Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,878 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோப்பில் முகம்மது மீரான்

அட..பட்டணத்து வாசம் – தோப்பில் முகம்மது மீரான்
[இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம், தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட அந்த கிராமத்திற்கு 1997ல் ஒரு இலக்கியவாதியின் வழியாக மேலும் ஒரு சிறப்பு கிடைத்தது. முஸ்தபாகண்ணு என்ற கதாபாத்திரத்தை ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலின் வழியாக அவர் உயிரூட்டியபோது இலக்கிய உலகின் முக்கிய விருதான சாகித்ய அகாடமி அந்த நாவலை வந்தடைந்தது. அவர்: தோப்பில் முஹம்மது மீரான்.

1968ல் வெளிவந்த ‘நரகம் பூமியில் ‘ இவருடைய முதல் படைப்பு. அதன் பிறகு ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘கூனன் தோப்பு’ , ‘அனந்த சயனம்’ போன்றவை இவருடைய முக்கிய படைப்புகள். இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல.

வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன இவருடைய எழுத்துக்கள். தான் சார்ந்த இலக்கிய அனுபவங்களையும் சமகால நிகழ்வுகளின் அரசியல் பற்றியும் நம்மோடு கலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்]

நாஞ்சில் நாட்டுக் களம், கடலும் கடல் சார்ந்த இடமும், வீட்டுல யாரும் பெரிய அளவுக்கு யாரும் எழுத்தாளர்கள் கிடையாது. இதுதான் உங்களுடைய பின்புலம். அப்படியுள்ள பின்புலத்திலிருந்து தோப்பில் முஹம்மது மீரான் என்கிற எழுத்தாளன் உருவான கதை…

எங்க ஊரு தேங்காய்பட்டிணம். கடற்கரை. பண்டொரு துறைமுகமா இருந்த பகுதி. அரபி கலாச்சாரம், அந்நியநாட்டு கலாச்சாரம், பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த பகுதிதான் தேங்காபட்டிணம். பலதரப்பட்ட மக்கள் அங்க வாழுறாங்க. பலமொழிகள் பேசுற மக்களும் வாழுறாங்க. வித்தியாசமான ’லை·ப்’ அவங்களுக்கு. அந்த வித்யாசமான ’லை·ப்’ வரப்போ… (தனக்கு) தெரியாமலேயே எங்க காலத்தில ஒரு கலைஞன் உருவாயிடுவான். ஆனால் உருவாகலே! உருவாயிருக்கான்; சங்கீத வித்வான் உருவாயிருக்கான், வைத்தியர்கள்..இப்படி. எனக்கு முன்னாலெ கவிஞர்கள் இருந்திருக்கான். ஆனால் இந்த நவீன காலகட்டத்திலே ஒரு நாவலாசிரியன் என்ற பொருளிலே நான்தான் வந்தேன். நான் வந்ததுக்கு ரெண்டு காரணம். ஒன்னு.. ஏதோ என் மூதாதையரோட Blood எங்கிட்டே இருக்கு. இன்னொரு விஷயம் என்னன்னா இந்த ஊருலே உள்ள மக்களுடைய வாழ்க்கை. பலதரப்பட்ட ஜனங்கள்.. அவங்களுடைய வாழ்க்கை… இந்த வாழ்க்கைய நான் உள்வாங்கினேன். ரெண்டாவது , என் தகப்பனார் பெரிய ஒரு கதைசொல்லி. எல்லா தினமும் நைட்லே எங்களுக்கு கதை சொல்லித் தருவார்.. அந்த Blood எங்கிட்டே இருக்கு. ஆனால் என் brothers, சொந்தங்கள்லே இந்த tactics வரலே. அதென்னமோ அந்த ‘டேலண்ட்’ எனக்கு வந்துபோச்சி. என் தகப்பனார் எப்படிக் கதை சொன்னாரோ அப்படியே நான் எழுதினேன். மொழி தெரியாததுனாலெ அவர் சொன்னாரு; மொழி தெரிஞ்சதுனாலெ நான் மொழிவாயிலாகச் சொன்னேன். இதுதான் வேறுபாடு.

