Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,339 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு

திருச்சியில், அமைச்சர் நேரு போட்டியிடும் மேற்கு தொகுதியில், அதிரடியாக செயல்பட்டு, பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தியதோடு, நேற்று முன்தினம், தனியாளாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5.11 கோடி ரூபாயை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததன் மூலம், “தேர்தல் நேரத்தில் முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த அதிகளவு பணத்தை பறிமுதல் செய்தவர்’ என்ற பெருமைக்கு, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா சொந்தக்காரர் ஆகிவிட்டார். நேற்று முன்தினம், அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த இடத்துக்கு டிரைவருடன் தனியாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். இதையறிந்த தமிழக தேர்தல் கமிஷனே, அதிர்ச்சி அடைந்தது. தமிழகத்தில், ஏன் இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய தொகையை தேர்தல் நேரத்தில், யாரும் பறிமுதல் செய்ததில்லை. அப்படியிருக்க ஆர்.டி.ஓ., சங்கீதா, ஆம்னி பஸ்சில், 5.11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்த விஷயம், நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இப்படி ஒரு சாதனைக்கு சொந்தக்காரரான திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதாவின் (33) சொந்த ஊர், சேலம் மாவட்டம், மேட்டூர். இவரது தந்தை சண்முகம், கால்நடைத் துறையில், துணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் ஜமுனா. இவருடைய தம்பி சுரேஷ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு, சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 2000மாவது ஆண்டு சென்னையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ்., படித்த சங்கீதா, சென்னையில் ஏழு ஆண்டு டாக்டராக பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில், 2004ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முரளி என்ற சிவில் கான்ட்ராக்டரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின், தன் சிறுவயது லட்சியமான கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக, சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றுள்ளார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. மீண்டும் 2009ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வெழுதி ஆர்.டி.ஓ.,வாக தேர்வானார். கடந்த 2009 டிசம்பரில் திருவாரூரில் பயிற்சி ஆர்.டி.ஓ.,வாக பணியில் சேர்ந்த சங்கீதா, அங்கிருந்து மாற்றலாகி, ஆறு மாதங்களுக்கு முன்தான் திருச்சி ஆர்.டி.ஓ.,வாக பதவியேற்றார்.

தேசிய அளவில் புகழ்பெறும் அளவு, சாதனை படைத்துள்ள ஆர்.டி.ஓ., சங்கீதா, நமது நிருபரிடம் கூறியதாவது: திருவாரூர் கலெக்டராக இருந்த சந்திரசேகரன் சாரை, என்னுடைய குரு என்றே கூறலாம். அவர்தான் என்னுடைய சிறப்பான பணிக்கு வழிகாட்டி. அவருடைய ஆலோசனைகள், என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்ய உதவியாக உள்ளது. 5.11 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது என்னுடைய பணிகளில் ஒன்று. என்னுடைய வேலையை செய்ததற்காக இவ்வளவு பாராட்டுகள் தேவையில்லை என நினைக்கிறேன். பணத்தை பறிமுதல் செய்தபோது, முதலில் அதை எப்படியாவது அரசிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டேன். அப்போது தனியாளாக இருக்கிறோம் என்ற பயஉணர்ச்சி எல்லாம் இல்லை. நான் எப்போதும், எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை. ஆகையால் தான் நள்ளிரவில் வந்த அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆம்னி பஸ்சை சோதனையிட்டேன்.

“மக்களுக்காக பணி செய்யவேண்டும்’ என்ற சிறுவயது முதலே நினைத்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட பணியில் உள்ளதால் மகிழ்ச்சியுடன் வேலை செய்து வருகிறேன். டாக்டர் தொழிலைவிட இதில் நேரடியாக மக்களுக்கு உதவ முடியும். நேர்மையான வழியில் பணியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், பணியாற்றி வருகிறேன். 5.11 கோடி பணம் பறிமுதல் செய்ததை விட, ஆழ்வார்தோப்பு பகுதியில் கவுன்சிலர் வீட்டில் சோதனையிடும்போது சுற்றி, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததையே, “த்ரில்லிங்’கான விஷயமாக கருதுகிறேன். மீண்டும் ஐ.ஏ.எஸ்., படிக்கும் எண்ணமில்லை. ஏனென்றால், தமிழகத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இந்த பணியே எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இவ்வாறு சங்கீதா கூறினார்.

தமிழகத்தில் முதன்முறையாக பெரிய அளவிலான தொகை, 5.11 கோடி பணத்தை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, நேற்று முன்தினம் இரவு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஓ., சங்கீதாவின் துணிச்சல் மிக்க பணியை பாராட்டி மத்திய அரசோ, இந்திய தேர்தல் கமிஷனோ விருது வழங்குகிறதோ இல்லையோ, அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதியில், தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி, சிறப்பாக பணியாற்றி வரும் சங்கீதாவுக்கு, திருச்சி மாநகர மக்கள், “தைரியலட்சுமி’ என்ற விருதை வழங்கிவிட்டனர்.

நன்றி: தினமலர்