Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,555 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்!

சாதாரண ஓர் உணவகத் தொழிலாளி … ஆகாயத்தில் பறக்கிறார். அதுவும் தானே வடிவமைத்த கிளைடரில் 600 அடி உயரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபடுகிறார்.

ஆச்சரியமான விஷயம்தானே?

கோவை, சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாபுவை இங்குள்ளவர்கள் பாபு என்று அழைப்பதில்லை.

கிளைடர் பாபு என்றே அழைக்கிறார்கள். இந்த 38 வயது இளைஞரின் பத்துக்குப் பத்து அறையில் அவர் படுப்பதற்குப் பாய்கூட இல்லை. ஆனாலும், அறை முழுவதும் நிறைந்திருக்கின்றன விமான தொழில் நுட்பம் தொடர்பான புத்தகங்கள், அவரே உருவாக்கிய கிளைடர்கள், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் குட்டி விமானங்கள், கிளைடர் தயாரிக்க தேவையான உதிரி பாகங்கள் என இறைந்து கிடக்கின்றன

அவருடைய விமானக் கனவுகள்.

இனி கிளைடர் பாபு…

கிளைடரில் பறக்கும் ஆர்வம் வந்தது எப்படி?

25 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் துண்டுபிரசுரங்களை விநியோகிக்க குட்டி விமானங்களைப் பயன்படுத்துவது வழக்கம். அப்படிதான் ஒரு நாள் ஒரு குட்டி விமானத்தைப் பார்த்தேன். ஒரு விமான ஓட்டியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது அப்போதுதான். அப்போது நான் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

முதல் கிளைடர் தயாரித்தது எப்போது?

வறுமை காரணமாக பிளஸ் ஒன்னோடு படிப்பை நிறுத்த வேண்டியாகிவிட்டது. ஹோட்டலில் சர்வராக சேர்ந்தேன். ஆனால், பைலட் ஆகும் கனவு மட்டும் விட்டபாடில்லை. என்னுடைய இந்தக் கனவுக்கு கிளைடர் ஒரு நல்ல வடிகாலானது. ஒரு வழியாக கிளைடரைத் தயாரித்த பின் யாருக்கும் தெரியாமல் மருதமலைக்குச் சென்று பறக்க முயற்சித்தேன். முறைப்படி தயாரிக்கப்படாத என்னுடைய முதல் கிளைடர் என் கால்களை  முறித்து என்னை 6 மாத காலம் அரசு மருத்துவமனைக்குள் தள்ளியது.

ஆனால், பறக்கும் ஆசை விடவில்லை. ஆங்கிலம் கற்றேன். பின்னர் தில்லிக்குச் சென்று விமானப் பொறியியல் தொடர்பான புத்தகங்களை வாங்கி வந்தேன். இன்னொரு கிளைடரை உருவாக்கினேன். இப்படியாக என்னுடைய 18வது வயதில் நான் உருவாக்கிய இரண்டாவது கிளைடர் என்னை மருதமலைக்கு மேல் பறக்கவைத்தது.

இதுவரை எந்தெந்த மலைத்தொடர்களில் பறந்து

சாகசம் செய்துள்ளீர்கள்?

கன்னியாகுமரி, வாகவன் (கேரளம்), மேற்குத் தொடர்ச்சி மலை, கர்நாடகம், குலுமனாலி, பூனா உள்ளிட்ட இடங்களில் உள்ள மலைத் தொடர்களில் சாகசம் செய்துள்ளேன். எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு போன்ற சமூக விழிப்புணர்வு நோக்கங்களுக்காக  சாகசங்களில் ஈடுபடுகிறேன்.

கிளைடரில் எத்தனை விதங்கள் உள்ளன?

ஹேங்கிங் கிளைடர், பவர் கிளைடர் என இரு வகைகள் உள்ளன. இரண்டுமே காற்றின் போக்கைக் கொண்டே பறக்கக் கூடியவை. ஹேங்கிங் கிளைடரில் பறப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைவு. விமானப் படையில்கூட ஹேங்கிங் கிளைடர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். முறையான பயிற்சியாளர்கள் இல்லை என்பதே இதற்கு காரணம். பவர் கிளைடரில் பறப்பது எளிது.

இடதுபுறம், வலதுபுறம் திரும்ப ஸ்டியரீங் போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், பறவை எப்படி பறக்கிறதோ அதுபோல ஹேங்கிங் கிளைடரில் பறக்க வேண்டும். எந்தத் திசைக்கு திரும்ப வேண்டும் என்றாலும் நமது உடல் அசைவைதான் பயன்படுத்த வேண்டும். கரணம் தப்பினால் மரணம் போன்றது ஹேங்கிங் கிளைடர்.

ஹேங்கிங் கிளைடரில் பறக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

பந்தாவுக்காக பறக்கக் கூடாது. இயற்கையை நேசிப்பவர்களால் காதலிபவர்களால் மட்டுமே பறக்க முடியும். பறவைகள் எப்படி பறக்கின்றன என்பதை தினமும் கூர்மையாக கவனிப்பது அவசியம். தட்பவெப்ப நிலை எப்படி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். காற்றின் வேகத்தை அனுமானிக்க வேண்டும்.

கிளைடரில் பறந்து அண்மையில் செய்த சாகசம் பற்றி..?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் உள்ள மலைத் தொடரில் 600 அடி உயரம் பறந்து சாகசம் செய்தேன். அடுத்து கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைச் சுற்றி பறந்து சாகசம் செய்ய முடிவு செய்துள்ளேன். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை சுற்றி கிளைடரில் பறக்க பலர் முயற்சி செய்துள்ளனர். ஆனால், முடியவில்லை. ஒரு தமிழனாய் பிறந்த நான் திருவள்ளுவர் சிலையைச் சுற்றி பறந்துவிட்டால் அது உலக அதிசயம்தான்.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பிரபலப்படுத்தவும் சாகசத்தில் ஈடுபட்டுவருகிறேன்.

ஹோட்டல் தொழிலாளியாக இருந்துகொண்டு இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

இவையெல்லாம் உங்களுக்கு சாதனைகளாகத் தெரியலாம். ஆனால், என்னுடைய முயற்சிகளுக்குப் பின் ஏராளமான இழப்புகளைச் சந்தித்திருக்கிறேன். அம்மா, நான்கு சகோதரிகள் என என் குடும்பத்தினரின் ஆதரவை இழந்திருக்கிறேன். என்னுடைய தீவிர கிளைடர் ஆர்வமே காரணம். தவிர, ஒரு தொழிலாளியாக எனக்கு கிடைக்கும் குறைவான வருவாயை வைத்துக்கொண்டு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது பெரும் சிரமத்தையே அளிக்கிறது. ஆனாலும், என்னால் என் கனவுகளைக் கைவிட முடியவில்லை.

எனக்கு இன்னோர் ஆசை உண்டு. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கிளைடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே அது. என்னுடைய வருவாயைக் கொண்டு இது சாத்தியமில்லை. ஆனால், அரசு உதவ முன்வந்தால், நிச்சயம் இந்த ஆசையையும் நிறைவேற்றிவிடுவேன்.

நன்றி: தினமணி