ஒரு எழுத்தாளன் பிறந்து வளரக்கூடிய இடம் அவனுடைய எழுத்திற்கும் வாழ்விற்கும் பிரயோசமாக இருக்கிறதா?

வாழ்வுக்கும் எழுத்துக்கும் இடையிலே – என்னைப் பொறுத்தவரைக்கும் – நெருக்கம் உண்டு. எங்க ஊருலே எதைப் பார்த்தேனோ அதை அப்படியே நான் எழுதினேன். என்னுடைய வாழ்க்கையிலே நான் அனுபவிச்ச விசயங்களையும் எழுதினேன். எழுத்திலே இருந்து என் வாழ்க்கை அந்நியப்பட்டதல்ல. நான் எந்த கதாபாத்திரத்தையும் உருவாக்கவேயில்லை. எல்லாமே எங்க கிராமத்திலே வாழ்ந்த கதாபாத்திரங்கள். இப்ப சில கதைகள் வந்து.. நான் வாழக்கூடிய திருநெல்வேலி சுற்றுவட்டாரத்திலேர்ந்து எழுதியிருக்கேன். இங்கேயும் வாழ்ந்த கதாபாத்திரத்தைத்தான் எழுதியிருக்கேன். கதாபாத்திரங்களை கற்பனையில் உருவாக்கவே முடியாது. கற்பனையிலே உருவாகிற கதாபாத்திரம் நிலையாக நின்றதே கிடையாது. வாழ்ந்த கதாபாத்திரங்களே மெருகூட்டிருக்கு…

இப்ப தமிழ்லே பார்த்தீங்கன்னா.. வட்டார வழக்கு உபயோகப்படுத்தி எழுதிய மிக முக்கியமான எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். இது வாசகர்கள் மத்தியில் சிக்கலை உருவாக்காதா?

பெரிய சிக்கலை இது உருவாக்கும்னு எனக்கு தோணலே. வாசகன் என்பவன் சிறந்த கலைஞன். அவனுக்கு எந்த வட்டார வழக்குமே சிக்கலைக் கொடுக்கவே கொடுக்காது. வட்டார வழக்கு என்ற எழுத்து முறையை நான் கையாண்டதில்லே..எனக்குத் தெரிஞ்ச மொழி, எங்க மக்கள் பேசுற மொழியை எழுதனும்டு நான் எழுதினேன். எனக்கு தமிழ்ப் பின்னணி தெரியவே தெரியாது. நான் மலையாளப் பின்னணி. வட்டார வழக்குன்னா என்னான்டே எனக்குத் தெரியாது. எங்க ஊருல பேசுனபடியே நான் எழுதினேன். எழுதி , புத்தகமாயி , ரெண்டு மூணு ஆண்டுகளுக்குப் பிறகுதான் – வட்டார மொழிண்டு எல்லோரும் சொன்னபிறகுதான் – அப்படியொன்னு உண்டுன்னே எனக்குத் தெரியும். வட்டாரமொழிலெ எழுதனும்டு திட்டமிட்டு நான் எழுதினதே அல்ல. அந்த classificationஐ நான் விரும்பவுமில்லே.

