இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைவரும், மீண்டும் வகுப்பறைக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதிமுறையை கட்டாயமாக்கவும் இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தங்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக மருத்துவக் கல்வியை தொடர்வது (கன்டின்யூவிங் மெடிக்கல் எஜுகேஷன்) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, மருத்துவக் கல்வியை தொடரும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு மருத்துவரும் 30 மணி நேரம் மருத்துவக் கல்வியை பயில வேண்டும், எவர் ஒருவர் இதனை மீறினாலும், அவரது மருத்துவ பதிவு ரத்து செய்யப்படும்.
முதுநிலை எனப்படும் டிப்ளமோ, எம்.டி., எம்.எஸ்., டி.என்.பி., டி.எம்., போன்ற படிப்புகளை பயிலும் மருத்துவர்களுக்கு அவர்கள் பயிலும் காலத்திலேயே ஒரு ஆண்டுக்கு 4 வைப்பு நேரம் (கிரடிட் ஹவர்ஸ்) கிடைக்கும்.
மேலும், மருத்துவர்கள் தங்களது ஒருங்கிணைப்பை மருத்துவமனைக்கோ, தங்களது துறைக்கோ செலுத்தும் விதத்திற்கும், செய்தியாளர் கூட்டங்கள், கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காகவும் கூடுதல் வைப்பு நேரங்களைப் பெறலாம்.
இந்திய மருத்துவக் கழகத்தின் புதிய விதிமுறைகளின்படி, எந்த மருத்துவக் கழகமோ அல்லது அமைப்போ, மருத்துவர்கள் பாட வகுப்பிற்கு வந்ததாக போலி சான்றிதழ்கள் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
சர்வதேச அளவில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவும் மருத்துவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டதற்கு உரிய அத்தாட்சியை காண்பித்தால் மட்டுமே கூடுதல் வைப்பு நேரம் வழங்கப்படும்.
அதே சமயம், மருந்து மற்றும் மருத்துவக் கருவி நிறுவனங்கள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தும் கருத்தரங்குகளிலோ, தனியார் நர்சிங் ஹோம்கள் தங்களது விளம்பரத்திற்காக நடத்தும் கருத்தரங்குகளில் பங்கேற்பதையோ கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இந்திய மருத்துவக் கழகம் கூறியுள்ளது.
நன்றி: தினமணி