துவது குறித்து முடிவெடுக்க அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
புதன்கிழமை வெளியான கேட் தேர்வு முடிவில் 8 மாணவர்கள் 100% மதிப்பெண்ணும், 19 மாணவர்கள் 99.99% மதிப்பெண்ணும் பெற்றனர் என்பது நமக்கு நினைவிருக்கலாம்.
நன்றி: கல்விமலர்