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

நாலு நாவல்கள் வந்திருக்கு. இதுலே எது சிறந்ததுண்டு கேட்டா நாலும் சிறந்ததென்றுதான் சொல்வேன். இருந்தாலும் – வெளிவந்ததிலே – எனக்கு சிறந்ததாகப் படுறது ’சாய்வு நாற்காலி’. எதனாலே எனக்கு விருப்பம்டு சொன்னா அதுல இருநூறு ஆண்டு கால வரலாறு சொல்வேன். அஞ்சு தலைமுறை சொல்லிட்டு வர்றேன். அஞ்சாவது தலைமுறையிலே உள்ள மூதாதையர் ரத்தத்திலே உள்ள சில விஷயங்கள் பின் தலைமுறையிலும் வரும் என்பதைத்தான் சாய்வு நாற்காலிலெ சொல்றேன். அது மட்டுமல்ல; ஒரு காலத்திலே மதம் , அரசு, மக்களாட்சி… இதையெல்லாம் தொகுத்து அப்படியே கொண்டு வர்றேன் – ’சாய்வு நாற்காலி’லெ. ஆனா சாதாரண வாசகர்களுக்கு அது புரியல்லே..அவன் அந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி , குடும்பம் நசிஞ்சி போறதுங்கறதைப் பத்தி பேசுறாங்களேயொழிய அந்த நாவலுடைய spiritஐ யாருமே புரிஞ்சிக்கலே..என்னைப் பொறுத்தவரை அதுல ஒவ்வொரு கதாபாத்திரமும்….மனிதனைவிட கம்பு, பிரம்புலாம் பேசும். சாய்வு நாற்காலி..அது பேசும். அவைகள்தான் கதாபாத்திரம்; மனிதர்களல்ல. இந்த கதாபாத்திரங்கள் பேசுறதுக்காகத்தான் மனிதர்களை படைச்சிருக்கேன். இதுபோல இன்னொன்னு – அதே formலே – என்னாலெ படைக்க முடியாது.

உங்களுடைய கதைகளின் வழியாக உங்களுடைய கதாபாத்திரங்களின் வழியாக வாசகர்களின் மனதில் எதை விதைக்க நினைக்கிறீர்கள்?

சமூகத்திலேர்ந்து எந்த விதமான அனுபவங்களைப் பெற்றேனோ அதே அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுத்து அவங்களும் அந்த அனுபவத்தைப் பெறச் செய்றேன். அதே நோக்கம்தான் என்னுடைய நாவல்கள் வழியாக நான் செய்றது. நாவல் வழியாக எந்த தர்ம உபதேசங்களும் செய்ய நான் வரலே. என்னுடைய நாவலை வாசித்து சமூகம் முன்னேறும்டு எதிர்பார்ப்பும் எனக்கு இல்லே.

வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளி..முஸ்தபாகண்ணு..இதுபோன்ற முக்கியமான கதாபாத்திரங்கள் உங்களுடைய புதினங்கள் வழியாக நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இதில் உங்களுடைய மனதை மிகவும் பாதித்த கதாபாத்திரம் எது? காரணம் என்ன?

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யிலே வரக்கூடிய மெயின் கதாபாத்திரம் வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளி. இந்த வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளியை நான் பார்த்ததில்லே. அவருடைய பின்வாரிசுகளையெல்லாம் பார்த்திருக்கேன். வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளி என்று சொல்லக்கூடியவர் ஒரு ஆளுடைய பிரதிபலிப்பு அல்ல. அவரைப்போல எங்க ஊருலே நிறைய பேரு வாழ்ந்திருந்தாங்க. அவங்கதான் ஊரை ஆட்டிப் படைச்சிருக்காங்க. அடிக்கிற அதிகாரம், என்ன வேண்டுமானாலும் செய்யிற அதிகாரம் கொண்டு.. பள்ளி நிர்வாகம் அவங்க கையிலதான். இப்படிப்பட்ட பல ஆட்கள் இருந்தாங்க. இவங்க எல்லோரையுமே ஒரு ஆளாகவே கற்பனை பண்ணி – எல்லா குணாதிசயங்களையும் ஒரு ஆளுக்கே கொடுத்துதான் வடக்குவீட்டு அஹ்மதுகண்ணு முதலாளியை நான் உருவாக்குனேன். ஆனா ’சாய்வு நாற்காலி’லெ வரக்கூடிய முஸ்தபாகண்ணு நேரடியா எனக்கு தெரிஞ்ச ஆளு. அதேபோல ஆளு இப்பவும் வாழ்ந்துகிட்டிருக்கான். அந்த கதாபாத்திரம் நான் படைச்சேன்.

