புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.
தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான சேர்மானப் பொருளாக உள்ளது.
புதினா இலையில் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நிறைய உள்ளன. எனவே புதினா எண்ணெய், உணவுப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சேர்க்கப்படுகிறது.தலைவலி களிம்புகள், கிரீம்கள், இன்ஹேலர்கள் போன்றவற்றில் புதினா பிரதானப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. உலக அளவில் சர்வதேசச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
உயர்ந்த விலையும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்குத் தேவையான புதினா பயிரிடப்படுகிறது. புதினாவை வணிக நோக்கில் பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். மிதவெப்பப் பகுதிகளில், வடிகால் வசதியுள்ள இருபொறைமண், காரத்தன்மை கொண்ட, அங்ககச் சத்து நிறைந்த நிலங்களில் புதினா நன்கு வளரும். வேர்விட்ட தண்டுக் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நிலத்தை நன்கு பண்படுத்தி ஹெக்டேருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் அளித்தால் போதுமானது.
புதினாச் செடிகள் பெரும்பாலும், பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. அவ்வப்போது சாதாரணமாக களை எடுத்தால் போதுமானது. ஜூன், ஜூலை மாதங்கள் நடவுக்கு ஏற்ற காலம்.உணவுக்கான புதினா நடவு செய்த 5-வது மாதத்தில் இருந்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒருமுறை நட்ட செடிகள் 4 ஆண்டுகள் வரை பலன் தரும்.
ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கிலோ இலைகள் கிடைக்கும். எண்ணெய் தயாரிப்புக்கான புதினாவில் இருந்து, ஆவி வடித்தல் முறையில், 150 முதல் 250 கிலோ வரை எண்ணெய் தயாரிக்கலாம்.கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொர்ணாவூரில் தனியார் நிறுவன உதவியுடன், எண்ணெய்க்கான புதினா, வணிக ரீதியில் பயிரிடப்பட்டு உள்ளது. புதினா எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் அந்த நிறுவனம் அமைத்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “எண்ணெய்க்கான புதினா லாபகரமான விவசாயமாக இருக்கும். இந்தியாவில் இருந்து பெருமளவில் புதினா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதினா எண்ணெய் சர்வதேச சந்தையில் கிலோ ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் புதினா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் உள்ளன.எண்ணெய்க்கான புதினா 90 நாள்களில் அறுடைக்கு வரும். வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடுபயிராவும் புதினா பயிரிடலாம்.90 நாள்களில் ஒரு ஹெக்டேரில் ரூ. 30 ஆயிரம் லாபம் கிடைக்கும். நாங்கள் புதினா எண்ணெய்யை சேகரித்து அதில் இருந்து 2 பொருள்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
நன்றி: தினமணி