Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஐநாவும் என்னை அழைக்கும்…

Tamil_News_large_855574அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்

பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை

இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.

ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999. (சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)

நன்றி – எல்.முருகராஜ் – தினமலர்