மிகச்சிறந்த எழுத்தாளர்களை உருவாக்குவது அனுபவங்களா புத்தகங்களா அப்படிங்குற விவாதம் நடந்துக்கிட்டிருக்கு. நீங்க எந்த கருத்துக்கு உட்படுறீங்க?

புத்தக அறிவை விட – வாசிச்சி கிடைக்கிற அறிவை விட – அனுபவிச்சி கிடைக்கிற அறிவுதான் கலைக்கு பொருந்தும். ஒரு நல்ல படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்கள்தான் முக்கியம். உலகத்தின் எந்த மிகச்சிறந்த படைப்பை எடுத்துக்கிட்டாலும் படைப்பாளி அவனுடைய அனுபவத்தைத்தான் எழுதியிருப்பான். நாஜி கேம்ப் அனுபவங்கள் பத்தியெல்லாம் jewsகள் நிறைய எழுதிருக்கான். எல்லாம் அவங்களோட அனுபவங்கள். அவங்க யாரும் புத்தகம் வாசிச்சவங்க அல்ல. அதேபோல ஆ·ப்ரிக்காவுல உள்ள வாழ்க்கையப் பத்தி நிறைய பேரு எழுதியிருக்கான். வாசிச்சதல்ல,அவங்களோட அனுபவங்கள். வெள்ளைக்கார சமூகத்திலேர்ந்து அவங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் , இம்சைகள் இதெல்லாம் தாங்க முடியாமதான் அவனுள்ளேர்ந்தே ஒரு எழுத்தாளன் உருவானான். அவன்தான் யதார்த்த படைப்பாளி. நாலு புத்தகம் படிச்சிட்டு அஞ்சாவது புத்தம் எழுதுறவன் எழுத்தான்தான், படைப்பாளியல்ல. படைப்பாளி என்பவன் அவனுடைய அனுபவத்திலேர்ந்து எழுதக்கூடியவன். எழுத்தாளன் என்பவன் வாசிச்சி எழுதக் கூடியவன்.

இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளை பழிவாங்கிக்கொண்டிருக்கும் விஷயம் உலகமயமாக்கம். இது எழுத்தையும் எழுத்துத் துறையையும் எழுத்தாளனையும் பாதித்திருக்கிறதா?

ரொம்பப் பாதிச்சிருக்கு. கலைத்துறையை மட்டுமல்ல நம்ம நாட்டுலெ உள்ள எல்லா துறையையும்… இயற்கையே அழிஞ்சி போயிருக்கு. நாம் இன்றைக்கு காணக்கூடிய வயல் நாளைக்கு இருக்காது. இங்கே காணக்கூடிய குன்று நாளைக்கு இருக்காது. இந்த நதி இருக்காது. எங்கே போறதுண்டு தெரியாம உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்கோம். உலகமயமாக்கத்தாலே நம்ம கலாச்சாரம் அழிஞ்சி போயிடுச்சி. நம்ம மொழி அழிஞ்சது; பண்பாடு அழிஞ்சது. எல்லாமே அழிஞ்சுது. இனியொரு காலகட்டத்திலே நம்ம நாடே அடிமைப்படும் ஒரு சூழல் ஏற்படும். உலகமயமாக்கம் வந்து எழுத்துலகத்துக்கு மிகப்பெரிய சவாலா இருக்கு. நிச்சயமா ஒவ்வொரு படைப்பாளியும் உலகமயமாக்கத்துகு எதிராத்தான் எழுதனும்.

குஜராத் கலவரம், மும்பை குண்டுவெடிப்பு, அயோத்தி பிரச்சனை..பாபர்மசூதி இடிப்பு…இந்த பிரச்சனைக்குப் பிறகுள்ள இந்திய சமூகத்தை உற்று நோக்கும்போது இஸ்லாமிய முகாம்களெல்லாம் ஒரு பயங்கரவாத முகாம்களாகத்தான் இங்குள்ள பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றன. இதைப்பற்றி உங்களுடைய கருத்தென்ன?

