Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,970 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?

ஒரு ஞானியிடம் அவருடைய சீடர் கேட்டார். “குருவே மனிதனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?”

“பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் இல்லை”

சீடருக்கோ திகைப்பு. சிலர் கேள்விகள் கேட்கும் போது சொல்லப்படும் பதிலுக்குத் தயாராக இருக்க மாட்டார்கள். அந்த சீடரும் அப்படித்தான். வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது என்று அவர் சொன்னால் அந்த அர்த்தம் என்ன என்று கேட்டு தத்துவார்த்தமான சொற்பொழிவை குருவிடமிருந்து கேட்டு மகிழலாம் என்றால் என்ன இவர் இப்படிச் சொல்லி ஒரேயடியாக முடித்து விட்டாரே என்று ஏமாற்றமடைந்தார்.

அவருடைய ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஞானி புன்னகையுடன் சொன்னார். “பெரும்பாலான மனிதர்கள் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தாலும், வாழாமல் இருந்திருந்தாலும் உலகத்தில் எந்த உண்மையான மாற்றமும் நேர்ந்து விட்டிருக்காது. எனவே தான் பொதுவாக இல்லை என்றேன்.”

சீடர் கேட்டார். “அப்படியானால் வாழ்வது வீண் தானா?”

ஞானி சொன்னார். “வாழ்க்கை வீணாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுமானால் மனிதன் தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அவனுக்கு அந்த உரிமையும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிறது”

அந்த ஞானி சொன்னதில் பேருண்மை பொதிந்து இருக்கிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதும், அர்த்தமில்லாததும் அவரவர் கையில். வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது என்று நம்பி அதை உபயோகமாகக் கழிக்கலாம். அர்த்தம் உள்ளதா என்பதை சிந்திக்காமலேயே வாழ்க்கையை வீணாக்கியும் மாளலாம்.

சரித்திரம் படைத்த அத்தனை பேரும் தாங்கள் ஒரு அர்த்தத்தோடு படைக்கப்பட்டு இருப்பதாக நம்பினவர்கள். அதனால் தான் அவர்களால் தங்களது நிரந்தரமான சுவடுகளை உலகில் விட்டு விட்டுப் போக முடிந்தது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சனை அப்படிப்பட்டவர்களில் ஒருவராகச் சொல்லலாம். அவரிடம் அரசியலில் பெரிதாக விசேஷத் திறமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் அவர் தன்னை இறைவன் ஒரு அர்த்தத்துடன் படைத்திருப்பதாகவும், விதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனாகவும் (Man of Destiny) உறுதியாக எண்ணியதாகக் கூறினார்கள். உடல் நலக்குறைவு அவரை சிறு வயதில் இருந்தே ஆட்டிப்படைத்தது என்றாலும் அதையும் மீறி அவர் நிறைய சாதிக்கவும், சரித்திரம் படைக்கவும் அவருடைய அந்த எண்ணமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதிகளில் Ph.d பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. முதல் உலகப் போர் சமயத்தில் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காக சமாதான நோபல் பரிசையும் பெற்றார்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தில் ஒரு அங்கமாக ஆகி விடாமல் தனித்து நின்று நல்ல மகத்தான மாற்றங்களை தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் கொண்டு வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைத் தேடி உருவாக்கியவர்கள் தான். பாரதி பாடியது போல

தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி
துன்பம் மிக உழன்று பிறர் வாட
பல செயல்கள் செய்து நரைகூடி
கிழப் பருவம் எய்தி –கொடும் கூற்றுக்கு
இரையென மாயும் பல வேடிக்கை
மனிதரை போல

அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ மறுத்தவர்கள். அப்படி வாழ்வதை ஒரு கொடுமையாக நினைத்தவர்கள். அதனாலேயே அவர்கள் தங்களுக்கென்று சில உயர் லட்சியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்களுக்குள்ளே ஒரு அக்னியை விதைத்துக் கொண்டவர்கள் அவர்கள். விளைவாக ஒளிமயமாக வாழ்ந்து வென்றவர்கள் அவர்கள்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அவருடைய இளமைக்காலத்தில் அவர் பெரிய தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவில்லை என்பதை அறிவார்கள். வக்கீலுக்குப் படித்து விட்டு முதல் முதலில் வாதாடப் போன போது திக்கு முக்காடிப் போனார். அப்படிப் பட்டவர் வாழ்க்கையின் பின்பகுதியில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே ஆன்ம வலிமையுடன் எதிர்த்து வெற்றியும் பெற்றார். மௌண்ட் பேட்டன் பிரபு அவரை ’ஒரு தனி மனித ராணுவம்’ என்று பாராட்டினார். அவர் பின் ஒரு தேசமே திரண்டு நின்றது. இதெல்லாம் அவர் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உருவாக்கிக் கொண்ட பிறகு சாத்தியமானவை தான். சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த அபார நம்பிக்கையும், நாட்டு சுதந்திரம் என்ற லட்சியமும் அவரைப் பலவீனமான மனிதர் என்ற நிலையிலிருந்து மாபெரும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பெருமை வரை உயர்த்தி விட்டிருக்கின்றன.

