Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,194 முறை படிக்கப்பட்டுள்ளது!

உறக்கமும் நினைவாற்றலும்

இரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருகிறான் மகன். “கொஞ்சநேரம் தூங்குப்பா! அப்புறம் படிக்கலாம்” என்று தாய் சொல்வது இயற்கை. தற்கால பாடத்திட்டத்தில் அதை மகன் மறுப்பதும் இயற்கைதான். ஆனால் தாயின் வேண்டுகோள் அறிவியல் பூர்வமாக உண்மையானதும் நேர்மையானதும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறக்கத்திற்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். உறக்கநிலையில் உள்ள மூளைசெல்களில் எவ்வாறு நினைவாற்றலை மேம்படுத்தும் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

அதாவது, உறக்கத்தின் விளைவாக செல்கள் அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதும் செல்களுக்கிடையேயான பிணைப்பு உறக்கத்தின்போது வலிமைபெறுகின்றன என்பதும்தான் இந்த புதிய கண்டுபிடிப்பு.

விழிப்புநிலையில் உள்ள மூளையும் உறக்கநிலையில் உள்ள மூளையும் அடிப்படையில் வேறுபட்டது என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃப்ராங்க். விலங்கினங்களில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதனின் நினைவாற்றல் தொடர்பான புதிர்களை அவிழ்ப்பதற்கும் பயன்படும் என்கிறார் பேராசிரியர் ஃப்ராங்க்.

விழிப்புநிலையில் இருக்கும் ஒரு விலங்கின் மூளை நியூரான்களில் உயிரி-இரசாயன மாற்றங்கள் நிகழ்வது இல்லை என்றும், உறக்க நிலைக்கு மாறிய விலங்கின் மூளையில் நினைவாற்றலை மேம்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது வியப்பிற்குரிய செய்தி என்கிறார் பேராசிரியர் ஃப்ராங்க்.

இதே பொருள் குறித்து சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் நுஸ்பாம் என்பவரும் ஆராய்ந்துள்ளார். பிரச்சினை சிக்கலானதாகவும் தீர்வுகாண இயலாததாகவும் இருக்கும்போது கொஞ்சநேரம் தூங்கி எழுந்தால்போதும். தீர்வு தெளிவாகிவிடும். இரவின் ஆழ்ந்த உறக்கம் நினைவாற்றலை தேக்கிவைக்கும் திறனை மேம்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் பகல்நேரத்தில் மறந்துபோன செய்திகளைக்கூட மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து விடுகிறது. உறக்கத்தின் மகிமை இதுதான். இதைத்தான் சிக்காகோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

பேராசிரியர் ஹோவர்ட் நுஸ்பாம் அவர்களின் உறக்கம், நினைவைத் தேக்கிவைத்தல் இவற்றிற்கிடையே உள்ள உறவை மெய்ப்பிக்கும் சோதனை படிக்கச் சுவையானவை.

ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்ட உரையின் தெளிவற்ற ஒலிமீட்பை மூன்று குழுக்களாக இருந்த கல்லூரி மாணவர்களை கேட்கச் செய்தார். முதல் குழு முதன்முறையாக அந்த உரையின் 21 சதவீத சொற்களை மட்டுமே புரிந்துகொண்டனர். ஒரு மணிநேர பயிற்சிக்குப் பிறகு அதே குழு 54 சதவீத சொற்களை புரிந்துகொண்டது. இது சாதாரணமாக கற்றல் போன்ற ஒரு நிகழ்வுதான்.

இரண்டாவது குழுவினரை காலை 9 மணிக்கு ஒரு முறையும், இரவு 9 மணிக்கு மற்றொருமுறையும் அந்த உரையை கேட்கச் செய்தார். இந்த மாணவர் குழு 31 சதவீத சொற்களை நினைவில் வைத்திருந்தனர். ஒர் இரவின் நிம்மதியான உறக்கத்திற்குப் பின்னர் இந்தக் குழுவின் சொற்களை நினைவில் வைத்திருக்கும் திறன் 40 சதவீதமாக உயர்ந்தது. மூன்றாவது மாணவர் குழுவிடம் மாலை 9 மணிக்கும், மீண்டும் உறக்கத்திற்குப் பிறகு காலையிலும் இதே சோதனை நடத்தப்பட்டது. சொற்களைத் தேக்கி வைக்கும் திறன் இந்தக்குழுவிடம் அதே 40 சதவீதமாக இருந்தது. உறக்கம் நமக்குத் தேவையில்லாத செய்திகளை அழித்து தேவையான செய்திகளை வலுப்படுத்தி நினைவலைகளாக மூளையில் பதியச் செய்கிறது.

நன்றி: அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி –  கீற்று.காம்