இது விஷயமா ஏற்கனவே நான் எழுதிருக்கேன். ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று மிகப்பெரிய ஒரு கட்டுரை நான் எழுதியிருக்கேன். அதுல நான் பல விஷயங்களை கொண்டுவந்து – இப்ப சொல்றதுக்கு ஞாபகம் இல்லே – ஆனாலும்..திட்டமிட்டுதான் இந்தியாவில் உள்ள எல்லா ஊடகங்களும் சில அதிகார வர்க்கங்களும் – bureuacracy என்று சொல்வோமில்லையா – இது எல்லாமே வந்து முஸ்லீம்கள் தீவிரவாதியாக வந்து சித்தரிக்கிறார்களேயொழிய முஸ்லீம்கள் தீவிரவாதியா என்றால் இல்லை. சில தீவிரவாதிகள் இருக்கலாம்; இல்லாமல் இல்லை, இருக்கலாம். ஆனால் அந்த தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லே. எதனாலே தீவிரவாதம் உருவாச்சிண்டு யாருமே சிந்திக்கலே. ‘தீவிரவாதத்தை ஒடுக்கனும்’டு குரல்தான் எழுந்ததே தவிர தீவிரவாதம் ஏன் உருவாகுது, அத ஒடுக்குறதுக்கு என்ன வழி , தீவிரவாதிகள் உருவாகாமல் இருக்குறதுக்கு நாம் என்ன செய்யனும் என்பதைப் பத்தி அரசு தரப்பிலேர்ந்து எந்த தீர்வும் வரலே. என்றைக்கு அரசு தரப்பிலேர்ந்து தீவிரவாதம் உருவாகாமல் இருக்குறதுக்கு இங்கு ஒரு சூழல் உருவாகுதோ அன்றைக்குத்தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும். ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லீமாக இருக்கவே மாட்டான். இந்த விசயம் தெரியாமத்தான் முஸ்லீமகளை தீவிரவாதி தீவிரவாதிண்டு முத்திரை குத்திக்கிட்டிருக்காங்க.

