Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 40,925 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமையல்:30 வகை சப்பாத்தி – 2

வேர்க்கடலை சப்பாத்தி

தேவையானவை: வேர்க்கடலை – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் – தலா 4, சிறிய மாங்காய் துண்டு – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

உருளைக்கிழங்கு சப்பாத்தி

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, துருவிய பனீர் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரெட் சப்பாத்தி

தேவையானவை: பழுத்த தக்காளி – 2, கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மிளகாயுடன் தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து, கோதுமை மாவை சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

பேபிகார்ன் சப்பாத்தி

தேவையானவை: துருவிய பேபிகார்ன் – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தால் சப்பாத்தி

தேவையானவை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் பருப்பை எடுத்து மசித்து… பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய் துருவல், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மக்காச்சோள சப்பாத்தி

தேவையானவை: மக்காச்சோள மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், சாட் மாசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மக்காச்சோள மாவுடன் கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

அரிசி சப்பாத்தி

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பிரெட் சப்பாத்தி

தேவையானவை: பிரெட் துண்டுகள் – 2, கோதுமை மாவு – ஒரு கப், துருவிய பனீர் – கால் கப், பால் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து… துருவிய பனீர், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஷவ்வரிசி சப்பாத்தி

தேவையானவை: மாவு ஜவ்வரிசி – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து, கோதுமை மாவு, வேர்க்கடலைப் பொடி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் துகள்கள், உப்பு, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரவை சப்பாத்தி

தேவையானவை: ரவை – அரை கப், கோதுமை மாவு – அரை கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு… இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சீரக சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பு சப்பாத்தி

தேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், துருவிய சௌசௌ – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, துருவிய சௌசௌ, தேங்காய், ஓமம், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சேமியா சப்பாத்தி

தேவையானவை: சேமியா – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

சாக்கோ சப்பாத்தி

தேவையானவை: பால் பவுடர் – கால் கப், சாக்கோ பவுடர், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாகக் கலந்து… முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: ஆப்பிள் – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிளை தோல் சீவி துருவி… உப்பு, நெய், மிளகுத்தூள், கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.