நான் பலவீனமானவன், பலவீனமானவள், எனக்கு என்று எந்தச் சிறப்புத் தகுதியும் இல்லை, என்றெல்லாம் சொல்லாதீர்கள். கண் முன்னே வரலாறாக இருக்கும் மகாத்மா காந்தியின் உதாரணத்தை மறந்து விடாதீர்கள். ஏதாவது நல்ல லட்சிய அக்னியால் தீண்டப் பெறுங்கள். அந்த லட்சிய அக்னி உங்கள் பலவீனங்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். உங்களுக்கு அந்த லட்சியம் அசுர பலத்தைத் தரும். கண்டிப்பாக வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்.

மனிதர்கள் வெள்ளைத் தாளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசி வரை வெள்ளைத் தாளாகவே அவர்கள் வாழ்ந்து முடித்து விடலாம். அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம். அதை குப்பையாக கசக்கியும் எறியலாம். அதில் கவிதையையும், காவியத்தையும் பதித்து வைக்கலாம். அர்த்தமுள்ள ஆயிரம் விஷயங்களை எழுதி வைக்கலாம்.

கடைசியில் குப்பைக்கூடைக்குப் போகிறதா, பத்திரமாக பலருக்கும் பயன்படும் வகையில் சேகரித்து வைக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது.

உங்கள் வாழ்க்கைத் தாளில் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதில் அர்த்தம் இருக்கிறதா? இன்று எழுதுவதற்கெல்லாம் நாளை நீங்கள் வருந்த வேண்டி இருக்குமா? இந்தத் தாளை மேலும் உயர்ந்த விஷயங்களால் நிரப்பி இருக்கலாமே என்று எதிர்காலத்தில் சுய பச்சாதாபம் அடைய வேண்டி வருமா? சிந்தியுங்கள். இப்படி எல்லாம் ஆழமாக சிந்தித்து அது செயல்களாகவும் பரிணமித்தால் அது இனி தொடரும் வாழ்க்கையைக் கண்டிப்பாக நெறிப்படுத்துவதுடன் அர்த்தப்படுத்தும்.

லட்சியம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் எனக்குப் பொருந்தாது, எனக்கு அதில் பெரிய ஈடுபாடும் இல்லை என்று இன்னமும் நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. மிகப்பிரபலமாகி பெரிய சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்க்கை தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொல்ல முடியாது. மற்றவர்கள் வாழ்க்கையை ஏதேனும் ஒரு வகையில் சுலபப்படுத்தியிருந்தால், அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதாவது விதத்தில் பயன்பட்டிருந்தால் அதுவும் அர்த்தமுள்ள வாழ்க்கையே. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றால் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும் சொல்ல முடியாது. நேசித்தும் நேசிக்கப்பட்டும் மற்றவர் மனதில் உறுதியான இடத்தை நிரந்தரமாகப் பிடித்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையும் அர்த்தமுள்ளதே. எனவே வாழ்க்கையில் அதிகம் நேசியுங்கள். அன்பாக இருங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருந்தால் உங்கள் வார்த்தைகளாலும், செய்கைகளாலும் எத்தனையோ பேர் பலன் பெறுவார்கள். எத்தனையோ பேருடைய பாரங்களை நீங்கள் இலகுவாக்குவீர்கள். பலரையும் பிரமிக்க வைக்கும் காவியமாக இல்லா விட்டாலும் சிலரை சிலிர்க்க வைக்கும் ஒரு அழகான கவிதையாய் நீங்கள் கண்டிப்பாக வாழ்ந்து மடியலாம்.

நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கிறேன் என்ற நிறைவுடன் உலகை விட்டு ஒரு நாள் பிரியலாம்.

நன்றி: என்.கணேசன்