இஸ்லாம் எந்த இடத்திலேயும்….நபியோட காலத்தில நடந்த யுத்தம் அத்தனையும் defenceதான். அவங்க ஆக்கிரமிச்ச ஹிஸ்டரியே கிடையாது. அநியாயமா – ஒரு மாட்டைக்கூட அடிச்சிக் கொல்ல – இஸ்லாம் விரும்பலே. சாதாரணமா விளைஞ்சிருக்ககூடிய பயிரைக்கூட அழிக்க இஸ்லாம் விரும்பலே. இப்படிப்பட்ட இஸ்லாத்தை நம்பக்கூடிய மக்கள் பெயரிலே தீவிரவாத்தை சுமத்துறது அநியாயம். முஸ்லீம்கள்லே தீவிரவாதிகள் இருக்கலாம்; இல்லேண்டு சொல்லலே. ஏன் உருவாகுறாங்க? உருவாகக்கூடிய சூழல் என்ன அப்படிங்குறதும் இருக்கு. எத்தனையோ தீவிரவாதிகளை பிடிச்சிட்டுப் போயிருக்காங்க. தெளிவில்லாம விட்டும்தான் இருக்கான். அதனாலே தீவிரவாதத்துக்கும் இஸ்லாத்தும் எந்த விதமான் சம்பந்தமும் இல்லே. முஸ்லீம்கள் பெயரிலே உலகளாவிய தரத்திலே திட்டமிட்ட ஒரு பழிச்சுமத்தல் – முஸ்லீம் தீவிரவாதம் – என்பது. … இந்த உரையாடலுக்குத் தேவையான தூண்டலை மதப் புரோகிதர்கள் ஏற்படுத்திட்டான். புரோகிதத்தன்மை என்னைக்கு மதத்திலேர்ந்து நீங்குதோ அன்னைக்கித்தான் மனுசன் மனுசானவே மாறுவான். இந்தப் புரோகிதர்கள்தான் வெறியூட்டிவிடுறது. ஒரு யதார்த்த மதநம்பிக்கையாளன் இன்னொரு மத நம்பிக்கையாளனை வெறியூட்டவே மாட்டான். அதனாலே இந்த புரோகிதத்தன்மையை நாம ஒழிச்சாகனும். அது ஒழியாத காலம்வரை பிரச்சனை நீங்கவே நீங்காது. மனுசன் மனுசனா மாறனும். இன்றைக்கு வந்து..மதம் ஒரு அரசியலா மாறிட்டுது. மத அரசியல்னு அதுக்குப் பெயரு. இந்த மத அரசியலை வச்சித்தான் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கோட்பாடுகளை வச்சிக்கிட்டு அரசு நடத்திக்கிட்டுருக்கான். அதுக்கு சில வெறித்தனங்களை ஊட்டி இளைஞர்களை ஒருபக்கம் திருப்புறான். அங்கேதான் வகுப்புக் கலவரம் ஏற்படுது. அந்த கலவரத்துலெ எந்த பெரியவனா¡ச்சும் சாவுவானா? எந்த புரோகிதனாவாது சாவுவானா? (சாவுறதெல்லாம்) சாதாரண இளைஞர்கள்..ஒன்னும் தெரியாத இளைஞர்களை ஏன் வெறியூட்டி விடுறான்? அதனாலே அவனுங்களுக்கு கிடைக்கிற நன்மை என்ன? அஹ்மதாபாத்லெ குண்டு வச்சதுக்கும் பாம்பேயில குண்டு வச்சதுக்கும் நோக்கம்தான் என்ன? இப்ப டெல்லியிலே குண்டு வச்சான். அதுக்கு நோக்கம் என்ன? எதுக்காக குண்டு வச்சான்? யாருமே சொல்லலிலே…எவ்வளவு உயிர்கள் பலியாச்சுது. நோக்கம் என்ன, இந்த விஷயத்துக்காக குண்டு வச்சோம், எங்களுக்கு இன்னது கிடைக்கனும்..வெளிப்படையா சொல்லலியே..இதெல்லாம் என்னண்டா ஒரு மாதிரி வெறி. இளைஞர்களை வெறியூட்டுறது அதனாலே இன்னைக்கி நமக்கு தேவை , மதம்டா என்ன, மனிதனுக்கும் மதத்துக்கும் இடையேயான தொடர்புகள் என்ன, மதம் மனிதனுக்கு வெறியூட்டுதா, இல்லே,மதம் மனிதனை அரவணைக்குதா அதுதான் சொல்ல வேண்டிய விஷயம்.

உங்களுடைய அடுத்த கட்ட முயற்சிகள்..

ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் அந்த நாவல் வந்து noveletteஆக ஏற்கனவே மலையாளத்துலெ வெளிவந்தது. மாத்யமம் ஆண்டுமலர்லெ வெளிவந்தது. அதுல சில விஷயங்கள் சொல்லலே..சொல்லப்படாத விஷயங்களையெல்லாம் புதியதாகச் சொல்லி ஒரு பெரிய நாவலாட்டம் இப்ப வெளிவரப்போவுது. கூடிய சீக்கிரம் ஒரு மாசம் ரெண்டு மாசத்துலெ வெளிவரும். அதோட ஒரு சிறுகதைத் தொகுப்பும் வருது. மூணாவது..இன்னொரு நாவல் முயற்சியிலே இப்ப ஈடுபட்டிருக்கேன். இதுவரை எழுதினதுலே மிகப்பெரிய நல்ல நாவலாக அது வெளிவரும்டு நெனைக்கிறேன். இதுக்கெல்லாம் வாசகர்களோட ஒத்துழைப்புதான் முக்கியம்.

From: http://shuhaibmh.wordpress.com